எதிர்வரும் அவர்களை எமைஉடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை ? இடர் இலை? இனிது நும் மனையும்
மதி தரும் குமரரும் வலியர் கொல் எனவே ( 314) (கம்ப ராமாயணம்)
வசிட்டரிடம் பாடம் பயின்று விட்டு அரண்மனை திரும்பும் போதெல்லாம் மக்களிடம் முகமலர்ச்சியுடன் இராமன், ‘’நான் தங்களுக்கு ஏதும் செய்ய வேண்டுமா? உங்களுக்கு ஏதேனும் துயரங்கள் உள்ளனவா? வீட்டில் மனைவி நலமாக இருக்கிறார்களா? மைந்தர்கள் நலம் தானே?’’ என வினவுகிறார்.
இப்பாடலில் ஓர் அவதானம் உள்ளது. அரசன் என்பவன் ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தலைவன். அவன் ஆயிரக்கணக்கானோருக்குத் தலைமை ஏற்பதாலேயே குறியீட்டு ரீதியில் குடை, செங்கோல் மற்றும் கிரீடம் ஆகியவற்றைச் சுமக்கிறான். எனினும் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் அரசனால் தீர்த்துவிட முடியாது. எந்த அரசனாலும். தன்னை அணுகுபவர்கள் கேட்பதை எல்லாம் செய்து விட முடியாது. வழங்கி விட முடியாது. இது அரசாட்சியின் எல்லை. அரசர்களின் எல்லை.
எனவே அரசனை அணுகும் எங்காவது தற்செயலாக சந்திக்க நேரும் எளிய மக்கள் அரச குழாமின் அமைப்பைக் கண்டு திகைத்திருப்பர். நியாயமாக ஏதேனும் கேட்க இருந்தால் கூட சொல்லெடுக்க முடியாமல் திணறிடுவர்.
இராமன் நல்லரசன். மக்களைக் கண்டதும் அவனே நான் ஏதும் தங்களுக்கு செய்ய வேண்டுமா என்று கேட்கிறான். அதுவே அவர்களுக்கு அவன் மேல் நம்பிக்கையூட்டும். நீங்கள் சொல்ல நினைக்கும் துயரங்கள் ஏதும் உண்டா என்கிறான். தங்கள் துயரைக் கேட்பதாலேயே அவர்கள் மனபாரம் குறையும். மக்களிடம் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரிக்கிறான் இராமன். பிரஜைகளுக்கு தங்களை நினைவில் வைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தரும். தங்கள் குடும்பத்தினரிடம் சென்று அரசன் உங்களை விசாரித்தான் எனக் கூறும் போது குடும்பமே மகிழும். தன் குடிகளின் உளம் அறிந்தவனாகவும் அவர்கள் மேல் கருணை கொண்டவனாகவும் இருக்கிறான் இராமன்.