Monday, 13 May 2024

கோடி கண்கள்

எனது நண்பர்கள் சிலருக்கு கண்களில் சில உபாதைகள். ஒரு நண்பர் ஜே.சி.பி வாகனங்களை சர்வீஸ் செய்பவர். வெல்டிங் செய்யும் போது வெப்பமான உலோகத்துமி தெறித்து அவர் கண்ணுக்கு அருகே பட்டு விட்டது. கண் மருத்துவரிடம் காட்டி கண் மருந்துத் திரவத்தை தினமும் காலையும் மாலையும் கண்ணில் இட்டு வருகிறார். வேறு ஒரு விஷயத்துக்கு ஃபோனில் உரையாடிய போது இந்த விஷயத்தைச் சொன்னார். இன்னொரு நண்பர் காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளார். மேலும் ஒரு நண்பருக்கும் கண்ணில் சில ஒவ்வாமைகள். இவை அடுத்தடுத்து என் கவனத்துக்கு வந்தன.  

ஆடுதுறை அருகே திருவெள்ளியங்குடி என்ற ஷேத்ரம் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ம் திவ்ய தேசம். இந்த ஒரு திவ்யதேசத்தினை சேவித்தால் 108 திவ்ய தேசத்தையும் சேவித்ததற்கு சமானம் என ஐதீகம். கண் நோய் உள்ளவர்கள் தங்கள் நோய் நீங்க இங்கே வந்து பெருமாளை சேவிப்பார்கள். 

வாமன அவதாரத்தில் பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் தன் காலடியால் மூன்றடி மண்ணை யாசகமாகக் கேட்கிறார். மகிழ்வுடன் மகாபலி அதனை அளிக்கத் தயாராக அசுர குரு சுக்ராச்சார்யார் மகாபலியை வந்திருப்பது பெருமாள் என எச்சரிக்கிறார். அதனை ஏற்காது வாமனருக்கு தானம் அளிக்கத் தயாராகிறான் மகாபலி. சுக்ரர் ஒரு வண்டின் உருவெடுத்து கமண்டல வாயினை அடைத்து தானம் அளிக்கப்படும் போது நீர்வார்த்தல் நிகழாமல் தடுக்க முயல்கிறார். பெருமாள் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து கமண்டல வாயில் இருக்கும் வண்டின் மீது செலுத்த வண்டு வலி தாங்காமல் வெளியேறுகிறது. நீர் வார்த்து தானம் பூர்த்தி ஆகிறது. தர்ப்பைப் புல்லால் தாக்கப்பட்ட வண்டின் கண்கள் காயமாகின்றன. அதாவது சுக்ரரின் கண்கள் காயமாகின்றன. தனது கண் நோய் நீங்க சுக்ரர் பெருமாளை வணங்கிய தலம் திருவெள்ளியங்குடி என்பது ஐதீகம். இக்கோவிலில் ‘’நேத்ர தீபம்’’ எனப்படும் அணையா விளக்கு ஒன்று உள்ளது. பக்தர்கள் இந்த ‘’நேத்ர தீபத்துக்கு’’ நல்லெண்ணெய் அளிப்பார்கள்.

இங்கு பெருமாள் தனது பாஞ்சஜன்யத்தையும் சுதர்சனத்தையும் கருடனிடம் வழங்கி விட்டு வில்லேந்தி ஸ்ரீராமராக காட்சி தருகிறார். சுந்தரர் என்பது பெருமாளின் பெயர். உண்மையில், இந்த பெருமாளின் அழகைக் காண கண் கோடி வேண்டும். பெருமாள் அத்தனை அழகு. செவ்வாழை இங்கே தல விருட்சம். இன்று சுந்தரரை கோல வில்லி ராமரை சேவித்தேன்.