Thursday 13 June 2024

பதினெட்டு புராணங்கள்

 நமது பண்பாட்டின் மரபின் கலையின் நுண்கலையின் இலக்கியத்தின் தொல் வேர்கள் எங்குள்ளன?  நாம் அதனைத் தேடுவோமாயின் அதனை பதினெட்டு புராணங்களில் கண்டடைய முடியும். நமது மண்ணின் நிலத்தடி நீர் என இருப்பவை நான்கு வேதங்கள். அவை அடிப்படையானவை. வேதங்களைப் பயில்வதற்கென உள்ள முறை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மாற்றம் இன்றி அப்படியே தொடர்கிறது. உலகப் பண்பாட்டின் பெருநிகழ்வுகளில் ஒன்று அவ்வாறு நிகழும் தொடர்ச்சி. பதினெட்டுப் புராணங்கள் இந்த மண்ணில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மானுடர்களின் கதைகளையும் மானுட உள்ளங்களின் எழுச்சியையும் தள்ளாட்டங்களையும் கூறக் கூடியவை. எனவே அவை குறியீட்டு ரீதியிலானவையும் கூட. இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் பின்னர் பிரும்மாண்டமாக உருவாகி நிலை கொண்டன. எல்லா புராணங்களும் சிறு அளவில் இதிகாசங்களுக்குள் இருந்தன. இராமாயணமே மகாபாரதத்தினுள் ஒரு கதையாக வருகிறது. ( கல்யாண சௌகந்திக மலரைத் தேடி பீமன் செல்லும் போது மாற்றுருவில் இருக்கும் அனுமனைச் சந்திக்க நேர்கிறது. அப்போது அனுமன் பீமனிடம் இராமாயணத்தைச் சொல்வதாக மகாபாரதத்தில் வருகிறது.)

மகாபாரதத்தில் யுதிர்ஷ்டிரன் யமதர்ம ராஜனின் நுண் வடிவமாகவும் பீமன் வாயுவின் நுண் வடிவமாகவும் அர்ஜுனன் இந்திரனின் நுண் வடிவமாகவும் நகுல சகாதேவர்கள் அசுவினி தேவர்களின் நுண் வடிவமாகவும் குறிப்பிடப்படுகின்றனர். துரியோதனின் கலியின் நுண் வடிவம். இந்த கதாபாத்திரங்களின் வெவ்வேறு வகை மாதிரிகள் புராணங்களில் உள்ளன. மகாபாரதத்தில் ‘’நள சரிதம்’’ இடம் பெற்றிருக்கிறது. நள சரிதத்துக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள ஒப்புமைகள் வியப்பளிக்கக் கூடியவை. 

நள ராஜன் சமையல் கலையிலும் குதிரைகளைப் பராமரிப்பதிலும் வல்லவன். பீமன் சமையல் கலையிலும் நகுலன் குதிரைகளைப் பராமரிப்பதிலும் வல்லவன். நளனுடைய சகோதரன் புஷ்கரன் நளன் மீது பொறாமை கொண்டிருந்தான். கௌரவர்களுக்கு பாண்டவர்கள் மீது பொறாமை இருந்தது. தமயந்தி ஒரு பேரரசி. திரௌபதி ஒரு பேரரசி. நளன் புஷ்கரனின் சூதாட்ட அழைப்பை ஏற்று சூதாடி நாட்டை இழந்தான். யுதிர்ஷ்ட்ரன் துரியோதனின் அழைப்பை ஏற்று சூதாடி நாட்டை இழந்தான். இந்த இரண்டு கதைகளுமே இணையானவை. இதில் இன்னொரு சுவாரசியம் உண்டு. பாண்டவர்கள் அக்ஞாதவாசம் புரிய தேர்ந்தெடுக்கும் விராட தேசம் நளன் ஆண்ட தேசம். நளன் யுதிர்ஷ்ட்ரன் இருவருமே சூதில் இழந்த நாட்டை மீட்கிறார்கள் என்பது மேலும் ஒரு ஒப்புமை. 

கீசக வதம், துரியோதனன் படுகளம், அரவான் பலி போன்ற பல மகாபாரத நிகழ்வுகள் நாட்டார் கலைகளில் நிகழ்ந்து மக்கள் மனத்தில் நிலை பெற்றுள்ளன. நாட்டின் அனைத்து மொழிகளின் இலக்கியத்திலும் இராமாயணமும் மகாபாரதமும் உள்ளன. 

’’மகாபாரத அறிஞர்’’ ஸ்ரீராமானுஜாச்சார் ‘’ஸ்ரீ மஹாபாரத பர்வங்கள்’’ என்ற பெயரில் ஒட்டு மொத்த மகாபாரதத்தையும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார். அப்பெரும் பணியை மேற்கொண்ட அப்பெரியவர் என்றும் வணங்கப்பட வேண்டியவர். 

கிசாரி மோகன் கங்குலி என்ற அறிஞர் மஹாபாரதத்தை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். முக்கியமான பெரிய பணி அது. உலக வாசகர்கள் மகாபாரதத்தை அறிய அதனால் ஒரு வழி நேர்ந்தது. கங்குலியின் மகாபாரதத்தை அருட்செல்வப் பேரரசன் முழுமையாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் நிகழ்ந்துள்ள போற்றத் தகுந்த பணியாகும் இது. அருட்செல்வப் பேரரசன் போற்றுதலுக்குரியவர்.  ( https://mahabharatham.arasan.info/ )

18 புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியமான முக்கியமான ஒரு பணி.