Thursday 15 February 2024

Half Lion : நரசிம்ம ராவ் ( மறு பிரசுரம்)





சில நாட்களுக்கு முன், நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். இந்தியப் பிரதமர் சர்தார் படேலின் சிலையை திறந்து வைத்து ஓரிரு நாட்கள் ஆகியிருந்தது. ஏன் இத்தனை செலவில் ஒருவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கொந்தளித்தார். இது அரசியல் என்றார். வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார். ஒரு தேசத்தலைவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. உலகின் உயரமான சிலை இந்தியாவில் அமைவது மகிழக் கூடிய விஷயம் தானே என்றேன். படேல் ஒரு மதவாதி என்றார். வல்லபாய் படேலை ‘’சர்தார்’’ என அழைத்தவர் மகாத்மா காந்தி; வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குகா ‘’இந்தியா ஆஃப்டர் காந்தி’’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் இந்திய சமஸ்தானங்களை இந்திய அரசுடன் இணைத்த பணியை படேலும் அவரது செயலாளருமான வி.பி. மேனனும் எவ்விதம் திறம்பட ஆற்றினர் என்ற விபரத்தை பக்கம் பக்கமாக எழுதியுள்ளார். ஆர்வமிருந்தால் வாசித்துப் பாருங்கள் என்றேன். சற்று அமைதியானார். நான் சில விஷயங்களை அவரிடம் சொல்லி யோசித்துப் பார்க்குமாறு கூறினேன்.

நாடு என்பது மிகப் பெரியது. கோடானுகோடி மக்களின் லௌகிக வாழ்வுக்கான பொதுத்தளமாக இருப்பது. பற்பல மனிதர்களின் வெவ்வேறு விருப்பங்களும் தேர்வுகளும் ஒன்றோடொன்று குறுக்கிடுவது. மானுடம் பல போர்கள் வழியாக பல அரசு முறைகள் வழியாக இப்போது ஜனநாயக யுகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இந்த ஜனநாயக யுகத்தில் எந்த நாட்டின் குடிமக்களுக்கும் சில கடமைகள் உண்டு. அக்கடமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் போனால் வன்முறை பெருக்கெடுத்து இரத்தக் களரி ஆகும். இந்திய ஜனநாயகத்தில் இந்திய சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் தொகை இன்னும் தனது சமூகக் கடமைகளை உணரும் பிரக்ஞையுடன் செயலாற்றும் ஆர்வத்துடன் இருப்பதில்லை. அதற்கு பல காரணங்கள். கடந்த இருநூறு ஆண்டுகளில், பிரிட்டிஷ் ஆட்சியில்  ஏற்படுத்தப்பட்ட செயற்கை  பஞ்சங்கள் இந்திய சமூகங்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தின. ஆயிரமாயிரமாக செத்து மடிந்த மக்கள் திரள் இந்தியர்களிடம் ஏற்படுத்திய பீதி தலைமுறைகளாகத் தொடர்கிறது. மகாத்மா இந்திய மக்களை ஒருங்கிணைத்தார். அவர்களுக்கு கடமைகளையும் பொறுப்புகளையும் அளிக்கும் கல்வியையும் அரசியலையும் முன்னெடுக்க வேண்டும் என்று விரும்பினார். சமூகப் பொறுப்பு என்றால் அஞ்சி ஓடும் ஒரு நாட்டிற்கு அவர் எது நியாயம் என்பதை எடுத்துச் சொன்னார். எளிய உண்மைகளைப் புரிய வைத்து எளிய கடமைகளை ஆற்ற வைத்து அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்தார்.

