கடந்த இரண்டு தினங்களில் மன்னார்குடி செங்கமலத் தாயாரையும் திருவாரூர் கமலாம்பாளையும் சேவித்தேன். மன்னார்குடி பயணம் எதிர்பாராதது. நண்பர் ஒருவருடன் வந்திருந்தேன். நாங்கள் மன்னார்குடியைக் கடந்து சென்றிருக்க வேண்டும்.எதிர்பாராமல் அவருக்கு அங்கே ஒருவரை சந்திக்க வேண்டியதாயிற்று. அந்த சந்திப்பு நீண்ட நேரம் நிகழும் என்பதால் நாங்கள் முன்னர் தீர்மானித்திருந்த விஷயங்களில் மாற்றம் செய்ய வேண்டியதாயிற்று. என்னை மன்னார்குடி பேருந்து நிலையத்தில் இறக்கி விடுமாறு சொன்னேன். பேருந்தைப் பிடித்து கும்பகோணம் வழியாக ஊர் திரும்பலாம் என எண்ணினேன். பேருந்து நிலையம் தற்காலிகமாக தேரடி அருகே மாற்றப்பட்டிருந்தது. நண்பர் அங்கே என்னை இறக்கி விட்டுச் சென்றார்.
மன்னார்குடி யாதவ அரசனின் ராஜகோபுரம் வான் நோக்கி வளர்ந்திருந்தது. மானுடப் பிரக்ஞை எப்போதும் பேரிருப்பை நோக்கி நகர்ந்தவாறே இருக்க முயல்வதின் பருவடிவங்களே கோபுரங்கள். ஒரு கோபுரத்தின் முன் ஒரு மனிதன் தன்னை எளியவனாக உணர்கிறான். அவன் அகம் மகத்தானவற்றை நோக்கி உயர்கிறது.
எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் ஆலயத்துக்குச் செல்ல முடியுமா என முயற்சி செய்வேன். அந்த பகுதியில் 1500 ஆண்டுகளாக இருக்கும் ஆலயங்கள் அந்த ஊரின் வரலாற்று சாட்சியங்களும் கூட. எந்த ஆலயமும் பல தலைமுறைகளுக்கு முன் நம்மைக் கொண்டு செல்கின்றன என்பது நிஜம். சோழ மண்டலம் பத்து ஊருக்கு ஒரு ஆலயம் என்ற அமைப்பைக் கொண்டது. கடந்த இரண்டு முறை மன்னாகுடி வந்திருந்த போதும் இளைய யாதவனின் ஆலயத்துக்கு செல்லவில்லை. எனவே கோபுரம் கண்டதும் கோயிலை நோக்கி நடந்தேன். பெருமாளையும் தாயாரையும் சேவித்தேன். மன்னார்குடி ராஜகோபுரம் நாயக்கர்களால் கட்டப்பட்டது. கோவில் அளவுக்கே பெரிய ஊரின் தெப்பக்குளமும் நாயக்கர்களால் வெட்டப்பட்டது. ஆலயம் தொழுது பேருந்தில் ஏற வந்த போது அடுத்த பேருந்து அரை மணிக்கூர் கழித்து என்று சொன்னார்கள். நண்பருக்கு ஃபோன் செய்தேன். நீண்ட நேரம் ஆகும் என நினைத்திருந்த அவரது சந்திப்பு அரைமணியில் முடிந்து விட்டது. பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் இருக்கிறேன் எனக் கூறி அங்கே 5 நிமிடத்தில் வந்து சேர்ந்தார். இருவரும் சேர்ந்து முன்னர் திட்டமிட்ட பயணத்தை நிகழ்த்தினோம்.
நேற்று ஆரூரில் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சுவாமியையும் கமலாம்பாளையும் சேவித்தேன். ஆரூர் கோவில் ஆரூர் பெரிதா அண்ணாமலை பெரிதா என்னும் எண்ணத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆலயமும் அவ்வாறு எண்ணச் செய்யும். பிரும்மாண்டம் இறையின் தன்மை என்பதால் ஆலயங்கள் பிரும்மாண்டமாக எழுப்பப்பட்டன. ஒவ்வொரு ஆலயமும் பெரியவையே மதுரை, ஸ்ரீரங்கம், திருவிடைமருதூர், திருநெல்வேலி ... சொல்லிக் கொண்டே போகலாம். ஆரூர் கமலாலயக் குளம் நாயக்கர்களால் வெட்டப்பட்டது.