Sunday, 12 May 2024

நடு நாடு

பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் நடு நாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. இருப்பினும் பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் சிதம்பரம் , காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்கள் காவிரிப் பாசனம் ( இன்னும் சரியாகச் சொன்னால் வீர நாராயண ஏரிப் பாசனம்) பெறும் பகுதிகள் என்பதால் சோழ நாட்டுடன் இணைத்துக் கூறப்படும். 

மயிலாடுதுறையிலிருந்து நேர் வடக்கு என்பது மணல்மேடு. எழுத்தாளர் கல்கி பிறந்த ஊர் அது. வட காவேரி எனப்படும் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள ஊர் மணல்மேடு. ஆற்றின் வடகரையில் உள்ள ஊர் முட்டம். தற்போது மணல்மேடு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தது. முட்டம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த இரண்டு ஊர்களுக்கு இடையே இப்போது ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் இருக்கக்கூடும். பாலம் கட்டப்படும் முன் இரு ஊர் மக்களும் கோடையில் நதி வறண்டிருக்கும் போது நதியை நடந்தே கடந்து செல்வார்கள். முட்டத்திலிருந்து மயிலாடுதுறை வர வேண்டும் என்றால் நதியை நடந்து கடந்து மணல்மேடு வந்தால் அங்கிருந்து 15 கி.மீ தூரத்தில் மயிலாடுதுறை. இல்லாவிட்ட்டால் சிதம்பரம் சென்று அங்கிருந்து மயிலாடுதுறை வர வேண்டும். தூரம் 65 கி.மீ. ஆற்றில் தண்ணீர் இருக்கும் போது பரிசல் இயங்கும். பரிசலில் மணல்மேடு மக்கள் முட்டத்துக்கும் முட்டம் மக்கள் மணல்மேட்டுக்கும் வருவார்கள். இவ்வாறான ஒரு முறை இருக்கிறது என்று யாரோ சொல்லக் கேட்டு ஆர்வத்தின் காரணமாக நானும் பரிசலில் சென்றிருக்கிறேன். பரிசலில் டூ வீலரை ஏற்றிக் கொள்ள முடியும். அப்படி முட்டம் சென்று அங்கே அருகே இருக்கும் பகுதிகளை சுற்றிப் பார்த்திருக்கிறேன். 

அவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கையில் முட்டத்திலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு ஒரு சுருக்கமான வழி இருப்பதைக் கண்டு பிடித்தேன். முதலில் முட்டம் வந்து விட வேண்டும். பின்னர் அங்கிருந்து ஓமாம்புலியூர் சாலையைப் பிடித்து மோவூர் வர வேண்டும். மோவூரில் வடக்காகத் திரும்பி ஆயக்குடி செல்ல வேண்டும். ஆயக்குடியிலிருந்து ரெட்டியூர் செல்ல வேண்டும். ரெட்டியூரிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு வரும். அங்கிருந்து 4 கி.மீ ல் கங்கை கொண்ட சோழபுரம். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் ஜெயங்கொண்டம். அப்படியே வடக்கே சென்றால் விருத்தாசலம். 

‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ சென்ற போது இந்த மார்க்கத்தில் காட்டுமன்னார் கோவிலை இணைத்துக் கொண்டு சென்றேன். 

இன்று காலை 8 மணிக்கு ஊரிலிருந்து புறப்பட்டேன். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் செல்ல வேண்டும் என விரும்பினேன். மணல்மேடு முட்டம் கங்கை கொண்ட சோழபுரம் ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் பயணித்தேன். புதிய வாகனம் 2200 கி.மீ ஓடியிருக்கிறது. ‘’புல்லிங்’’ இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது. ஒரு சர்வீஸ் முடிந்திருக்கிறது. அடுத்த சர்வீஸில் புல்லிங் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கூடும். 

வண்டியில் செல்லும் போது உடனடியாக தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம் என பைக் பயணம் புறப்பட வேண்டும் என மனம் திட்டமிட்டது. மயிலாடுதுறை - திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- சேது ரஸ்தா- ராமேஸ்வரம் - திருச்செந்தூர் - திருநெல்வேலி - கன்யாகுமரி - திருவட்டாறு - திருவனந்தபுரம் - மலை நாட்டு வைணவ திவ்ய தேசங்கள்- காசர்கோடு - மங்களூர் - உடுப்பி - சிருங்கேரி - மைசூர் - பெங்களூர் வழியாக ஆந்திராவில் நுழைந்து ஆந்திராவில் ஒரு சுற்று என மனம் துள்ளியது. 

நடு நாடு முந்திரியின் விளைநிலம். நிறைய முந்திரிக்காடுகளைக் கடந்து சென்றேன். விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் ஆலயத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தேன். நெஞ்சுருக்கும் பிராத்தனைகள் - வேண்டுதல்கள். இறைமையின் கருணையால் உயிர்கள் ஒவ்வொரு மூச்சிலும் உயிர் வாழ்கின்றன. 11 மணிக்குப் புறப்பட்டு பயணித்த அதே மார்க்கத்தில் மீண்டும் வந்து 1 மணிக்கு வீடடைந்தேன். ஐந்து மணி நேரம். 200 கி.மீ பயணம்.