ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி ரெட்டியார்
காந்தி யுகம் இலட்சியவாதிகள் பலரை உருவாக்கியிருக்கிறது. மதிப்பீடுகளின்
மீது முழு நம்பிக்கை கொண்ட விழுமியங்களை தங்கள் வாழ்வின் நெறியாகவும் நடைமுறையாகவும்
கொண்ட நூற்றுக்கணக்கானோர் காந்தியால் ஊக்கம் பெற்று ஆன்மீகம், அரசியல், பொதுப்பணி,
மருத்துவம், கட்டுமானம் என பல துறைகளில் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். தமிழகத்தில்
உருவான காந்தியர்கள் அனேகம். அவர்களில் முக்கியமானவர் ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி
ரெட்டியார். அவர் காந்திய இயக்கத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நாட்டுக்கும் ஆற்றிய
தொண்டுகள் அளப்பரியவை. தனது வாழ்க்கைப்பாதையை அவர் அமைத்துக் கொண்ட விதம் மகத்தானது.
புதுச்சேரிக்கும் திண்டிவனத்துக்கும் இடையில் இருக்கும் சிறு
கிராமமான ஓமந்தூரில் பெரியவளைவு என் அழைக்கப்படும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்
ராமசாமி ரெட்டியார். சிறு வ்யதிலிருந்தே விவசாயத்தின் மீது அவருக்கு பேரார்வம் இருந்திருக்கிறது.
அதிலும் தோட்டப்பயிர்கள் மீது வாழ்நாள் முழுவதும் தனிப்பிரியம் கொண்டவராயிருந்தார்.
எலுமிச்சையும் நெல்லியும் அவரது விருப்பத்துக்குரிய மரங்கள். அவரது உணவில் தினமும்
நெல்லிக்காய் பச்சடி இருந்திருக்கிறது. அவரைச் சந்திக்க வருபவர்களுக்கு நீரில் எலுமிச்சையும்
உப்பும் கலந்த எலுமிச்சை சாறு வழங்கப்பட்டிருக்கிறது.
விழுப்புரத்தில் தன் பள்ளிக் கல்வியை பயில்கிறார். காஞ்சி
சங்கராச்சாரியார் பூர்வாசிரமத்தில் அதே பள்ளியில் பயின்றவர். இருவரும் அப்பள்ளியில்
ஒரே காலத்தில் பய்ன்றிருக்கின்றனர். இருவரும் சக மாணவர்களாக இருந்திருக்கின்றனர். தந்தையின்
மறைவால் எட்டாம் வகுப்புக்கு மேல் தனது கல்வியைத் தொடர முடியாத ரெட்டியார் கிராமத்தில்
விவசாயம் பார்க்க ஆரம்பிக்கிறார். திருவாசகத்தின் மீதும் திருவருட்பா மீதும் பெரும்
ஈடுபாடு கொள்கிறார். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் தன்னை இணைத்துக்
கொள்கிறார். காந்தியின் கதர் இயக்கத்துக்காக வாரம் ஒருநாள் தன் தோளில் கதராடைகளை சுமந்து
கொண்டு ஊர் ஊராக சென்று விற்பனை செய்திருக்கிறார்.கதர் இயக்கத்தில் பங்கு கொண்டதிலிருந்து
தனது வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையை மட்டுமே உடுத்தியிருக்கிறார். அப்பிரதேசத்தின்
பெரும் நிலக்கிழாரான அவர் காந்தியின் சொல்லுக்காக ஊர் ஊராக தனது தோளில் கதர்த் துணிகளை
சுமந்து கொண்டு நடந்து சென்று விற்பனை செய்யும் காட்சியை கற்பனை செய்து பார்க்கும்
போது பெருவியப்பு உண்டாகிறது.தாயின் விருப்பப்படி திருமணம் நிகழ்கிறது. மகன் பிறக்கிறான்.
