Wednesday, 23 October 2024

தீபாவளி சீர்

எனது நண்பரின் உறவினர் இல்லம் சீர்காழியில் இருக்கிறது. இன்று காலை அங்கே சென்றிருந்தேன். அவர்கள் வீட்டில் ஒரு விஷயம் தெரிவிக்க வேண்டியிருந்தது. அதனைத் தெரிவித்தேன். அங்கே அந்த வீட்டின் மருமகளுக்கு தீபாவளி சீர் கொடுக்க அப்பெண்ணின் தந்தை வந்திருந்தார். அவரது ஊர் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ளது. காலை 4 மணிக்கு எழுந்து தயாராகி காலை 6 மணிக்கு திருவாரூர் வந்து ரயிலேறி எட்டு மணிக்கு மகள் வீட்டை வந்தடைந்திருக்கிறார். முதியவர் நேற்று இரவே சீர் பொருட்களை வாங்கியிருக்கிறார். விதவிதமான பழங்கள். இனிப்புகள். வேட்டி, துண்டு, புடவை. மஞ்சள் குங்குமம். அனைத்தையும் தீபாவளி சீராக தன் மகளிடமும் சம்பந்திகளிடமும் வழங்கினார். எளிய நிகழ்வு என்றாலும் அதன் உணர்வின் ஆழம் மிகப் பெரியது. இந்திய மரபில் ஒரு பெண் குழந்தையின் தந்தையாக தாயாக சகோதரனாக இருப்பது என்பது மிகுந்த அடர்த்தி கொண்ட உறவு. இந்திய மரபு கணவனே பெண்ணுக்கு முழு முதல் என்கிறது. யக்‌ஷ பிரசன்னத்தில் யுதிர்ஷ்ட்ரன்  தெய்வங்களால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட சிறந்த துணை எது என்ற கேள்விக்கு மனைவி என்று பதில் சொல்கின்றான். இன்னொரு இடத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் முரண்பட்டவை; அவை எப்படி இணைந்து இருக்க முடியும் என்ற கேள்விக்கு ஒருவனுடைய மனைவியும் அறமும் இணைந்திருந்தால் அறம், பொருள், இன்பம் மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும் என்கிறான். பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்த பின்னர் பெண் வீட்டார் ஆண்டுக்கு ஒரு சில முறைகள் சீர் அளிக்கும் இந்த வழக்கம் உணர்ச்சிகரமானது. ஒரு பெண் திருமணம் செய்து கொடுத்த பின்னர் இன்னொரு வீட்டின் பெண் ஆகிறார். பெண்ணின் குலதெய்வம் கூட மாறி விடுகிறது. பிறந்த வீட்டிலிருந்து தந்தையோ சகோதரனோ வரும் போது அந்த சந்திப்பும் மனநிலையும் இன்றும் உணர்ச்சிகரமாகவே இருக்கிறது. ஒரு பெண் குழந்தைக்கு தாயாக தந்தையாக சகோதரனாக இருப்பது என்பது ஒரு பெரும் பொறுப்பு. 

இன்று தன் மகளுக்கு சீர் அளித்த முதியவர் சீர் அளித்த போது கண் கலங்கினார். மகளும் உணர்ச்சிகரமாக கண் கலங்கியிருந்தார். 

இந்த உணர்ச்சி எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வேர் கொண்டது என அதனைக் கண்ட போது எண்ணினேன்.