Friday 14 June 2024

கருத்திருமன்

 

இன்று மாலை ஊருக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றனுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த கிராமத்துக்கு முன்னால் இருக்கும் கிராமம் ஒன்றில் ஒரு மளிகைக்கடையின் பெயர்ப்பலகை இருந்தது. அதன் அடியில் உரிமையாளர் என கருத்திருமன் என ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பெயர் எனக்கு ஆர்வமூட்டியது. திரும்பி வரும் போது அந்த கடைக்காரரை சந்திக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். பக்கத்து கிராமத்திற்குச் சென்று சந்திக்க வேண்டியவரை சந்தித்த பின் ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது அந்த கடையின் ஞாபகம் வந்தது. அங்கே வாகனத்தை நிறுத்தினேன். கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் ‘’கருத்திருமன்’’ என ஐயத்துடன் கூறினேன். கல்லாகாரர் ‘’நான் தான்’’ என்றார். 

‘’போர்ட் ல உங்க பேரை பாத்தன். பி. ஜி. கருத்திருமன் ஞாபகமா இந்த பேரை உங்களுக்கு வச்சாங்களா ?’’ என்று கேட்டேன். 

‘’எங்க மாமா தான் எனக்கு இந்த பேரை வச்சார். மாமா காங்கிரஸ்காரர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவரா இருந்த காங்கிரஸ் தலைவர் கருத்திருமன் பெயரை எனக்கு வைத்தார்’’ என்றார். 

‘’கம்பன் பாடல்கள் பத்தாயிரத்துக்கு மேல் இருக்கு. தமிழ் மக்களுக்கு கம்பனை அறிமுகம் செய்யும் நோக்கில் 930 தேர்ந்தெடுக்கப்பட்ட கம்ப ராமாயணப் பாடல்கள் மூலம் கம்பனை தமிழ் ஆர்வலர்கள் முன் கொண்டு சேர்த்தவர் கருத்திருமன். அவர் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழின் ஆகப் பெரிய கவிஞனான கம்பனை தூற்றிக் கொண்டிருந்தது. அந்த தூற்றுதலுக்கு பதிலடியாக ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக பி ஜி கருத்திருமனின் ‘’கம்பர் : கவியும் கருத்தும்’’ என்ற நூல் அமைந்திருந்தது ‘’ என்று கடைக்காரர் கருத்திருமனிடம் சொன்னேன்.  

‘’நான் அந்த புத்தகம் வாசித்திருக்கிறேன்’’ என்று கருத்திருமன் சொன்னார்.

கடைக்காரர் கருத்திருமனின் மனைவி குழந்தைகளும் கடையில் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. 

கம்பனில் நுழைய எனக்கு பி ஜி கருத்திருமனின் கம்பர் : கவியும் கருத்தும் நூல் ஒரு வாயிலாக அமைந்தது என்பதால் அவர் எப்போதும் என் பிரியத்துக்குரியவர். என் பிரியத்துக்குரிய அறிஞரின் பெயர் கொண்ட ஒருவரைச் சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்வையளித்தது.