மகன் பிறந்த சில ஆண்டுகளில் மகனும் மனைவியும் மரணம் அடைகிறார்கள். அதன் பின் தனது வாழ்வை
ஒரு துறவியைப் போல் வாழ்கிறார் ரெட்டியார். அரசியலில் உயர் பதவிகளை வகித்தாலும் தனது
எளிமையை அவர் எந்நாளும் கைவிடவில்லை.
தேடி வந்த பதவிகளிலிருந்து கூட சற்று தள்ளியிருப்பவராகவே எப்போதும்
இருந்திருக்கிறார். அத்தகைய அரசியல் தலைவர்களை உருவாக்கியிருக்கிறது என்பதே காந்திய
யுகத்தின் சிறப்பு. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மீதும் இராமலிங்க வள்ளலார் மீதும் பெரும்
பக்தி கொண்டவராக இருந்த ஓமந்தூரார் சென்னை மாகாண முதல்வராக இருந்து அப்பதவியிலிருந்து
அகன்ற பின் வடலூரில் வள்ளலார் குருகுலம் என்ற கல்வி அமைப்பை உருவாக்கி அங்கே கல்விப்பணி
ஆற்றுகிறார். சில நூறு பேரை மட்டுமே மக்கள்தொகையாகக் கொண்ட அக்கிராமத்தில் ஒரு மாநில
முன்னாள் முதலமைச்சர் மிக எளியவராய் கல்விப்பணி ஆற்றியதை நிகழ்த்தும் காட்சியை கற்பனை
செய்து பார்க்கும் போது இலட்சியவாதத்தின் மகத்துவத்தை உணர முடிகிறது. அப்போதைய சென்னை
மாகாணம் என்பது தற்போதுள்ள தமிழ்நாட்டுடன் கேரளத்தின் பெரும்பான்மையான பகுதிகளையும்
கர்நாடகத்தின் பெரும்பான்மையான பகுதியையும் தற்போதைய ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள்
முழுமையையும் ஒரிஸ்ஸாவின் தென் பகுதியையும் தன்னகத்தே கொண்டது.
காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைவது தொடர்பாக நேரு மேற்கொண்ட
நடவடிக்கைகளிலும் மேற்கொண்ட அணுகுமுறையிலும் ஓமந்தூராருக்கு பெரும் ஏற்பின்மை இருந்திருக்கிறது.
ஹைதராபாத் நிஜாம் ஹைதராபாத்தை பாகிஸ்தானுடன் இணைக்க முயற்சிப்பதை சென்னை மாகாண முதலமைச்சராக
உன்னிப்பாக கவனித்து பிரதமர் நேருவுக்கு தேவையான எச்சரிக்கைகளை அளித்து சர்தார் வல்லபாய்
படேலுக்கு உறுதுணையாய் இருந்து ஹைதராபாத் இந்தியாவுடன் இணைவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
ஓமந்தூரார் புதுச்சேரிக்கு மிக அருகில் இருப்பவர். எனவே புதுச்சேரியின்
சூழ்நிலையை முழுவதும் உணர்ந்தவர். புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதில் நிகழ்ந்த காலதாமதம்
அவரை வருத்தம் அடையச் செய்கிறது. சில மாதங்களில் நிகழ்ந்திருக்க வேண்டிய நிகழ்வை ஆறு
வருடங்கள் என ஆக்கியது நேருவின் அரசு என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கிறது. புதுச்சேரி
இந்தியாவுடன் இணைந்ததில் ஓமந்தூராருக்கு பெரும் பங்கு உண்டு. அவர் சென்னை மாகாண முதல்வராக
இருந்த போதே புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது.
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் சீடராக விளங்கியவர் ராமசாமி ரெட்டியார்.
