14 மரங்கள் வெட்டப்பட்ட ஊரிலிருந்து இரண்டு தினங்கள் முன்பு நண்பர் அலைபேசியில் அழைத்திருந்தார். 14 மரங்கள் வெட்டப்பட்ட வீதியில் நாம் நட்ட மரக்கன்றுகள் இன்று விருட்சங்களாக எழுந்து நிற்கின்றன. அந்த மரக்கன்றுகளை விருட்சங்களாக வளர்த்தெடுத்திருக்கும் அந்த வீதியில் வசிக்கும் மக்களின் முனைப்பு அந்த ஊர்க்காரர்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது அந்த வீதி மக்களின் முனைப்பின் மீது நல்லெண்ணமும் மரியாதையும் கொண்ட அந்த வீதியின் பக்கத்து வீதி மக்கள் தங்கள் தெருவிலும் நிழல் தரும் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளனர். நண்பர் அது தொடர்பாக என்னிடம் பேசினார். நான் நேரில் வருவதாகக் கூறினேன். இன்று காலை புறப்பட்டுச் சென்றேன்.
14 மரங்கள் வெட்டப்பட்ட வீதி இன்று சிறு நிழல் பிராந்தியமாக உருவாகியுள்ளது. அவற்றை மீண்டும் ஒரு முறை பார்க்க நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது. சொர்க்கம் என ஒரு நிழல் மரம். வளர்ச்சியின் முதல் சில ஆண்டுகள் 15 அடி உயரம் வரை செல்லும். அதன் பின்னர் ஒரு குடை போல பம்பையாக அடரத் துவங்கும். கொன்றை பூக்கத் தொடங்கியுள்ளது. நாவல் வளர்ந்து கொண்டிருக்கிறது. இயல்வாகை பெரிய மரமாகி உள்ளது. பாரிஜாதம் பூக்கிறது. விருட்சி மலர்ந்து இறைபூசனைக்கு பயன்படுகிறது.
பக்கத்துத் தெருவைச் சென்று பார்த்தோம். அங்கே ஒரு இளைஞர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். இந்த ஆண்டின் கடுமையான கோடை வெப்பம் பொதுமக்களை தீவிரமாகச் சிந்திக்கச் செய்துள்ளது என்று சொன்னார். கோடையை எதிர்கொள்ள மரங்கள் அதிகம் தேவை என்ற எண்ணம் பொதுமக்களுக்கு பரவலாக ஏற்பட்டுள்ளது என்றும் சொன்னார். 100 மரக்கன்றுகளை வழங்குவதாகக் கூறினேன். ஆடு மாடு மேயாத புங்கன் மரக்கன்றுகளை வழங்க உள்ளேன். விருட்சியும் தேவை என்று கூறினார். எனது நண்பர் 14 மரங்கள் வெட்டப்பட்ட வீதியில் மரக்கன்றுகளைப் பாதுகாக்க வைக்கப்பட்ட இரும்பு வேலி கூண்டுகளை இந்த தெருவில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அதுவும் நல்ல விஷயம் தான்.
14 மரங்கள் வெட்டப்பட்ட வீதிக்கு அருகே இருக்கும் ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயத்துக்குச் சென்றேன். ஒரு பெண்மணி ஆலய வாசலில் மாக்கோலம் இட்டுக் கொண்டிருந்தார். சுவாமியை வணங்கினேன். ஆலய வளாகத்தில் இருந்த வேப்பமரத்தை வணங்கினேன். அந்த வேப்பமரத்தில் அந்த ஊரின் பெண்கள் நேர்ந்து கொண்டு கண்ணாடி வளையல்களைக் கட்டி வைத்திருந்தனர். அந்த மரத்தைத் தொட்டு வணங்கினேன். மக்கள் வழிபடும் இந்த ஆலயம் சில மாதங்களுக்கு முன் இடருக்குள்ளானது. இறை அருளால் அந்த இடர் தானாக நீங்கியது.