நம் மரபு மங்களத்தை மேன்மை மிக்க வாழ்க்கை சாத்தியமாகக் காண்கிறது. ஆசியளிக்கும் போது ‘’மங்களம் உண்டாகட்டும்’’ என வாழ்த்துவது நமது நாட்டின் வழக்கம். ஓர் இடத்தில் மங்களம் நிறையும் போது அந்த இடத்தில் இருப்பவர்களின் அகங்கள் நெகிழ்கின்றன; மகிழ்கின்றன. நாம் நம்மை நமது சூழ்நிலைகளை இன்னும் ஆழமாக மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள மங்களமான சூழ்நிலை துணை நிற்கிறது.
எனது நண்பர் ஒருவரைக் காண நேற்று சென்றிருந்தேன். ஊரிலிருந்து 3 மணி நேர பயண தூரத்தில் நண்பரின் இல்லம் அமைந்துள்ளது. அவருடன் எனக்கு நல்ல பழக்கம். இருப்பினும் அவரது வீட்டுக்கு முதல் முறையாக இப்போது தான் செல்கிறேன். அவருக்கு இரு குழந்தைகள். மகனின் பெயர் விவேகானந்தன். மகளின் பெயர் நிவேதிதா.
எனது பயணம் சட்டென முடிவானது. நண்பரின் மனைவி குறுகிய நேரத்தில் மிகச் சுவையான உணவை தயார் செய்திருந்தார். கோஸ் சாம்பார். வெண்டைக்காய் கறி. சேப்பங்கிழங்கு வறுவல். புளிக்குழம்பு. மதிய உணவின் நேரம் தாண்டியே சென்று சேர்ந்தேன் என்பதால் எனக்கு நல்ல பசி. திருப்தியாக உணவுண்டேன்.
நண்பரின் குழந்தைகள் ஒவ்வொருவராக பள்ளியிலிருந்து வந்தனர். நண்பரின் குடும்பத்தில் அனைவரும் நுண்கலையில் தேர்ச்சி கொண்டவர்களாக இருப்பது அதிசயிக்கத்தக்கது. நண்பர் ஓவியர் ; இலக்கிய வாசகர். நண்பரின் மனைவி ஓவியர். விவேக் இசை பயில்கிறான். நிவேதிதாவும் இசை பயில்கிறாள். நிவேதிதா சிறப்பாக ஓவியம் தீட்டுகிறாள்.
விவேக் எங்களுக்காக மிருதங்கம் வாசித்துக் காண்பித்தான். அவனது மெல்லிய விரல்கள் மிருதங்கத்தில் அதிர்வு உண்டாக்கி எழுப்பிய இசை நண்பரின் வீட்டையே மங்களத்தால் நிறையச் செய்தது. எங்கள் மனங்களும் மங்களத்தால் நிறைந்தன. இசை நிகழ்த்தும் மாயத்தை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.
பின்னர் நிவேதிதா கீ - போர்டில் சில ஒலிக்குறிப்புகளை வாசித்துக் காண்பித்தாள். அவள் வரைந்திருந்த நீல மலைத்தொடர் ஓவியங்களைக் காட்டினாள். எனக்கு ஒரு ஜென் கவிதை ஞாபகத்துக்கு வந்தது.
நீல மலைத்தொடர் தானாகவே
நீலமலைத்தொடராக இருக்கிறது
வெண்ணிற மேகங்கள் தாமாகவே
வெண்மேகங்களாய் இருக்கின்றன
நண்பரும் நண்பரின் குடும்பத்தினரும் அகத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஆனார்கள்.
குழந்தைகளுக்கு எனது பரிசாக சில புத்தகங்களை அனுப்பி வைக்க வேண்டும் என எண்ணினேன். சுவாமி சித்பவானந்தர் சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் சரிதத்தை எழுதியுள்ளார். அவற்றை அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினேன்.
முயன்றால், எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் உலகை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.