{ எனது நண்பர் ஒருவர் ரயில்வேயில் பணி புரிகிறார். அவரது சொந்த ஊர் திண்டிவனம். பணி புரிவது செங்கல்பட்டில். அவருக்கு நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல். பயணத்தில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் அவருக்கு இல்லை. சில நாட்கள் முன்பு நாங்கள் ஒருவருக்கொருவர் தற்செயலாக அறிமுகம் ஆனோம். தனக்கு ஒரு பயணத்திட்டம் ஒன்றை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார். அவருக்கு என்னுடைய பரிந்துரை கீழே}
1. ’’சர்க்குலர் ஜர்னி டிக்கெட்’’ என்ற வசதி ரயில்வேயில் உள்ளது.
2. விழுப்புரத்தில் பயணத்தைத் தொடங்கவும்.
3. மெயின் லைன் மார்க்கத்தில் கும்பகோணம் வரவும். கும்பகோணம் கோயில் நகரம். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையான பல ஆலயங்கள் அங்கே உள்ளன. குடந்தை சார்ங்கபாணி கோயில், ராமசாமி கோயில், நாகேஸ்வரன் கோவில் ஆகியவை பெரியவை. பிரசித்தி பெற்றவை. முக்கியமானவை. சுவாமிமலை முருகனும் பட்டீஸ்வரம் துர்க்கையும் அவசியம் தரிசிக்க வேண்டிய தெய்வங்கள். யுனெஸ்கோவால் ‘’உலக பாரம்பர்ய சின்னம்’’ என அறிவிக்கப்பட்டிருக்கும் தாராசுரம் ஆலயமும் கும்பகோணத்தை ஒட்டி அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இறங்கி ஓரிரு நாள் தங்கி இந்த ஆலயங்களை சேவிக்கலாம்.
4. மெயின் லைனில் தொடர்ந்து திருச்சி செல்லவும். தாயுமான சுவாமி ஆலயம், உச்சிப் பிள்ளையார், ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களைச் சேவிக்கவும்.
5. திருச்சியிலிருந்து காரைக்குடி சென்று இறங்கி பிள்ளையார்பட்டி சென்று கற்பக வினாயகரை தரிசிக்கவும். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை சேவிக்கவும்.
6. காரைக்குடியிலிருந்து ராமேஸ்வரம் சென்று சேரவும்.
7. பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வரவும். மதுரை மீனாட்சி அம்மன், அழகர் கோவில் செல்லவும். மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயம் சென்று வரவும்.
8. மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லவும்.
9. திருநெல்வேலி ஆலயம் சேவித்த பின் கன்னியாகுமரி சென்றடையலாம். கன்யாகுமரியில் குமரி அம்மன் ஆலயம், விவேகானந்தர் பாறை, திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் ஆலயம் ஆகியவற்றை வழிபட்ட பின் திருவனந்தபுரம் செல்லலாம்.
10. திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாப சுவாமியை ஓரிரு நாட்கள் தங்கியிருந்து சேவிக்கலாம்.
11. கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி சேலம் வந்தடையலாம்.
12. சேலத்திலிருந்து விழுப்புரம் வந்தடையலாம்.
இந்த பயணத்தின் தூரம் தோராயமாக 2000 கி.மீ இருக்கும். தமிழகத்தின் முக்கிய இடங்களை இந்த திட்டம் மூலம் காண முடியும். மிக நல்ல அனுபவமாக இருக்கும்.