Thursday 6 June 2024

பாரதம்

உலக நிலப்பரப்பில் பாரத வர்ஷம் என்னும் பகுதி ஆதி தொல்காலம் முதல் உலக பண்பாட்டுக்கு பெரும் பங்களிப்பை அளித்திருக்கிறது. தென்கடல் குமரியிலிருந்து பனிமலை ஹிமாலயம் வரை கிழக்கே காந்தாரத்திலிருந்து மேற்கே மணிப்பூரகம் வரை அமைந்திருக்கும் இந்நிலம் சில அடிப்படையான பண்பாட்டு உணர்வுகளைக் கொண்டிருக்கிறது. அந்த பண்பாட்டு உணர்வினை இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என்று சுருக்கமாகக் கூற முடியும். இயற்கையை மகத்தானதாக உணர்தனர் இந்நிலத்தில் வாழ்ந்தோர். இந்நிலத்தில் தீ வழிபடப்பட்டிருக்கிறது ; நதி வழிபடப்பட்டிருக்கிறது ; கடல் வழிபடப்பட்டிருக்கிறது ; வானம் வழிபடப்பட்டிருக்கிறது ; சூரிய சந்திர நட்சத்திரங்கள் வழிபடப்பட்டிருக்கின்றன. இயற்கையை வழிபடுதல் என்பது பாரத நிலத்தின் மரபு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உள்ள இந்த மரபு இன்றும் தொடர்கிறது. இந்த பொதுவான அடிப்படை இப்பெரு நிலத்தை ஒரு நாடென ஆக்குகிறது.   

உலகில் இன்று பெரிய சக்திகளாக இருக்கும் நாடுகள் தங்களை நாடுகளாக உணர்ந்து 800 ஆண்டுகளே ஆகியிருக்கின்றன. அமெரிக்கா சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவான தேசம். ஐரோப்பாவின் இன்றைய பல நாடுகள் 800 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானவையே. பாரதம், சீனம், ஜப்பான், கிரேக்கம், ரோம் ஆகிய பண்பாடுகள் தொன்மையானவை. உலகப் பண்பாட்டு அடிப்படையை உருவாக்கிக் கொடுத்தவை. 

பொது யுகம் ஆயிரம் ஆண்டிலிருந்து உலகம் பெரிய அளவில் போர்களைக் காண ஆரம்பித்தது. அராபியர்களும் துருக்கியர்களும் பாரசீகர்களும் தொலைதூர நிலங்களை நோக்கி படையெடுத்துச் சென்றனர். ஐரோப்பா அதனை எதிர்கொண்டு பல நூற்றாண்டுகளுக்கு சிலுவைப் போர்களைப் புரிந்து கொண்டிருந்தது. பாரத நிலமும் தாக்குதலுக்கு ஆளாகத் தொடங்கியிருந்தது. தன் மீது நிகழ்ந்த தாக்குதலையும் ஆக்கிரமிப்பையும் பாரதம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எதிர்த்து போர் புரிந்தது. ராஜபுத்திரர்கள் பெரும் போர் புரிந்தனர். ஆந்திரர்கள் விஜயநகரப் பேரரசை உருவாக்கி பாரதத்தின் தென் நிலத்துக்கு அரணாக அமைந்தனர். மராட்டியர்கள் ஒரு பேரரசை உருவாக்கிக் காட்டினர். சீக்கியர்கள் பண்பாட்டைக் காக்க ஒரு போர்ச் சமூகமாக தங்களை தகவமைத்துக் கொண்டனர். ஆயிரம் ஆண்டுகாலமாக யுத்தம் நிகழ்ந்த மண்ணை வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தினர். உலகின் மகத்தான பண்பாடுகளில் ஒன்றை தன்னகத்தே கொண்டிருக்கும் நாட்டின் மக்கள் வறிய நிலைக்குச் சென்றனர். இந்த மண்ணில் தோன்றிய ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி, ஸ்ரீ நாராயண குரு ஆகிய ஆன்மீகவாதிகளின் வழிகாட்டுதலில் இந்திய தேசிய இயக்கம் உருவானது. மகாத்மா காந்தி இந்திய தேசிய இயக்கத்தை வழிநடத்தும் இடத்துக்கு வந்தார். 

