Friday, 26 January 2024

ஒருமைப்பாடு

 என்னுடைய மோட்டார்சைக்கிள் பயணத்தில் வட இந்தியாவில் - குறிப்பாக ராஜஸ்தானில் - பல தமிழகத் தொழிலாளர்களைச் சந்தித்திருக்கிறேன். தொழிலாளர்கள் என்றும் சொல்லலாம். சிறு தொழில்முனைவோர் என்றும் சொல்லலாம். அதிகமும் நாமக்கல் சேலம் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது அவர்களின் பணி. அதற்கான பெரிய அளவிலான லாரிகள் அவர்களிடம் இருக்கும். ஒரு லாரியில் ஆறிலிருந்து எட்டு பேர் இருப்பார்கள். அந்த லாரியின் அடியில் படுத்து உறங்குவார்கள். அருகில் இருக்கும் மரத்தடியில் சமைத்து உண்பார்கள். காலை 6 மணி அளவில் வேலையைத் தொடங்கி விட்டு ஐந்து மணி நேரம் வேலை செய்து விட்டு காலை 11 மணிக்கு உணவு உண்பார்கள். பின்னர் மதியம் 3 மணி வரை வேலை. முப்பது நிமிடம் ஓய்வெடுத்து விட்டு 3.30க்கு பணி தொடங்கினால் சூரியன் அஸ்தமனம் ஆகும் மாலை 6.30 வரை பணி. அதன் பின் குளியல். இரவு 8 மணிக்கு இரவு உணவு. அங்கெல்லாம் 1000 அடி 1500 அடி ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு 150 அடி ஆழம் சென்றால் கூட ஒரு வேலையை முடிக்க 10 நாள் ஆகும். உடன் அடுத்தடுத்த ஊர்களில் வேலை இருக்கும். 8 பேர் கொண்ட ஒரு குழு நான்கு மாதம் வேலை செய்திருக்கிறது என்றால் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மேலும் 8 பேர் நாமக்கல்லில் இருந்து ராஜஸ்தானுக்கு வந்து சேர்வர். ராஜஸ்தானில் இருந்த குழு ஒரு மாதம் நாமக்கல் வந்து தங்கள் குடும்பத்தினருடன் இருந்து விட்டு மீண்டும் ராஜஸ்தான் சென்று விடுவர். இத்தகைய குழுக்கள் பலவற்றை ராஜஸ்தானிலும் மகாராஷ்டிராவிலும் சந்தித்திருக்கிறேன். அனேகமாக அவர்கள் உணவு உண்ணும் நேரமான காலை 11 மணி அளவில் அவர்களைக் காண்பேன். சேர்ந்து உணவு உண்ண அழைப்பார்கள். 

சொந்த ஊரில் வேலை செய்வதை விட நாட்டின் தொலைவான பகுதிகளில் வேலை செய்வது லாபகரமானது என்று சொல்வார்கள். முதல் விஷயம் செய்வதற்கு நிறைய வேலை இருந்து கொண்டே இருக்கும். இரண்டாம் விஷயம் ஊரில் வேலை நேரம் என்பது காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. எட்டு மணி நேரம் மட்டுமே. ஆனால் வெளியே 12 மணி நேரம் பணி. அதற்கான கூடுதல் ஊதியம் தினமும் கிடைக்கும். ஊரில் இருந்தால் உறவினர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும். வெளியூரில் அந்த கட்டாயம் இல்லை. ஏன் இவ்வளவு தொலைவில் வந்து பணி புரிகிறோம் என்பதற்கு பல காரணங்கள் கூறுவார்கள். 

நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. முதல் முறையாக என்னுடைய கட்டுமானப் பணியில் வட இந்தியத் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். கட்டிடத்துக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.