Wednesday 4 September 2024

பூம்புகார்

இன்று மாலை பூம்புகார் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். கடல் காண வேண்டும் என்ற உணர்வு இரண்டு நாட்களாக இருந்தது. கடற்கரையும் கடல் அலைகளின் ஸ்பரிசமும் மனதை இலகு ஆக்குபவை. மனதிற்கு இதம் அளிப்பவை.  

பூம்புகார் சிறு மீன் பிடி துறைமுகமாக உருவாகி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாகவே அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் கரையிலும் கடலில் 100 மீட்டர் அளவுக்கும் பாறைகள் கொண்டு வந்து போடப்பட்டன. இப்போது மேலும் சில விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிக படகுகள் நிற்க ஏற்பாடு நிகழ்ந்தால் மீன் பிடித்தல் அதிகமாகும். இந்த மீன்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை ஆவதால் ஊரின் பொருளியலும் பெருகும். தேசத்தின் பொருளியலும் பெருகும். மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை அங்கே ஒரு கலங்கரை விளக்கத்தை நிறுவியிருக்கிறது. இப்போது மீன் பிடி துறைமுகப் பணிகள் பக்கத்து கிராமமான வாணகிரி வரை நீண்டு சென்றுள்ளது. 

மாநில சுற்றுலாத் துறையின் சார்பில் சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்டேன். பூம்புகார் என்றால் மக்களுக்குக் கடல் தான். ஊரை அடைந்ததும் அவர்கள் காண விழைவதும் கடலையே. 

எங்கள் பகுதியில் இறந்தவர்கள் சடலம் எரியூட்டப்பட்டு அந்த அஸ்தி பூம்புகார் கடலில் கரைக்கப்படும். காவிரி கடலுடன் சங்கமாகும் இடம் என்பதால் மூத்தோர் வழிபாட்டுக்கு மிக உகந்த இடம் பூம்புகார். 

கரையிலும் கடலிலும் கொட்டப்பட்டுக் கிடந்த பாறைகளில் ஒன்றின் மீது அமர்ந்து கடலை ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் புத்துணர்ச்சியை உணர்ந்தது.