காந்திக்குப் பின், இந்தியா ஜனநாயகப் பாதையில் நடக்கத் துவங்கியது. இன்று எவராலும் எளிதில் யூகித்து விட முடியும்; அன்று ஜனநாயக அரசை நிலைக்க வைப்பது எத்தகைய சவாலாக இருந்திருக்கும் என்பதை. பிரிட்டிஷார் விட்டு விட்டுச் சென்ற அதிகார வர்க்கம், ஊழலை இயங்குமுறையாய்க் கொண்ட அதிகார வர்க்க மனோபாவம், பழமைவாதிகளான அரசியல்வாதிகள், மதப்பூசல்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறை என ஒவ்வொரு திசையிலும் இழுக்கப்படும் சகடமென இந்திய அரசு செயல்படத் துவங்கியது. இன்று வரை இந்திய ஜனநாயகத்துக்குப் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை அரசும் இந்திய சமூகமும் எதிர்கொண்டு முன்னகர்கிறது. இந்தியா ஜனநாயகமாகத் தொடர்வதில் பலருடைய பங்களிப்பு இருக்கிறது. அரசியல் செயல்பாட்டாளர்கள், படைப்பாளிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் என எத்தனையோ பேர் இந்தியாவிற்காக உழைத்துள்ளார்கள். அவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; வெவ்வேறு சித்தாந்தங்களில் நம்பிக்கை உள்ளவர்கள்; ஆயினும் தாம் நம்பும் ஒன்றுக்காக ஏற்றுக்கொண்ட விஷயத்துக்காக கடைசி வரை போராடியவர்கள்; அகமகிழும் வெற்றியைக் காணாமலே மடிந்து போனவர்கள்; மக்களின் மறதி என்னும் முடிவற்ற இருள் பிலத்தில் மூழ்கிப் போனவர்கள். உலகின் எந்த நாடும், நாட்டுக்காக செயல்பட்டவர்களைப் பற்றி திருப்திகரமான விதத்தில் தன் கல்வி நிலையங்கள் மூலம் இளைய சமுதாயத்துக்குக் கற்றுக் கொடுக்கும். இந்தியாவில் அதற்கு வாய்ப்பு அனேகமாக இல்லை. இங்கே கல்லூரி படித்து முடித்த மாணவனால்  ‘’உப்பு சத்யாக்கிரகம்’’ குறித்து இரண்டு நிமிடம் கூட பேசத் தெரியாது. இதுவே யதார்த்தம். கல்வித்துறையும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் அரசியல் குழுக்களால் நிரம்பி பயனற்றிருக்கிறது.

உலகின் எந்த அரசாங்கமும் தன் நாட்டின் தியாகிகளை சாதனையாளர்களை போற்றியே ஆக வேண்டும். நடைமுறையில் அது சார்ந்த புரிதலை உருவாக்க ஒரு கருத்தியல் பரப்புரையை வெவ்வேறு விதங்களில் உலகின் ஒவ்வொரு அரசும் முன்னெடுக்கவே செய்கிறது. எந்தச் செயலையும் வசை பாடுவது ஆரோக்கியமானதல்ல என்றேன். நண்பர் அமைதியானார்.

இந்த உரையாடல் முடிந்ததற்கு அடுத்த நாள் என் கைக்கு ஒரு புத்தகம் வந்தது. ‘’நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி” (ஆர்: வினய் சீதாபதி தமிழாக்கம்: ஜெ. ராம்கி). சில வாரங்களுக்கு முன்னால் ஜெயமோகன் தன் தளத்தில் இந்நூலைப் பற்றி எழுதியிருந்தார். ஒரே மூச்சில் நானூறு பக்கத்தையும் வாசித்து முடித்தேன்..