எனது தேசம் குறித்த எனது உணர்வு மேற்கூறிய புரிதல்களால் ஆனது. எந்நிலையிலும் இந்திய தேசியத்தின் பக்கமே நான் நிற்பேன். தேசிய ஒருமைப்பாடு என்பதே எப்போதும் எனது விருப்பம். 

எனக்கு பண்பாட்டின் மீது ஆர்வம் உண்டு. வரலாற்றில் ஆர்வம் உண்டு. அதிகார அரசியலில் ஆர்வம் இல்லை. எனினும் வரலாற்றின் ஒரு பகுதியாக அரசியலைக் கவனிப்பது உண்டு. எனது அரசியல் அவதானங்கள் எனது விருப்பு வெறுப்புகளால் ஆனது அல்ல. 

அன்னிய ஆட்சியின் விளைவால் வறிய நிலைக்குச் சென்ற கோடானுகோடி ஏழை மக்களின் வாழ்நிலையை உயர்த்த இந்த தேசத்தின் ஒருமைப்பாடு என்பது மிக முக்கியம் என உணர்ந்த மகாத்மா காந்தி வழிநடத்திய இந்திய தேசியத்தை முழுமையாக ஏற்கும் எந்த கட்சியும் எனது ஏற்புக்கு உரியதே. ராம் மனோகர் லோகியா , ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோர் வழிநடத்திய சோஷலிச இயக்கமும் என் ஏற்புக்கு உரியதே. ராம் மனோகர் லோகியாவின் வாழ்க்கை சரிதமான ‘’வாழ்வும் போராட்டமும்’’ என்ற நூலை நான் வாசித்திருக்கிறேன். அந்நூலில் ‘’முதலாளித்துவமும் கம்யூனிசமும் வேறு வேறல்ல ; இயற்கை என்பது சுரண்டப்பட வேண்டிய ஒன்று என்ற அடிப்படையை இந்த இரண்டு சித்தாந்தங்களும் கொண்டுள்ளன’’ என்ற அவரது அவதானம் அவர் எத்தனை பெரிய அறிஞர் என்பதை எனக்கு உணர்த்தியது. 

ஸ்டாலின், மாவோ, போல்போட் போன்ற கொடுங்கோலர்களை அளித்த கம்யூனிச சித்தாந்தத்தின் மீது எனக்கு பெரும் விலக்கம் உண்டு. பெரும் படுகொலைகளும் பேரழிவுகளுமே கம்யூனிச சித்தாந்தம் உலக வ்ரலாற்றுக்கு அளித்த பங்களிப்பு என்பதால் அந்த விலக்கம் உருவாகிறது. ஸ்டாலின் ஒட்டு மொத்த ரஷ்ய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொன்று குவித்தவர். ‘’ஒரு மனிதன் இறந்தால் அது துக்கம் ; ஒரு கோடி பேர் இறந்தால் அது புள்ளிவிபரம்’’ என்று எளிய குடிகளின் சாவை சர்வ சாதாரணமாகக் கடந்து சென்றவர். மாவோ சீனாவில் நிகழ்த்திய படுகொலைகள் கணக்கற்றவை. உலகெங்கும் இருந்த பல பண்பாடுகள் மீது கருத்தியல் தாக்குதல் நிகழ்த்தி அறிவுத்துறையில் பேரழிவுகளை கம்யூனிசம் உருவாக்கியிருக்கிறது. இந்தியப் பண்பாட்டின் மீது கம்யூனிஸ்டுகளின் தாக்குதல் கடுமையானது என்பதால் கம்யூனிஸ்டுகள் மீது எப்போதும் விலக்கமே இருந்திருக்கிறது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். சமூகத்தைப் பொருளியல் கண்களுடன் பார்க்கும் தன்மையில் கார்ல் மார்க்ஸ்ஸை நுணுக்கமான ஓர் அறிஞராக எண்ணியிருக்கிறேன். இப்போதும் எண்ணுகிறேன். எனினும் மார்க்ஸ் தனது காலத்தில் இந்தியா குறித்து எழுதியிருக்கும் விஷயங்கள் ஏமாற்றமளிப்பவை என்னும் எனது மனப்பதிவுடன் சேர்த்தே இந்த விஷயத்தை சிந்திக்க வேண்டும். 

