Wednesday, 1 May 2024

சாக்தம்

தமிழகத்தில் நாளும் நிகழும் சிறப்பான வழிபாடு எனில் அது சக்தி வழிபாடே. மாரியம்மன் கோவிலுக்கு தினமும் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அந்த எண்ணிக்கை பல மடங்கு கூடும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சக்தி அன்னை என்பதால் குழந்தைகள் அன்னையிட்ம் செல்வதைப் போல் மக்கள் அம்மனிடம் செல்கிறார்கள். 

சில நாட்களாக பாத யாத்திரை குறித்த எண்ணம் தீவிரமாக இருந்ததால் இன்று மாலை 4.15க்கு நடைப்பயிற்சி கிளம்பினேன். ஒரு கிராமத்துச் சாலையில் நடந்தேன். முதல் 1.5 கி.மீ தினமும் செல்லும் பாதை. அதன் பின் 2 கி.மீ எப்போதாவது செல்லும் பாதை. கோவிட் காலகட்டத்தில் நண்பர் ஒருவருடன் அந்த பாதையில் நடந்திருக்கிறேன். அவருடன் நிகழ்ந்த உரையாடல்களை ‘’மாலை உரையாடல்கள்’’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதினேன். 

ஐரோப்பியர்களுக்கு ஒரு விருப்பம் உண்டு. அதாவது தங்கள் வீடு ஒரு நகருக்கு வெளியே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதாவது 2 கி.மீ ஒரு திசையில் சென்றால் நகரின் மையத்தை அடைந்து விட வேண்டும். அதன் எதிர் திசையில் 2 கி.மீ சென்றால் ஒரு கிராமத்தை அடைந்து விட வேண்டும். தங்கள் வீடு கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் ஐரோப்பியர்களுக்கு உண்டு.  

சமீபத்தில் எழுதப்பட்ட ஒரு ஜென் கவிதை என் நினைவுக்கு வந்தது. ஓர் அமெரிக்கக் கவியால் எழுதப்பட்டது. 

சூரியனுக்கும்
மிக அருகாமையில் உள்ள கருத்துளைக்கும்
இடையில் 
இருக்கிறது
எனது வீடு

கிராமத்துப் பாதையில் நடந்த போது பாத்திகளில் கீரை வளர்த்திருந்தார்கள். அதற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். கிராமத்தில் தீமிதி மாலை நடக்க இருந்தது. பெண்களும் குழந்தைகளும் மஞ்சள் பூசிய முகத்துடன் மலர்க் கூந்தலுடன் அம்மன் ஆலயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். ஒரு மூன்று வயது குழந்தை தன் அம்மாவிடம் அழுது அடம் பிடித்து ‘’கவுன்’’ தான் அணிவேன் என அணிந்திருந்தது. அது மேலை நாட்டின் திருமணங்களில் மணமகள் அணிவது போன்ற ‘’கவுன்’’. அதன் நுனி தரையில் படாமல் இருக்க சற்று தூக்கி பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த குழந்தைக்கு அவ்வாறு பிடித்துக் கொண்டு நடந்து பழக்கம் இல்லை. தத்தித் தாவி நடந்து கொண்டிருந்தது. மனிதர்கள். காட்சிகள். ஒரு மூங்கில் மரத்தைக் கண்டேன். மரம் என்பது எப்போதும் ஓர் ஆச்சர்யம் தான். மரம், செடி, மலர், புல், வானம், மேகம் அனைத்துமே ஆச்சர்யம் தான். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மாக்கோலம். ஊர் திருவிழா மனநிலையில் இருந்தது. அதனூடே நடந்தது மகிழ்ச்சி அளித்தது. 

காலை மாலை இரு வேளையும் நடக்க வேண்டும். பகல் நேரத்தில் கூட நகருக்குள் உள்ள வேலைகளை நடந்து சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. 

இன்று மாலை நடந்த மொத்த தூரம் 7 கி.மீ.