கராக்ரே வஸதே லக்ஷ்மி
கர மத்யே சரஸ்வதி
கர மூலே து கோவிந்த:
பிரபாதே கர தரிசனம்
என ஒரு சுலோகம் உண்டு.
’’கைகளின் நுனியில் திருமகள் வசிக்கிறாள் ; கைகளின் மையப் பகுதியில் கலைவாணி வாசம் புரிகிறாள். கைகளின் மூலையில் கோவிந்தன் இருக்கிறான். காலை கண் விழித்ததும் கைகளை வணங்க வேண்டும்’’ என்பது அதன் பொருள்.
ஆடிப் பட்டம் , தை பட்டம் என விதைகளை விதைக்க இரண்டு பட்டங்கள். நாட்டுக் காய்கறிகள் 90 நாளிலிருந்து 120 நாட்களுக்குள் அறுவடைக்கு வருபவை. தை பட்டத்தில் விதைத்தால் சித்திரை மாதத்தில் அறுவடை செய்யலாம். சித்திரைப் புத்தாண்டை வரவேற்க தை பட்டத்தில் காய்கறி விதைகளை விதைப்பதை மரபாகக் கொண்டது நம் நிலம். சித்திரை என்பது வசந்த காலம். பூக்கள் பூத்துக் குலுங்குவது அக்காலத்தில் தான். தென்றல் காற்று வீசுவதும் அப்போதுதான். தென்றல் வீசும் பூக்கள் பூக்கும் காலத்தையே ஆண்டின் தொடக்கம் எனக் கொண்டது நம் தேசம்.
ஆடிப் பட்டம் மழைக்காலம் என்பதால் நாம் விதைக்கும் காய்கறிகள் மழையின் துணையால் மழைநீரின் ஊட்டத்தால் விரைவான வளர்ச்சி அடையும். தை பட்டத்தில் நம் கவனம் விதைகளுக்கு சற்று கூடுதலாகத் தேவை.
இந்த ஆண்டு ஜனவரி துவங்கிய போது கிராமத்துக்கு செய்யும் நற்செயலுடன் ஆண்டின் துவக்கம் அமைய வேண்டும் என விரும்பினேன். நாட்டுக் காய்கறி விதைகளை கிராமத்தின் எல்லா குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என விழைந்தேன். சென்னையில் உள்ள எனது நண்பர் கதிரவன் மிகுந்த முனைப்புடன் பூசணி, சுரை, பீர்க்கன் ஆகிய நாட்டுக் காய்கறி விதைகளை ஒவ்வொன்றிலும் 250கிராம் வீதம் தருவித்துக் கொடுத்தார். அதற்காக பெருமுயற்சி செய்தார். அவருக்கு நன்றி. ஒரு சில தினங்களுக்கு முன்பு விதைகள் வந்து சேர்ந்தன. அவற்றை 400க்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கான வழிமுறை என்ன என யோசித்துக் கொண்டிருந்தேன்.
இந்த முறையுடன் சேர்த்து நாம் மூன்று முறை விதைகள் வழங்கியிருக்கிறோம். முதல் முறை விதைகளை ஒரு தாம்பாலத்தில் 6 தம்ளர்களில் எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று அந்த தம்ளரில் இருந்து விதைகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறினேன். திருமண மண்டபங்களில் ஒரு தாம்பாலத்தில் சந்தனம், ஜீனி, குங்குமம் ஆகியவை அளிக்கும் விதத்திலிருந்து அந்த எண்ணத்தை உருவாக்கினேன். 50 வீடுகளுக்குக் கொடுக்க ஒரு நாள் ஆனது. அதிலும் டம்ளர் நிரம்பியிருக்கும் போது அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொள்வது எளிதானது. பாதி காலியாகி விட்டால் அதனுள் கையை விட்டு எடுப்பது சற்று சிரமம். எனவே அடுத்த நாள் விதைகளை ஒரு காகிதப் பொட்டலத்தில் கட்டி ஒவ்வொரு வீட்டிலும் அளித்தேன். எனினும் இந்த பொட்டலம் கட்டுவது ஒரு பெரிய வேலை. இன்னும் எளிதான வழி இருக்குமா என யோசித்துக் கொண்டிருந்தேன்.
இம்முறை ஓர் எளிய வழியைக் கண்டடைந்தேன். அதாவது, கடையில் ஃபார்மஸியில் மாத்திரைகளைப் போட்டுத் தரும் மருந்து கடை கவர் வாங்கிக் கொண்டேன். நூறு கவரின் விலை ரூ.9. ஒரு கவரின் விலை ஒன்பது பைசா என வருகிறது. ரூ.36 கொடுத்து 400 கவர் வாங்கிக் கொண்டேன்.
இன்று அந்த கவர் ஒவ்வொன்றிலும் பூசணி, பீர்க்கன், சுரை விதைகளை கொஞ்சம் கொஞ்சம் நிரப்பினேன். நூறு கவர்களை நிரப்ப ஒரு மணி நேரம் ஆனது. தை மாதம் பிறந்து மூன்று நாள் ஆகியிருந்தது. தை மாதத்தின் முதல் மூன்று நாளுமே பண்டிகைகள். நான்காவது நாளான இன்று தான் மக்கள் தங்கள் வழமைகளுக்குத் திரும்பியிருப்பார்கள். ஐந்தாவது நாளான நாளையும் ஆறாவது நாளான நாளை மறுநாளும் விதைகளை அளிக்க உகந்த தினங்களாக இருக்கும். ஒவ்வொரு வீடாக 400 வீடுகளுக்கும் செல்ல வேண்டும்.
விதைப்பது, நீர் பாய்ச்சுவது, களையெடுப்பது, கவாத்து செய்வது, இயந்திரங்களை இயக்குவது என அனைத்துமே கரங்களால் நிகழ்த்தப்படுபவை என விதைகளை கவரில் நிரப்பும் போது மனதில் எண்ணம் தோன்றியது. உணவைப் பெருக்குதல் என்பது கரசேவையே.