Friday 30 August 2024

வங்கி மேலாளரின் பொறுப்பற்ற செயல்களும் பொறுப்பற்ற பதில்களும்

 எனது வீட்டுக்கு அருகாமையில் 65 வயதான முதியவர் ஒருவர் வசிக்கிறார். இன்று காலை அவரை தற்செயலாக சாலையில் சந்திக்க நேர்ந்தது. அவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடர்பான ஒரு விஷயத்தை என்னிடம் சொன்னார். அதாவது, அவரது மகன் ஒரு சிறு தொகையை வங்கியில் கடனாகப் பெற்றிருக்கிறார். கடனுக்கு வட்டியும் கட்டி வந்திருக்கிறார். பின்னர் அவர் வெளிநாடு சென்று விட்டார். அந்த கடனுக்கான வட்டி மூன்று மாதங்களுக்கு மேல் செலுத்தப்படாததால் ‘’வாராக் கடன்’’ என அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வங்கி அந்த கடன் கணக்கை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்று விட்டது. அந்த தனியார் நிறுவனம் அப்போது இருந்த அசல் வட்டி சேர்த்து மொத்த தொகையில் கணிசமான ஒரு தொகையை செலுத்தி ’’ஒரு முறை தீர்வு’’ ( one time settlement) முறையில் செலுத்துமாறு கடிதம் அனுப்பியிருக்கின்றனர். மூன்று மாதத்தில் குறிப்பிட்ட மூன்று தினங்களில் செலுத்துமாறு கூறியிருக்கின்றனர். அதன்படி இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டன. மூன்றாவது தவணை குறிப்பிட்ட தேதிக்கு ஐந்து நாட்கள் தாமதமாக பணம் கட்டப்பட்டிருக்கிறது. மூன்றாவது தவணை IMPS முறையில் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு வருடமாக மாதத்துக்கு இரண்டு மூன்று அலைபேசி அழைப்புகள் அந்த கடன் கணக்கில் பணம் செலுத்துமாறு வந்து கொண்டேயிருந்திருக்கின்றன. முதியவர் பணம் செலுத்தியாகி விட்டது என்ற விஷயத்தைக் கூறியிருக்கிறார். ஆனால் மூன்றாவது தவணை பணம் வரவில்லை என்று கூறியிருக்கின்றனர். என்னிடம் முழு விபரத்தையும் கூறினார். 

முதியவரின் வீட்டுக்கு காலை 11 மணி அளவில் சென்று சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு அனுப்ப ஒரு கடிதத்தை தயார் செய்தேன். அதில் முதியவரின் மகனின் வங்கி கணக்கு எண், ‘’ஒரு முறை தீர்வு’’க்கு அனுப்பப்பட்ட கடிதம், மூன்று தவணைகளில் பணம் கட்டப்பட்ட விபரம் ஆகியவற்றின் விபரத்தைத் தெரிவித்து அதன் நகல்களை இணைத்து மேற்படி கடன் கணக்கை நிறைவு செய்து கடன் கணக்கை முடிக்கும் அறிக்கை வழங்குமாறு விண்ணப்பித்து மனு எழுதப்பட்டிருந்தது. முதியவர் அதில் கையெழுத்திட்டார். 

இந்த மனுவை நேரில் சென்று அளிக்காமல் விரைவுத் தபாலில் அனுப்பி விட்டு மறுநாள் வங்கி மேலாளரை நேரில் சந்திக்கலாம் என்பது எனது எண்ணம். வெளியூரில் வங்கியில் பணி புரியும் எனது சகோதரனை ஒத்த நண்பனுக்கு ஃபோன் செய்த போது அவன் முதியவருடன் நேரில் சென்று மனுவை அளிக்குமாறும் ஓரிரு நாளில் அவர்கள் அறிக்கை அளித்து விடுவார்கள் ; இந்த விஷயத்தில் வேறு சிக்கல் இல்லை ; எளிதான விஷயமே என்று கூறினான். அவன் சொல்லுக்கு மதிப்பளித்து முதியவருடன் வங்கிக்கு சென்றேன். 

அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் ஓர் இளைஞர். அவரது வயது 35 இருக்கலாம். முதியவர் அளித்த மனுவை வாங்கிப் பார்த்தார். முழுதாகப் படித்திருப்பாரா என்பது ஐயம். ‘’உங்கள் கடன் கணக்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்த கடன் கணக்குக்கும் வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் அந்த தனியார் நிறுவனத்தை மட்டுமே அணுக வேண்டும். எங்களிடம் வரக்கூடாது.’’ என்று சற்று கோபத்துடன் எதிர்வினையாற்றினார். 

65 வயது முதியவரிடம் 35 வயதான இளைஞர் இவ்விதமாக கோபமாக பதில் சொல்வது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. இருப்பினும் பொறுமை காத்தேன். ‘’ நீங்கள் வாய்மொழியாக எங்களுக்கு அளித்திருக்கும் பதிலை நாளை இந்த கடிதம் உங்களுக்கு பதிவுத் தபாலில் வரும் போது எழுத்துபூர்வமாக கொடுங்கள்.’’ என்று கூறி விட்டு முதியவரை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு வந்து விட்டேன். 

வெளியூர் வங்கியில் பணி புரியும் எனது நண்பனுக்கு ஃபோன் செய்து நடந்ததைக் கூறினேன். அவனுக்கு வங்கி அதிகாரி அளித்த பதில் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அவனால் நம்ப முடியவில்லை. ‘’அப்படியா பதில் சொன்னார்கள் ; அப்படி எப்படி சொல்ல முடியும்’’ எனக் கேட்டுக் கொண்டே இருந்தான். நான் மாலை 5 மணிக்கு மேல் ஃபோன் செய்கிறேன் என்று கூறி விட்டு ஃபோனை வைத்து விட்டேன்.

அந்த வங்கியின் சென்னை தலைமை அலுவலகத்துக்கு ஃபோன் செய்து வங்கியில் நடந்த விஷயத்தைக் கூறினேன். என்னிடம் ஃபோன் பேசிய அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். ‘’மேலாளர் ஏன் அப்படி சொன்னார்?’’ என்று கேட்டார். பின்னர் ‘’ஒரு முறை தீர்வு’’ தொகை முழுதாக வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தான் அளிக்கும் தனியார் நிறுவன எண்ணில் பேசி உறுதி செய்து கொள்ளுமாறு கூறினார். 

அவர் அளித்த எண் ஒரு பெண்மணியுடையது. அவர் அலுவலகம் மும்பையில் இருந்தது. நான் ஃபோன் செய்த போது நேரம் மதியம் 2.15. தான் இப்போது தான் மதிய உணவு அருந்த அமர்ந்ததாகவும் 10 நிமிடம் கழித்து பேச முடியுமா என்று அவர் கேட்டார். சரி என்றேன். அந்த இடைவெளியில் அந்த கடன் கணக்கு எண்ணை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினேன். 2.45க்கு ஃபோன் செய்தேன். அந்த பெண்மணி கடன் கணக்கு எண் மூலம் அதன் முழு விபரங்களைப் பார்வையிட்டிருந்தார் என்பதை அவர் அந்த விஷயம் குறித்து பேசிய தொனியிலிருந்து புரிந்து கொண்டேன். சென்னை அலுவலகத்தில் பேசியிருப்பதாகவும் சென்னை அலுவலகத்திலிருந்து இன்னும் சற்று நேரத்தில் தங்கள் எண்ணுக்கு அழைப்ப்பார்கள் ; அவர்களிடம் விபரம் சொல்லுங்கள். விஷயம் சுமுகமாக தீர்வு காணப்படும் ; என்ன தீர்வு கூறப்பட்டது என்பதை எனக்கு ஃபோன் செய்து சொல்லுங்கள் என்று கூறினார். உலகில் நூற்றில் ஓரிருவர் பொறுப்புடன் இருக்கிறார்கள். அவர்களாலேயே உலக இயக்கம் என்பது நிகழ்கிறது. மும்பை பெண்மணி அவ்விதமானவர். 

