Sunday, 13 October 2024

இனியன் - படைப்பூக்கம் மிக்க சிறுவன்

நேற்று பணி நிமித்தம் சென்னை செல்ல வேண்டியிருந்தது. திருச்சி - சென்னை சோழன் எக்ஸ்பிரஸில் சென்னைக்குப் பயணமானேன். என்னருகே ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அவன் தன் அன்னையுடன் பாட்டி வீட்டுக்கு சென்று விட்டு காலாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தான். நான் சிறுவர்களுடன் உரையாடுவதை எப்போதும் விரும்புவேன்.  அவர்கள் உலகம் குதூகலம் மிக்கது. அவர்களுடன் உரையாடும் போது நாமும் அந்த குதூகலத்தின் உலகுக்கு சில கணங்களேனும் செல்கிறோம். 

அந்த சிறுவனின் பெயர் இனியன். பெயருக்கு ஏற்ப சுபாவத்திலும் இனிமை மிக்கவன். அவனுக்கு எட்டு வயது. சென்ற ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் கும்பகோணத்தில் இரண்டாம் வகுப்பு படித்திருக்கிறான். பின்னர் அவன் பெற்றோர் அவனை சென்னைக்கு அழைத்து வந்தனர். அங்கே அவனை ஒரு சி.பி.எஸ்.இ பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் கணக்கில் அவனை மூன்றாம் வகுப்பு சேர்க்க வயது சில மாதங்கள் குறைவாக இருந்திருக்கிறது. அதனால் மீண்டும் இரண்டாம் வகுப்புக்கே அட்மிஷன் தரப்பட்டிருக்கிறது. தான் ஏன் இரண்டு முறை இரண்டாம் வகுப்பு படிக்கிறேன் என்பது இனியனுக்கு புரியவேயில்லை. 

பாடங்களில் நூற்றுக்கு 95 மதிப்பெண்களுக்கு மேல் எப்போதும் எடுக்கிறான். ஆனால் ஏன் அந்த ஐந்து மதிப்பெண்கள் குறைகின்றன ; தனது வெளிப்பாட்டில் குறைபாடு இருக்கிறதா என்ற ஐயம் அவனுக்கு இருந்தது. 

ஓவியங்கள் சிறப்பாக வரைகிறான். அவனுடைய வயதுக்கு அவனது ஓவியங்களில் வெளிப்படும் படைப்புத்திறன் அற்புதமான ஒன்று. 

கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறான். தனது நண்பர்களுடன் விளையாடும் போது தான் கோல் - கீப்பராக இருப்பதாகக் கூறினான். 

மழலைக்குரல் அவனுக்கு இன்னும் மாறவில்லை. அது அவனை மேலும் இனிமையானவனாக உணர வைக்கிறது. 

யாரோ சொல்லி கேள்விப்பட்டு அவனுக்கு ஜப்பான் மிகவும் பிரியமான நாடாகி விட்டது. அவன் கராத்தே பயில்கிறான் என்பதால் ஜப்பானிய சாமுராய் வாழ்க்கை முறை மீது ஈடுபாடு உண்டாகி விட்டது. தான் ஒரு சாமுராயாக வாழ வேண்டும் என்பது அவன் விருப்பம். ஜப்பான் மீதான் ஆர்வத்தில் அவன் செய்திருக்கும் செயல் வியப்பளிப்பது. இணையத்தின் உதவியால் முழுக்க முழுக்க தன்னுடைய முயற்சியால் ஜப்பானிய அரிச்சுவடியை தனது கணிணியில் தரவிரக்கம் செய்து தினமும் அரைமணி நேரம் ஜப்பானிய மொழி பயில்கிறான். இது முழுக்க முழுக்க அவனே செய்யும் செயல். 

என்னிடம் உங்களுக்கு மாங்கா காமிக்ஸ் தெரியுமா என்று கேட்டான். மாங்கா காமிக்ஸ் என்பது ஜப்பானின் சிறப்பான கலை வடிவம். பகவான் புத்தர் குறித்த மாங்கா காமிக்ஸ் உலகப் புகழ் பெற்றது. புத்தர் குறித்த மாங்கா காமிக்ஸை நான் அவனுக்கு கூடிய விரைவில் பரிசளிப்பேன் என்று அவனிடம் சொன்னேன். 

அவனுடைய அன்னை அவனைக் குறித்து கவலைப்படுகிறார். மிகவும் சென்சிடிவான குழந்தையாக இருக்கிறான் என. அவன் உயர் நுண்ணறிவு கொண்ட குழந்தை. எதிர்காலத்தில் அப்துல் கலாம் போல சிறப்பாக வருவான் என்று அவரிடம் சொன்னேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.