சைவர்களுக்கு கோயில் என்றால் அது சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைக் குறிக்கும். வைணவர்களுக்கு கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி ஆலயத்தைக் குறிக்கும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்யதேசங்களில் முதலாவது என்னும் பெருமைக்குரியது ஸ்ரீரங்கம். ஆச்சாரியரான ராமானுஜர் தனது செயற்களமாகக் கொண்ட ஊர் ஸ்ரீரங்கம். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் வாழ்வுடன் இணைந்தே இருக்கும் ஊர் ஸ்ரீரங்கம்.
இஸ்லாமியர்கள் இந்திய நிலப்பகுதியை தாக்கி இங்கிருக்கும் செல்வத்தைக் கொள்ளையடிக்கவும் இங்குள்ள சமயத்தையும் வழிபாட்டு முறைகளையும் பண்பாட்டையும் அழிக்கவும் படை திரட்டி வந்தார்கள். இந்திய நிலத்தின் வடபகுதி இஸ்லாமியர் படையெடுப்பால் பேரழிவுக்கு உள்ளானது. விந்திய சாத்பூரா மலைகள் இருந்ததால் இந்தியாவின் தென்பகுதிக்குள் இஸ்லாமியர்களால் எளிதில் நுழைய முடியவில்லை. அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காஃபூர் இந்தியாவின் தென்பகுதியைத் தாக்கிய முதல் ஆக்கிரமிப்பாளன். தென்னிந்தியாவின் பல ஆலயங்கள் மாலிக்காஃபூர் படையெடுப்பால் தகர்க்கப்பட்டன. மாலிக்காஃபூரின் ஆக்கிரமிப்பு சேனை தென்னக மக்களுக்கு பல கொடுமைகளைச் செய்தது. இஸ்லாமிய சேனையின் ஒரு பகுதி தமிழகத்தில் தங்கியிருந்த காலகட்டம் அது.
மாலிக்காஃபூர் படையெடுப்புக்குப் பின் , தில்லியிலிருந்து உலூக் கான் மீண்டும் ஒருமுறை ஸ்ரீரங்கத்தையும் மதுரையையும் தாக்குகிறான். தென்னகம் கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் இஸ்லாமியர் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்தது. எல்லா ஆலயங்களும் மூடப்பட்டன. ஆலய வழிபாடு என்பது அரச விரோத காரியமாகப் பார்க்கப்பட்டது. ஆலயத்தின் அனைத்து திருவிழாக்களுக்கும் தடை விதிகப்பட்டது. கடுமையான வரிகள் மக்கள் மீது விதிக்கப்பட்டன.
இஸ்லாமிய அடக்குமுறையிலிருந்து தப்ப ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு குழு , உற்சவர் நம்பெருமாளுடன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்புகின்றனர். நாளும் ஒரு உற்சவன் பொழுதும் ஒரு திருவிழா என இருந்த நம்பெருமாள் தென்னக நிலம் காணும் வகையில் 48 ஆண்டுகள் இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கே என ஒரு உலா நிகழ்த்துகிறார். ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் செல்கிறார். அங்கிருந்து அழகர் கோவில் போகிறார். பின்னர் மதுரையைக் கடந்து திருநெல்வேலி ஆழ்வார் திருநகரி போய் நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் போகிறார். மலைநாடுகள் வழியே பயணித்து மேல்கோட்டை சென்றடைகிறார். பல ஆண்டுகள் அங்கே இருக்கும் பெருமாள் பின்னர் திருப்பதி சென்று சேர்கிறார்.
இஸ்லாமியர்களை வீழ்த்தி பல நூற்றாண்டுகளுக்கு தென்னிந்திய நிலப்பரப்பைக் காத்த விஜயநகரப் பேரரசு உருவான பின்னர் அதன் ஸ்தாபகர்களான ஹரிஹர புக்கரின் வாரிசான குமார கம்பணன் தனது படை கொண்டு மதுரையை ஆண்ட இஸ்லாமியர்களை வீழ்த்தி தமிழகத்தின் இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருகிறார். 48 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கம் நகர் நீங்கிய நம்பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து சேர்கிறார்.
இந்த சரித்திர நிகழ்வுகளை பின்புலமாக் கொண்டு எழுதப்பட்ட கதை ‘’ திருவரங்கன் உலா’’.
தமிழகத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கிய காலகட்டத்தைக் குறித்து எழுதப்பட்ட கதை என்ற வகையில் ‘’திருவரங்கன் உலா’’ முக்கியத்துவம் பெறுகிறது.