சென்னை அலுவலகத்திலிருந்து ஒரு இளைஞர் அழைத்தார். மூன்றாவது தவணை  IMPS முறையில் செலுத்தப்பட்டிருப்பதை தனக்கு மின்னஞ்சல் மூலம் ஸ்கேன் செய்து அனுப்ப முடியுமா என்று கேட்டார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஸ்கேன் இண்டர்நெட் மையத்திலிருந்து அனுப்பப்பட்டது. மையத்தின் வாசலுக்கு வந்து நாங்கள் இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்குள் சென்னையிலிருந்து ஃபோன் வந்தது. மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றது ; கணக்கை பார்வையிட்டோம்; முழுத் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.  நீங்கள் கணக்கு முடிக்கும் அறிக்கையை வங்கியில் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார். நான் இந்த விஷயத்தை உடன் மும்பை அலுவலகத்தில் உள்ள பெண்மணிக்கு தெரிவித்தேன். அவருக்கு மகிழ்ச்சி. 

முதியவரின் வீட்டுக்கு வந்து அஞ்சல் உறையில் காலையில் வங்கி மேலாளரிடம் அளிக்க எடுத்துச் சென்றிருந்த மனுவை இட்டு தபால் நிலையம் சென்று விரைவுத் தபால் மூலம் அந்த மனுவை வங்கி மேலாளருக்கு அனுப்பி வைத்தோம். விரைவுத் தபால் ரசீதை எங்கள் பிரதியில் ஒட்டி வைத்தோம். மாலை 5.30 ஆகி விட்டது. 

நான் வீட்டுக்கு வந்து நடந்த விஷயத்தை வங்கியின் ஆன்லைன் புகார் பிரிவில் பதிவு செய்ய வங்கியின் இணையப்பக்கத்துக்கு சென்றேன். புகார் அளிக்கும் பக்கம் வேலை செய்யவில்லை. வங்கியின் இணையப்பக்கத்திலிருந்து அவர்களுடைய ரீஜனல் ஆஃபிஸ் எண்ணை எடுத்து அதற்கு ஃபோன் செய்தேன். ரீஜனல் ஆஃபிஸ் அதிகாரியிடம் நடந்ததைக் கூறினேன். அவர் நிகழ்ந்த தவறுக்கு வங்கி சார்பாக வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். 

இதைப் போன்ற விஷயங்களை வங்கி உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பேன். வங்கி உயர் அதிகாரிகள் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களும் குடிமக்களும் எவ்விதம் வங்கி மேலாளர்களாலும் ஊழியர்களாலும் நடத்தப்படுகின்றனர் என்பதை இவ்விதமான சம்பவங்கள் மூலமே அறிய முடியும். வாடிக்கையாளர்கள் வங்கியில் எவ்விதமாக நடத்தப்பட்டாலும் அமைதியாகப் போய் விடுவார்கள் என்பதாலேயே வங்கி மேலாளர்கள் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்கிறார்கள் ; பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். 

ரீஜனல் ஆஃபிஸில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த விஷயம் வாய்மொழியாக ( word of mouth) அந்த மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பரவும். அது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தார்மீக நெருக்கடியை உண்டாக்கும். முதியவருக்கு செய்த பிழையை மேலும் ஒருவருக்கு இனி செய்யாமல் இருப்பார். 

அந்த வங்கியின் ஆன்லைன் புகார் பிரிவு இயங்காமல் இருப்பதை தலைமை அலுவலகத்தில் இருக்கும் மூன்று உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன். அது சரியானவுடன் ஆன்லைன் புகார் அளிக்க உள்ளேன். புகார் அளிப்பதன் நோக்கம் நடந்த விஷயத்தை வங்கி உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்வதே தவிர எவரையும் தண்டிக்கும் நோக்கம் இல்லை. வங்கி மேலாளர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. 

நான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மீது நம்பிக்கை கொண்டவன். இந்த பதிவில் கூட சம்பந்தப்பட்ட வங்கியின் பெயரைக் கூறாமல் தவிர்த்திருக்கிறேன் என்பதிலிருந்து அதனைப் புரிந்து கொள்ளலாம்.