Monday, 21 October 2024

இன்னொரு அன்னை

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். என் மீது மிகுந்த பிரியமும் அணுக்கமும் கொண்டவர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சந்தித்தோம். அன்றிலிருந்து இன்று வரை எங்கள் நட்பும் பிரியமும் அணுக்கமும் வளரும் பிறையென வளர்ந்து கொண்டே செல்கிறது. முழுக்க முழுக்க பிரியத்தாலும் அன்பாலும் மட்டுமே ஆன உறவு அது. சந்தித்த முதல் நாள் எந்த உணர்வுடன் இருந்தோமோ அதே உணர்வுடனேயே ஒவ்வொரு முறையும் சந்திக்கிறோம். இந்த பிரம்மாண்டமான உலகில் நன்மைகள் மட்டும் நிறைந்திருக்கும் அகம் கொண்ட என் நண்பன் இனிமையை மட்டுமே உணர வேண்டும் என நான் விரும்புகிறேன். குழந்தையை பள்ளிக்கு அனுப்பி விட்டு நாளெல்லாம் குழந்தையின் நினைவில் காத்திருக்கும் அன்னையின் மனநிலைக்கு சமமானது அந்த உணர்வு. நண்பரின் அன்னை மிகவும் அபூர்வமான ஆளுமை. தனது வாழ்வில் மிகக் கடுமையான சூழ்நிலைகளைக் கடந்து வந்தவர். தனது குழந்தைகளின் நல்வாழ்வுக்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க பெரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். தனது மகள் வட இந்தியாவில் பணி புரிய நேர்ந்த போது அவருக்கு உதவும் விதமாக இரண்டு ஆண்டுகள் வட இந்தியாவில் உடனிருந்தார். இந்த முடிவை அவ்வளவு எளிதில் யாரும் எடுத்து விட மாட்டார்கள். அவர் எடுத்த அந்த முடிவு அவரது மகள் அமெரிக்கா செல்ல நேர்ந்த போது அவருக்கு அது பெரிதும் உதவியாக இருந்தது. நண்பரின் அன்னையின் சுபாவம் மிக்க இனிமை கொண்டது. அவரது சொற்கள் எப்போதும் இனியவையாகவெ இருந்திருக்கின்றன. வாழ்க்கையை வாழ்க்கைச்சூழலை எப்போதும் நம்பிக்கையுடன் அணுகி நம்பிக்கை அளிக்கும் சொற்களையே எப்போதும் கூறுபவர். இவ்விதமானவர்களே பண்பாட்டின் வேர் பொன்றவர்கள். இவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமுமே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான நம்பிக்கையின் விதைகளாகின்றன. அவர் இல்லத்தை பராமரிக்கும் விதம் அலாதியானது. இல்லத்தை மிகத் தூய்மையாகவும் மிகுந்த அழகியலுடனும் பராமரிப்பார், கம்ப ராமாயணமும் வியாச பாரதமும் அவருக்கு விருப்பமான செவ்வியல் இலக்கியங்கள். அவர் சிறுமியாக இருந்த போது''கம்பன் அடிப்பொடி'' சா. கணேசன் அவர்கள் இல்லத்துக்கு பக்கத்தில் வசித்திருக்கிறார். சா.கணேசன் அவர்கள் ''கன்னித் தமிழ் வாழ்க ; கம்பன் புகழ் வாழ்க'' என தன்னை ஒத்த குழந்தைகளுக்கு எப்போதும் சொல்லித் தருவதை நினைவு கூர்வார். பேரக் குழந்தைகள் அமெரிக்காவிலிருந்து வரும் போது அம்மாச்சி அம்மாச்சி என்று அவரை விட்டுப் பிரியாமல் இருப்பார்கள். பெரிய பேரன் திடீரென நினைத்துக் கொண்டால் அவன் அம்மாச்சியிடம் ஆரஞ்ச் ஜுஸ் வெண்டும் என்பான்.எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதனை ஒத்தி வைத்து விட்டு ஆரஞ்ச்சு ஜூஸ் போட்டுத் தருவார். அவன் தன் அன்னையிடம் காட்டும் பிரியத்தை விட அம்மாச்சியிடம் காட்டும் பிரியம் அதிகம் என்று தோன்றும். நண்பரின் அன்னையும் தந்தையும் என்னை அவர்களின் இன்னொரு மகனாகவே கருதுகிறார்கள்.அன்பு என்னை எப்போதும் கடனாளியாக்குகிறது. அன்புக்கு ஏது கைம்மாறு?