Wednesday 5 June 2024

ஒரு நினைவூட்டல்

 காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சியின் கருத்தியலாளர்களில் ஒருவர். பரந்து பட்ட வாசிப்பைக் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். அறிவார்ந்த செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டவர். 

நேற்று ( 04.06.2024) அன்று அவர் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார். அதாவது, ஜூன் 4 அன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது வாரணசி தொகுதியில் முதல் சில சுற்றுகளில் இந்தியப் பிரதமர் பின் தங்கி இருப்பதாக செய்தி வந்தது. அதனைக் கண்ட திரு. ஜெய்ராம் ரமேஷ் எந்த இந்தியப் பிரதமரும் வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒரு சுற்றிலும் பின்னடைவைச் சந்தித்தது இல்லை ; ஜூன் 4ல் இது முதல் முறை நிகழ்ந்திருக்கிறது என்று கூறினார். 

திரு. ஜெய்ராம் ரமேஷ் இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டார். நினைவுபடுத்தினால் அதனை அவர் உணரக்கூடும். 

1977ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்தவர் திருமதி. இந்திரா காந்தி. அவர் உத்திரப் பிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் (இ) சார்பில் போட்டியிட்டார். அதே தொகுதியில் பாரதிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த திரு. ராஜ் நாராயணன் என்பவர் போட்டியிட்டார். மக்கள் வாக்களித்து வாக்குகள் எண்ணப்பட்டு ரே பரேலி தொகுதியின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் பாரதிய லோக் தளம் கட்சியின் வேட்பாளர் திரு. ராஜ் நாராயணன் வெற்றி பெற்றிருந்தார். அதாவது இந்தியப் பிரதமர் திருமதி . இந்திரா காந்தி தோல்வி அடைந்திருந்தார். வாக்கு வித்யாசம் 55,000 க்கும் மேல். 

தமிழ் மொழியில் உள்ள இரு பழமொழிகள் என் நினைவில் எழுகின்றன. ‘’கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியக் கூடாது’’ என்பது ஒன்று. ‘’கற்றவன் கழுநீர் பானையில் கைவிட்டதைப் போல’’ என்பது மற்றொன்று.