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம் என்பதாலும் ஆரிய - திராவிட கட்டுக்கதையை வைத்து மக்களைப் பிரித்து அரசியல் செய்யும் அமைப்பு என்பதாலும் திராவிட இயக்கத்தை நான் நிராகரிக்கிறேன். 

மகாத்மா காந்தி எனது விருப்பத்துக்குரிய அரசியல் தலைவர். சர்தார் வல்லபாய் படேல் எனது விருப்பத்துக்குரிய தலைவர். சுதந்திர இந்தியாவில் 540 சமஸ்தானங்களை இணைத்து தேச ஒருமைப்பாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. உலகின் மிகப் பெரிய சிலை அவருக்கு நிறுவப்பட்டிருப்பது மிகப் பொருத்தமான ஒன்று. சுபாஷ் சந்திர போஸ் எனது பிரியத்துக்குரிய தலைவர். 

ஜவஹர்லால் நேரு எனது விருப்பத்துக்குரிய தலைவர். அவர் மீது விருப்பமும் உண்டு. விமர்சனங்களும் உண்டு. 

பாபா சாகேப் அம்பேத்கர் மீது எனக்கு பெருவிருப்பமும் பெருமதிப்பும் உண்டு. இந்தியாவின் மகத்தான அறிவுஜீவிகளில் அவர் ஒருவர். கடந்த பத்து ஆண்டுகளில் அவர் நினைவாக தில்லியிலும் மும்பையிலும் கட்டப்பட்டுள்ள நினைவில்லமும் மண்டபமும் அவருக்கு செலுத்தப்பட்ட பணிவான அஞ்சலிகள். டாக்டர் அம்பேத்கர் வாழ்வுடன் தொடர்புடைய ஐந்து இடங்கள் ‘’பஞ்ச தீர்த்தம்’’ என போற்றப்படுகின்றன. அவர் பிறந்த இடம் ‘’ஜன்ம பூமி’’, கல்வி பயின்ற இடம் ‘’சிக்‌ஷா பூமி’’, ஆன்மீகத் தேடலின் ஒரு பகுதியாக பௌத்தத்தைத் தழுவிய இடம் ‘’ தீக்‌ஷா பூமி’’, அவர் மறைந்த இடம் ’’மஹாபரி நிர்வாண் பூமி’’, அவரது சமாதி அமைந்துள்ள இடம் ‘’சைத்ய பூமி’’. பாபா சாகேப் வாழ்வுடன் தொடர்புடைய இந்த ஐந்து இடங்களும் ‘’பஞ்ச தீர்த்தம்’’ என அழைக்கப்பட்டு பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட இடங்களாக கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசால் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்து 43 ஆண்டுகளுக்குப் பின், வி.பி.சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அரசாங்கத்தால் அம்பேத்கருக்கு ‘’பாரத ரத்னா’’ விருது அளிக்கப்பட்டது. 

ராஜாஜி எனது விருப்பத்துக்குரிய தலைவர். அவருடைய ‘’சுதந்திரா கட்சி’’ இந்திய அரசியல் களத்தில் அரிய ஒன்று. 

சோஷலிசத் தலைவர்களான ராம் மனோகர் லோகியா , ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. இந்திரா காந்தி சர்க்காரால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நாடு சர்வாதிகார இருளில் மூழ்கியிருந்த போது ஜெ. பி யின் ‘’லோக சங்கர்ஷ சமிதி’’ நாடெங்கும் நெருக்கடி நிலையை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டு வர கிராமங்களிலும் நகரங்களிலும் மக்களை சந்தித்து மக்களுக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தது. நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடிய ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களுடைய தியாகமே நம் நாட்டில் ஜனநாயகத்தைக் காத்தது. 

இந்திரா காந்தி மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு என்றாலும் சீனாவின் கைக்கூலியாக  இந்தியாவில் நாச வேலைகளைச் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை இரண்டாகப் பிளந்தவர் என்பதால் அவர் மீது மரியாதையும் உண்டு. 

நெருக்கடி நிலைக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் பெருவெற்றி பெற்று நாட்டின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்த ஜனதா கட்சி என் விருப்பத்துக்குரிய ஒன்று. 