ரமணாஸ்ரமத்தில் பல நாட்கள் தங்கும் வழக்கத்தைக் கொண்டவராய் இருந்திருக்கிறார். மாகாண
முதல்வர் பதவியை ஏற்பதா வேண்டாமா என்ற அகக் குழப்பம் ஏற்பட்ட போது ஸ்ரீரமணரிடம் அதனைத்
தெரிவித்திருக்கிறார். அடுத்த நாள் அங்கே இருந்தவர்களிடம் ரமணர் ஓமந்தூர் ரெட்டியாரை
சுட்டிக் காட்டி இவருக்கு கூடிய விரைவில் அரசாங்கத்தின் பெரிய பதவி வரப்போகிறது எனக்
கூறியிருக்கிறார்.புதுச்சேரியில் அரவிந்தருடனும் அரவிந்த ஆசிரமத்துடனும் நெருங்கிய
தொடர்பு உடையவராக இருந்திருக்கிறார். திருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகளிடம் பக்தியும்
மரியாதையும் கொண்டவராயிருந்திருக்கிறார். திருப்பராய்த்துறை
சித்பவானந்த சுவாமிகளின் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ஓமந்தூரார்.
தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்கள் ஓமந்தூரார்
மீது பெரும் மதிப்பும் பிரியமும் கொண்டவராக விளங்கியிருக்கிறார். ஓமந்தூர் ரெட்டியார்
வாழ்க்கை நூல் வடிவம் பெற வேண்டும் என்ற தீவிரமான விருப்பம் நா. மகாலிங்கம் அவர்களுக்கு
இருந்தது. தமிழின் பயண இலக்கியத்தின் முன்னோடியான சோமலெ அவர்களை ஓமந்தூர் ரெட்டியார்
அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறு பணிக்கிறார் பொள்ளாச்சி மகாலிங்கம். ஆறு மாத
காலம் தமிழகமெங்கும் பயணித்து நூற்றுக்கணக்கானோரை நேரடியாகச் சந்தித்து இதழ்களையும்
ஆவணங்களையும் ஆய்வு செய்து சோமலெ அவர்கள் ஓமந்தூராரின் வாழ்க்கையை ‘’விவசாய முதலமைச்சர்’’
என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். வேதாரண்யம் குருகுலம் அதனை வெளியிட்டிருக்கிறது.
அவர் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. ரெட்டியார் திண்டிவனத்தில்
ஒரு பெரியவரைச் சந்திக்கச் செல்கிறார். எவரையும் சந்திக்கச் செல்லும் போது மரியாதையின்
அடையாளமாக எலுமிச்சைப் பழம் அளிப்பது தமிழ் மரபு. எப்போதும் தன் தோட்டத்திலிருந்து
எலுமிச்சைப் பழம் கொண்டு செல்லும் ரெட்டியார் அன்று மறதியாக தோட்டத்தில் பழம் பறித்து
எடுத்துக் கொள்ளாமல் சென்று விட்டார். திண்டிவனத்தில் சாலையோரத்தில் எலுமிச்சைப் பழம் விற்கும் பாட்டியிடம் சென்று பழம் என்ன விலை
என்று கேட்கிறார் ரெட்டியார். பாட்டி விலையைக் கூற விலையை சற்று குறைத்துத் தருமாறு
கேட்கிறார் ரெட்டியார். அதற்கு அந்த பாட்டி இது பேரம் பேசி வாங்க வேண்டிய சரக்கு அல்ல
; ஓமந்தூர் ரெட்டியார் தோட்டத்தில் விளைந்தது. மரத்துக்குத் தேவையான ஊட்டத்தை சரியான
காலத்தில் கொடுத்து நாளும் அதன் வளர்ச்சியைக் கண்காணித்து அக்கறையுடன் பராமரித்து வளர்க்கப்பட்ட
மரத்தின் பழங்கள் இவை. மற்ற எலுமிச்சைப் பழங்களுக்கும் ரெட்டியார் தோட்டத்து பழங்களுக்கும்
தரத்திலும் உருவத்திலும் பெரும் வேறுபாடு உண்டு. தரமான பொருளுக்கு யாரும் பேரம் பேச
மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் அந்த எலுமிச்சை விற்கும் பாட்டி.
ரெட்டியார் தோட்டத்து எலுமிச்சைப் பழங்கள் போல தமிழக அரசியலில்
ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி ரெட்டியாரும் தனித்துவம் கொண்டவர்தான்.