காவிரி வடிநிலம் அமையப் பெற்ற சோழ தேசத்தில் எனது வாழ்க்கை பயணிக்கிறது. காவிரியும் அதன் கிளை நதிகளின் பாய்ச்சலுமே இந்த மண்ணை உயிர்த்தன்மையுடன் இயங்கச் செய்கிறது. இந்த மண்ணின் உயிர்த்தன்மையை உணர்த்தும் விதமாக ஊருக்கு ஊர் ஆலயங்களை நிறுவி இறைவனைப் பதிட்டை செய்தனர் சோழர்கள். நான்கு கிலோமீட்டருக்கு ஒரு ஆலயம் என பிரதேசமெங்கும் ஆலயங்கள்.
இந்த ஆலயங்களுக்குப் பாத யாத்திரையாக செல்ல வேண்டும் என்று ஒரு விருப்பம் ஏற்பட்டது. ஒவ்வொரு தாலுக்காவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சீர்காழி தாலுக்கா எனில் ஒரு சனிக்கிழமை அன்று இரவு சீர்காழி சென்று ஆலயம் அருகே தங்கி விட வேண்டும். மறுநாள் ஞாயிறு காலை நீராடி பிரம்மபுரீஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து நடந்து சென்று தாளபுரீஸ்வரை வணங்க வேண்டும். அதன் பின்னர் காழிச் சீராம விண்ணகரத்தில் திருவிக்ரமப் பெருமாளைச் சேவித்து விட்டு திருமயிலாடி சென்று முருகனை வணங்க வேண்டும்.
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயங்கள் திறந்திருக்கும். மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஆலய நடை சாத்தப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் சென்று சேரும் ஆலயத்தில் இருக்க வேண்டும். மாலை துவங்கி இரவு வரை நடைப்பயணமும் வழிபாடும்.
ஞாயிறு இரவு ஊர் திரும்பி விட வேண்டும்.
அடுத்த வாரம் சனிக்கிழமை இரவு முதல் வார ஞாயிறு இரவன்று பயணத்தை நிறைவு செய்த தலத்திலிருந்து யாத்திரையை மீண்டும் துவக்க வேண்டும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மானுடத் தலைமுறைகளுக்காக அமைக்கப்பட்ட ஆலயங்களை நோக்கி நடந்து செல்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சிற்றடியும் ஆலயங்களை அமைத்த முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி என்று தோன்றியது.
இது ஒரு எண்ணம் ; விருப்பம். எவ்விதம் செயலாக்குவது என்பதை யோசிக்க வேண்டும்.