ஓர் அரசியல் செயல்பாட்டாளனின் வாழ்வு சவாலானது; கடுமையானது; அதிலும் அதிகாரத்துக்கு வந்து விட்ட செயல்பாட்டாளன் எதிர்கொள்ளும் இக்கட்டுகள் மிகப் பெரியவை; நுட்பமானவை. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் நேரு குடும்பத்திடமிருந்து அதிகாரத்தை தள்ளி வைத்து கட்சியையும் ஆட்சியையும் தன் கையில் ஐந்து ஆண்டுகள் வைத்திருந்தது என்பதே மிகப் பெரிய சாதனை. காங்கிரஸின் வரலாற்றில் அக்காலகட்டம் ஒரு குறியீடும் கூட. இந்நூலை வாசித்த போது காங்கிரஸ் எவ்வாறு ஒரு சிறு குழுவின் உள்ளரசியலாலும் விருப்பு வெறுப்புகளாலும் இயங்குகிறது என்பதைப் பற்றி அவதானிக்க முடிந்தது. நரசிம்ம ராவ் என்ற இளம் தெலங்கானா விவசாயி அரசியல்வாதியாகப் பரிணமித்து மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் அதிகாரத்திலும் பல பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்று வெளியேற இருந்த காலகட்டத்தில் ஊழ் அவருக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கிறது. ராவ் களத்திற்கு வருகிறார். இந்தியா அதுநாள் வரை பயணித்த பாதையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். எதிர்க்கட்சிகளுக்கு கொள்கை மாற்றத்தைப் புரிய வைக்கிறார். சொந்தக் கட்சியினருக்கு விளக்கம் அளித்துக் கொண்டேயிருக்கிறார். தனக்கான ஒரு செயல் அணியை உருவாக்கி அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார். அவர்களை முன்னிருத்தி சாமர்த்தியமாக வேலை வாங்கிக் கொள்கிறார். நேரு குடும்பம் அதிகாரத்தில் குறுக்கிடாமல் ஐந்து ஆண்டுகள் பார்த்துக் கொள்கிறார். யானை வடிவில் இருந்த லைசன்ஸ் – பர்மிட்- கோட்டா ராஜ் இன்று குதிரை வடிவுக்கு வந்திருப்பதற்கு காரணமானவர்களில் நரசிம்ம ராவ் முக்கியமானவர்.

அவர் மரணமடைந்த போது, அவருடைய உடல் தில்லியில் தகனம் செய்யப்படக் கூடாது என்பதில் சோனியா உறுதியாக இருக்கிறார். ஹைதரபாத்துக்கு எடுத்துச் செல்லப்படும் போது, விமான நிலையம் செல்லும் வழியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நுழையக் கூடாது என நுழைவாயில் கதவு அடைக்கப்படுகிறது. தன் வாழ்நாள் முழுதும் அமைப்புக்கும் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கும் விசுவாசமாக இருந்த மனிதனுக்கு புறக்கணிப்பைப் பரிசாகத் தந்தார்கள் சொந்த கட்சிக்காரர்கள். உண்மையில் அப்போதைய காங்கிரஸ் தலைமை அச்செயல் மூலம் இந்திய ஜனநாயகத்தையே அவமதித்தது.

எனக்கு இச்சம்பவம் ஜெயமோகனின் ‘’காற்றுமானியின் நடுநிலை’’ என்ற கட்டுரையை நினைவுபடுத்தியது. 1948ல் ருஷ்யப் படைகள் செக்கோஸ்லாகிவியாவைக் கைப்பற்றுகின்றன. அப்போது ருஷ்ய கம்யூனிஸ்டு தலைவரான கிளமெண்ட் கோட்வால்ட் ஒரு மாளிகையின் பால்கனியிலிருந்து தன் எதிரில் திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் முன் உரையாற்றுகிறார். அப்போது பனி பெய்து கொண்டிருக்கிறது. அவர் அருகில் இருக்கும் அவரது தோழரான விளாடிமிர் கிளமெண்டிஸ் தன் பனிக்குல்லாயை கோட்வால்டுக்கு அணிவிக்கிறார். அப்புகைப்படம் உலகெங்கும் பரவுகிறது. சில ஆண்டுகளில், கட்சியால் விளாடிமிர் கிளமெண்டிஸ் ‘’துரோகி’’ என குற்றம்சாட்டப்பட்டு கம்யூனிஸ ‘’வழக்கப்படி’’ தூக்கலிடப்படுகிறார். அவர் கோட்வால்ட்டுடன் இருக்கும் புகைப்படத்தின் பிரதிகள் திருத்தப்படுகின்றன. கிளமெண்டிஸ் இருந்த இடத்தில் ஒரு சுவர் இருக்கிறது. ஆனால் கிளமெண்டிஸ் கோட்வால்ட்டுக்கு அணிவித்த தொப்பி அப்புகைப்படத்தில் அப்படியே இருக்கிறது. மறைக்கப்பட்ட மொத்த வரலாறையும் சொல்லிக் கொண்டு.

வினய் சீதாபதியின் நூல் திறக்கப்படாத கதவு சொல்லும் கதை.


பின்குறிப்பு:
1950ல் மறைந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு 1991ல் தான் பதவிக்கு வந்ததும் ‘’பாரத் ரத்னா’’ விருது வழங்கியவர் நரசிம்ம ராவ்.