Thursday 16 May 2024

எழுதாக் கிளவி

எனது நண்பரின் மகன் மர்ஃபி. மர்ஃபி என்பது நான் அவனை செல்லமாக அழைக்கும் பெயர். அவன் சிறு குழந்தையாயிருந்த போது பிரபலமான மர்ஃபி ரேடியோ விளம்பரத்தில் வரும் குழந்தையைப் போல இருந்ததால் அவனை மர்ஃபி என அழைக்கத் துவங்கினேன். அதுவும் அவனது பெயர்களில் ஒன்றாகி நிலைபெற்று விட்டது. மர்ஃபியை வைத்து நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். மர்ஃபி கவிதைகள்

மர்ஃபி இப்போது பெங்களூரில் இருக்கும் வேத பாடசாலை ஒன்றில் ஐந்து ஆண்டுகளாக வேதம் படித்துக் கொண்டு இருக்கிறான். வருடத்தின் 365 நாட்களில் 350 நாட்கள் அவனுக்கு வகுப்பு உண்டு. 15 நாள் விடுமுறையில் மர்ஃபி தன் பெற்றோருடனும் குடும்பத்தினருடனும் வெளிமாநிலத்துக்கு சுற்றுலா சென்று விட்டு பாடசாலை திரும்பி விடுவான். கடந்த 5 ஆண்டுகளில் அவனை சந்திப்பது அரிதாகி விட்டது. இருப்பினும் தினமும் எங்கள் வீட்டில் அவனைப் பற்றி பேசுவோம். நான் தினம் சில முறைகளாவது அவனைப் பற்றி சொல்வேன். நான் அடிக்கடி சொல்லும் சம்பவம் ஒன்று உண்டு. அதாவது , மர்ஃபி பிரி கே ஜி படித்த போது அவனை பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வேன். வீட்டிலிருந்து பள்ளி வரைக்கும் பைக்கில் பயணம் செய்யும் மகிழ்ச்சியில் வந்து விடுவான். பள்ளியைக் கண்டதும் உள்ளே செல்ல மாட்டேன் என அழத் துவங்குவான். சமாதானப்படுத்தி வகுப்பில் விட்டு வருவேன். காலை 9 மணிக்கு விட்டால் பின்னர் மதியம் 12 மணிக்கு அழைத்து வந்து விடலாம். பிரி கே ஜி யின் எல்லா குழந்தைகளும் அழும். அவனது வகுப்பு ஆசிரியை பள்ளி துவங்கிய சில நாட்களில் என்னிடம் சொன்னார் ; ‘’ எல்லா குழந்தைகளும் அம்மாட்ட போகணும் ; அப்பாட்ட போகணும் னு அழறாங்க. இவன் மட்டும் வித்யாசமா பிரபு மாமாட்ட போகணும் னு அழறான்’’. பள்ளிக்கு கொண்டு விடுவதும் அழைத்துச் செல்வதும் நான் என்பதால் அவ்வாறு அழுதிருக்கிறான். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். கணிதத்திலும் பேரார்வம் கொண்டிருந்தான். 

எட்டு வயதில் வேத பாடசாலைக்கு வேதம் படிக்க அனுப்புவது என அவனது பெற்றோர் முடிவு செய்தனர். அவனுக்கும் அந்த முடிவில் முழு சம்மதம் இருந்தது. தன் விருப்பத்தின் காரணமாகவே வேதம் படிக்கச் சென்றான். ஆண்டுக்கு ஒரு முறை வரும் போது நீ படித்த வேதத்தை சொல்லிக் காட்டு என்று கேட்போம். அவன் சொன்னதில்லை. இந்த முறை பாடசாலை மாணவர்கள் இணையம் மூலம் வேத பாராயணம் செய்தார்கள். ஒரு மணி நேரம். விடுமுறையின் 15 நாட்களிலும் தினம் ஒரு மணி நேரம் கூட்டாக பாராயணம் செய்யுமாறு அவர்கள் ஆசிரியர் அறிவுறுத்தியிருக்கிறார். அதன் படி இன்றைய பாராயணம் செய்தார்கள். 

மர்ஃபி ஒரு மணி நேரம் வேத பாராயணம் செய்தான். கையில் எந்த புத்தகமும் இல்லை. பாராயணம் செய்யும் இன்றைய பகுதி அவனுக்கு முழு மனப்பாடமாக இருந்தது. ஒரு மணி நேரம் எந்த புத்தகமும் இல்லாமல் எந்த குறிப்பும் இல்லாமல் முழுதும் மனப்பாடமாக வேதம் ஓதியதைக் கண்ட போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. ரிக் வேதத்தின் ‘’சோம சூக்தம்’’ என்னும் பகுதியை இன்று பாராயணம் செய்தார்கள். 

வேதத்தை ‘’எழுதாக் கிளவி’’ என்று கூறுவார்கள். வானின் தூய ஒலிகளை தம் தவத்தால் அறிந்த முனிவர்கள் அவற்றை ஒலி வடிவமாக புவி உயிர்களுக்கு வழங்கியவையே வேதங்கள். ஐயாயிரம் ஆண்டுகளாக ஒலி வடிவமாகவே பயிலப்படுகிறது. ஒலிக்கிறது. 

மேன்மையான தவ ஆளுமைகளால் உலகுக்குக் கிடைத்த கொடை வேதங்கள். அவற்றைக் காப்பது உலக மானுடர் அனைவரின் கடமை.