Friday, 18 October 2024

ஒப்புகைச் சீட்டு குறித்த புகாரின் தமிழாக்கம்

 அனுப்புநர் 

ர.பிரபு
*****
*****
*****
பெறுநர்
அஞ்சல்துறை கண்காணிப்பாளர்
மயிலாடுதுறை

ஐயா,

மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலையத்தில் அஞ்சலக சேமிப்புக் கணக்கிலிருந்து நெஃப்ட் அனுப்பும் போது நெஃப்ட் படிவத்தினைப் பூர்த்தி செய்து பணம் எடுக்கும் படிவத்துடன் இணைத்து வாடிக்கையாளர்கள் அளிக்கும் போது அவற்றை சரிபார்த்து விபரங்களைக் கணிணியில் உள்ளிட்டு நெஃப்ட் படிவத்தின் ஒப்புகைச் சீட்டை தங்கள் கையெழுத்தில் எழுதி ஒப்புகைச் சீட்டினை அளிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட ஊழியரின் கடமை.   மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலையத்தில் இந்த முறைமை  பின்பற்றப்படுவதில்லை. 

16.10.2024 அன்று என்னுடைய அஞ்சலக சேமிப்புக் கணக்கிலிருந்து நெஃப்ட் முறையில் பணம் டிரான்ஸ்ஃபர் செய்ய மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலையத்துக்கு காலை 11 மணிக்கு வந்திருந்தேன். நெஃப்ட் படிவத்தை அதற்குரிய ஊழியரிடம் அளித்தேன். ஒப்புகைச் சீட்டினை அடுத்த நாள் காலையிலோ அல்லது அன்றைய தினம் மாலையோ பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். எனக்கு அந்த ஒப்புகைச் சீட்டினை யாருக்கு பணம் அனுப்பினேனோ அவர்களுக்கு ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய அவசியம் இருந்தது என்பதால் எனக்கு ஒப்புகைச் சீட்டினை உடனே வழங்குமாறு கூறினேன். என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் காத்திருந்தேன். அதன் பின் ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. அந்த ஒப்புகைச் சீட்டில் யூடிஆர் எண் குறிப்பிடப்படவில்லை. எந்த கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டது, அந்த கணக்கு எண், வங்கி பெயர், வங்கி கிளை அதன் ஐ ஃப் எஸ் சி குறியீடு ஆகியவை மட்டுமே குறிப்பிடப்பட்டு ஒப்பத்துடன் அஞ்சல் அலுவலக முத்திரை இடப்பட்டிருந்தது. இந்த ஒப்புகை அளிக்க 90 நிமிடம் தேவையா என்பதை சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

எந்த அலுவலகத்திலும் ஒரு படிவம் அளிக்கப்பட்டால் அதற்கான ஒப்புகை வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை முறைமை. வாடிக்கையாளருக்கு தான் அந்த அலுவலகம் வந்து எந்த ஒரு படிவத்தையும் அளித்ததற்கு அதுவே அத்தாட்சி. வாடிக்கையாளர்கள் எந்த அலுவலகத்தின் சாளரத்துக்கும் வெளிப்பக்கத்தில் இருக்கிறார்கள். சாளரத்தின் உள்பக்கத்தில் ஊழியர்கள் இருக்கிறார்கள். அலுவலக முறைமைகளைப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு வாடிக்கையாளர்களுக்கும் இருக்கிறது. ஊழியர்களுக்கும் இருக்கிறது. ஊழியர்கள் தங்கள் பொறுப்பு காரணமாக அலுவலக முறைமைகளுக்கு மேலும் கட்டுப்பட்டவர்கள். 

வாரத்தின் ஒரு சில நாட்களோ மாதத்தின் ஒரு சில நாட்களோ அஞ்சல் அலுவலகம் வரும் வாடிக்கையாளர் அல்லது வாடிக்கையாளர்கள் வருடத்தின் வேலை நாட்கள் அனைத்திலும் பணி புரியும் ஊழியர்களுக்கு முறைமை குறித்து குறிப்புகள் அளித்துக் கொண்டிருப்பது இயலாதது என்பதை எவரும் ஒத்துக் கொள்வார்கள்.அலுவலக முறைமை குறித்த குறிப்புகளை ஊழியர்களுக்கு அளிப்பது வாடிக்கையாளர்களின் பொறுப்போ வேலையோ அல்ல. சாளரத்துக்கு வெளியே இருக்கும் ஆயிரம் வாடிக்கையாளர்கள் சாளரத்துக்கு உள்ளே இருக்கும் ஏழு ஊழியர்களுக்கு முறைமைகளை விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தால் அலுவலகத்தில் வேறு எந்த பணியும் நிகழாது. அலுவலகத்தில் கூச்சலும் குழப்பமும் மட்டுமே நிகழும். 

அஞ்சல் துறை நாட்டுக்கு அளிக்கும் சேவை என்பது மிகப் பெரியது. அஞ்சல்துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பை நான் பெரிதும் மதிப்பவன். அஞ்சல்துறை மீது மதிப்பு கொண்டவன் என்பதாலேயே இந்த விஷயத்தை சுட்டிக் காட்டுகிறேன். 

ஒரு வாடிக்கையாளர் எந்த அலுவலகத்திலும் ஒரு சேவைக் குறைபாடை உணர்ந்தால் அதனை அந்த அலுவலகத்தின் உரிய மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் அந்த விஷயம் குறித்து விசாரிக்கும் போது நிகழ்ந்த பிழையை உணர ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அந்த பிழை மீண்டும் வேறொரு வாடிக்கையாளருக்கு நிகழாமல் தவிர்த்துக் கொள்ள முடியும். அந்த காரணத்துக்காகவே இந்த கடிதம் எழுதுகிறேன். 

மயிலாடுதுறை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஒரு வாடிக்கையாளர் நெஃப்ட் படிவம் அளித்தால் ஊழியர் அதனை சரிபார்த்து அந்த படிவத்தின் ஒப்புகைச் சீட்டை அடுத்த நாள் காலையில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் ஒரு சில நிமிடங்களில் உடனே வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  

தங்கள் உண்மையுள்ள,
*****

இடம் : மயிலாடுதுறை
நாள் : 18.10.2024