1989ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் போஃபர்ஸ் ஊழல் ஒரு முக்கிய விஷயமானது. போஃபர்ஸ் ஊழலுக்கு எதிராக பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் ஓரணியாகத் திரண்டன. அந்த அணி ‘’தேசிய முன்னணி’’ என அழைக்கப்பட்டது. 1989ம் ஆண்டு காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்றிய ‘’தேசிய முன்னணி’’ எனது விருப்பத்துக்குரிய ஒன்று. வி.பி.சிங், ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ், மது தண்டவதே, ஆரிஃப் முகமது கான் ஆகிய தலைவர்கள் விருப்பத்துக்குரியவர்களாக இருந்தனர். அதே காலகட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண ஹெக்டே அவர்களும் விருப்பத்துக்குரியவர். 

1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் ராஜிவ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட போது நான் மிகவும் மனம் வருந்தினேன். ராஜிவ் படுகொலைக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று நரசிம்ம ராவ் இந்தியாவின் பிரதமர் ஆனார். 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அவர் நாட்டை வழிநடத்தினார். 

நரசிம்ம ராவ் என் பிரியத்துக்குரிய தலைவர். அவருடைய பதவிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் மேலும் பல ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளியலை உயர்த்துவதில் உதவி புரிந்தன. பல மொழிகள் அறிந்த அறிஞரான அவர் தேர்ந்த ராஜதந்திரியாகவும் விளங்கினார். அவருடைய சரிதமான ''The Half - Lion Man : How Narasimha Rao Tranformed Indian Economy'' என்ற நூலை முழுமையாக வாசித்திருக்கிறேன். அந்நூல் அவருடைய சிறப்புகளை முழுமையாகச் சொல்லக் கூடியது. 1996ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 140 எம்.பி க்களை மட்டுமே பெற்றது என்று கூறி இந்த குறைந்த எண்ணிக்கை காங்கிரஸ் வரலாற்றிலேயா இதுவே முதல் முறை என்று கூறி நரசிம்ம ராவ் அவர்களை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அகற்ற காங்கிரஸின் ஒரு குழு பெருமுயற்சி செய்து வென்றது. நெருக்கடி நிலைக்குப் பின் நடைபெற்ற 1977ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 154 எம்.பி க்களைப் பெற்றிருந்தது. எனினும் இந்த விஷயத்துடன் இன்னொரு விஷயத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டும். 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 44 எம்.பி க்களையும் 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 52 எம்.பி க்களையும் மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இருப்பினும் அப்போது நரசிம்ம ராவ் விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததைப் போலவோ ராவ் விலகியதைப் போலவோ ஏதும் நிகழவில்லை என்பதுடன் இந்த விஷயத்தை சேர்த்து யோசிக்க வேண்டும். 

1998ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரை நாட்டை ஆண்ட திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் மீது எப்போதும் பிரியம் உண்டு. தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய இந்தியாவின் நான்கு பெருநகரங்களை இணைக்க அவர் கொண்டு வந்த ‘’தங்க நாற்கர சாலைத் திட்டம்’’ மகத்தான ஒரு திட்டம். 1000 மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமமும் சாலையால் இணைக்கப்பட வேண்டும் என்ற திட்டத்துடம் கொண்டு வரப்பட்ட ‘’கிராம சதக் திட்டம்’’ முக்கியமான ஒரு திட்டம். பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெறுவதன் முதல் படியாக வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நம் தேசம் அணுகுண்டு சோதனையும் ஹைட்ரஜன் குண்டு சோதனையும் செய்தது என்பது நம் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல். 

இது ஒரு சிறு குறிப்பு மட்டுமே. இன்னும் பலர் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் நான் முக்கிய அம்சமாக நினைப்பது இதில் எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். நான் ஒரு மனிதனின் செயல்பாடுகளைக் காணும் போது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்குள் சென்று காண்பதில்லை என்பதற்கு இந்த பட்டியல் உதாரணமாக இருக்கிறது என்பதை அனுபவம் வாய்ந்தவர்கள் உணர்வார்கள். ஜனநாயக அரசியல் எல்லாருக்கும் பொறுப்புகளையும் கடமைகளையும் உரிமைகளையும் அளிக்கிறது. அதை அவரவர் அவர்களால் இயன்ற விதத்தில் செய்கிறார்கள். ஜனநாயக அரசியலின் சிறப்பும் அதுவே ; எல்லையும் அதுவே.