Thursday, 17 October 2024

ஔவை - 112 தனிப்பாடல்கள்

நண்பர் ஒருவர் அவரது ஊழியர் ஒருவர் வழியே ஒரு தொகையைக் கொடுத்தனுப்பவதாகச் சொன்னார். எப்போது என்று கேட்டார் அமைப்பாளர். அடுத்த நாள் காலை என்றார் நண்பர். எத்தனை மணி என்றார் அமைப்பாளர். எட்டு மணி என்றார் நண்பர். 

காலை எட்டு பதினைந்துக்கு நண்பருக்கு ஃபோன் செய்தார் அமைப்பாளர். யாரும் இன்னும் வரவில்லை என்ற செய்தி சொன்னார். 

8.30க்கு நண்பரிடமிருந்து ஃபோன். இன்னும் ஒரு மணி நேரம் கழித்து தனது ஊழியருக்கு ஃபோன் செய்க என்று. 

அமைப்பாளர் அஞ்சல் அலுவலகம் சென்றார். பணம் செலுத்தும் படிவம் ஒன்றும் பணம் எடுக்கும் படிவம் இரண்டும் நெஃப்ட் படிவம் இரண்டும் அஞ்சலக சாளரத்திலிருந்து பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்தார். ஐந்து படிவங்களையும் பூர்த்தி செய்தார். நேரம் 9.50 . நண்பரின் ஊழியருக்கு ஃபோன் செய்தார். இன்னும் 30 நிமிடத்தில் தங்களைச் சந்திப்பேன் என்றார். 

அமைப்பாளர் பொறுமையுடன் இணையத்தில் இருந்த ஔவையார் தனிப்பாடல்கள் என்ற நூலில் இருந்த தனிப்பாடல்களை வாசித்துக் கொண்டிருந்தார். வாசிக்க வாசிக்க ஔவையாரின் சொற்களுக்குள் முழுதாகச் சென்று சேர்ந்து ஔவைத் தமிழை மனத்தில் முழுமையாக நிரப்பிக் கொண்டார். பழைய செய்யுள்களையும் பாடல்களையும் மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும் என்பது அமைப்பாளரின் விருப்பம். ஒரு சிறுவனின் மன்நிலைக்குச் சென்றால் சிறுவனைப் போல மனப்பாடம் செய்யலாம். நவீன கவிதையில் கவிதை வாசிப்பு பிரதி கண் முன் இருக்கையில் வாசிப்பது. பழங்கவிதைகளிலும் அத்தகைய வாசிப்பே நவீன கவிதை வாசகனுக்கு நிகழும் என்பதால் பிரதியைக் கண்ணுற்றே பழங்கவிதையையும் வாசிக்க முடியும். 

10.30க்கு நண்பரின் ஊழியருக்கு ஃபோன் செய்தேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் என்னைச் சந்திப்பேன் என்றார். நான் வாசலில் பாஸ்புக், படிவங்கள் சகிதம் இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து காத்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து வந்தார். தொகையைப் பெற்றுக் கொண்டு அஞ்சல் அலுவலகம் விரைந்தேன். 

காத்திருக்கும் நேரத்தில் ஔவையின் தனிப்பாடல்களை வாசித்தது அந்த பொழுதைப் பயன்படுத்த உகந்த விஷயமாக இருந்தது. எதுவும் செய்யாமல் வெறுமனே காத்திருந்தால் மனம் அமைதியின்றி அலைந்து சோர்வுற்றிருக்கும். அதில் ஒரு பாடல் என்னை உற்சாகம் கொள்ளச் செய்தது. நிறைய சிந்திக்க வைத்தது. அது ஒரு புறநானூற்றுப் பாடல்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர் 
அவ்வழி நல்லை வாழிய நிலனே

இதன் பொருள் 

நாடோ காடோ
மேடோ பள்ளமோ
எங்கே ஆடவர் நல்லவர்களோ
அங்கே
செழிப்பாக இருப்பாய் நிலமே

ஆடவர்கள் நல்லவர்களாக இருக்கும் நிலத்தில் வன்முறை இருக்காது. குற்றச் செயல் இருக்காது. சுரண்டல் இருக்காது, இப்படியும் கூறலாம் ல் ஆடவர்கள் நல்லவர்களாக இருக்கும் நிலத்தில் வன்முறை மிகக் குறைவாக இருக்கும். குற்றச் செயல்கள் மிகக் குறைவாக இருக்கும். சுரண்டல் இல்லாமல் இருக்கும். அவ்வாறான நிலம் செழிக்கட்டும் என்கிறார் ஔவை.