Sunday, 10 November 2024

அக நக நட்பு

 எனது நண்பர்களில் ஒருவர் விழுப்புரம் அருகே வில்லியனூரில் குடியிருந்தார். விழுப்புரத்துக்கும் அவரது ஊருக்கும் இடையே 20 கி.மீ தூரம். எனினும் அந்த தூரத்தைக் கடக்க ஒன்றரை மணி நேரம் ஆகி விடும். ரயிலில் சென்றால் ஊருக்கும் விழுப்புரத்துக்குமான 120 கி.மீ தூரத்தை இரண்டு மணி நேரத்தில் சென்றடையலாம். ஆனாலும் வில்லியனூர் செல்ல வேண்டுமானால் போக ஒன்றரை திரும்பி வர ஒன்றரை என கூடுதலாக 3 மணி நேரம். 20 கி.மீ க்கு 3 மணி நேரம் ஒதுக்குவது அசௌகர்யமானது என்பதால் வில்லியனூர் சென்று நண்பரைச் சந்திப்பது அரிதாக இருந்தது. சமீபத்தில் நண்பர் விழுப்புரத்துக்கு குடி வந்து விட்டார் என்று அறிந்திருந்தேன். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் நண்பர் பேசினார். அவரைச் சந்திக்க வேண்டும் போல் இருந்தது. ஞாயிறன்று சந்திக்க வருகிறேன் என்று சொன்னேன். 

நான் எப்போதுமே மனிதர்களைச் சந்திக்க விரும்புவேன். மனிதர்கள் மட்டுமல்ல புதிய நிலங்கள், நீர்நிலைகள், மலைகள், குன்றுகள், பறவைகள், பிராணிகள் என எல்லா உயிர்களையும் சந்திப்பது மகிழச் செய்வதே. 

பயணத்தைத் திட்டமிட்டு அந்த திட்ட விபரத்தை யாரை சந்திக்கச் செல்கிறேனோ அவர்களிடம் அறிவித்து விடுவேன். இது என் பழக்கம். இன்று காலை 6 மணிக்கு விழுப்புரம் பாசஞ்சர் இருந்தது. அதில் செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன். காலை 3.15 மணிக்கு விழிப்பு வந்தது. எழுந்து குளித்து விட்டு 4 மணிக்கெல்லாம் தயாராகி விட்டேன். வீட்டில அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மெல்ல கீழே வந்து சத்தம் இல்லாமல் கதவைத் திறந்தேன். கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தேன். ரூ. 200 இருந்தது. எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் ரூ.75. திரும்பி வரவும் அதே தொகை. டூ வீலர் பார்க்கிங் கட்டணம் ரூ.15. செலவுகள் போக உபரியாக ரூ.35 இருக்கும் அது யதேஷ்டம் என முடிவு செய்து கிளம்பினேன். ரயில் ஐந்து மணிக்கு. செல்லும் வழியில் 4.30க்கு ஒரு தேனீர்க்கடை திறந்திருந்தது. அங்கே ஒரு தேனீர் அருந்தினேன். பின் ரயில் சந்திப்பில் ரயில் ஏறினேன். நண்பர் ஸ்டேஷன் வாசலில் காத்திருந்தார். அவர் வாகனத்தில் ஏறிக் கொண்டு வீட்டுக்கு சென்றோம். சமீபத்தில் படித்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நூல் குறித்து பேசத் தொடங்கினோம். நூல்கள் குறித்து பேசுவது எப்போதுமே உவப்பானது. சமீபத்தில் வெளியாகியுள்ள ‘நெகிழிக் கோள்’ நூல் குறித்தும் சொன்னேன். 

காந்தியம் குறித்து நண்பர் சில விளக்கங்களைக் கேட்டார். நான் உணர்ந்திருக்கும் சில விஷயங்களைக் கூறினேன். உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தோம். எவரேனும் நூல்கள் குறித்து இவ்விதம் உற்சாகமாக உரையாடுவதைக் கொண்டால் எவரும் திகைத்து விடுவார்கள். அறிவார்ந்த விஷயங்களில் மட்டுமே இத்தகைய உற்சாகம் சாத்தியம். பொருள் சார்ந்த விஷயங்களின் எல்லை மிகக் குறுகியதே. 

நண்பருக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் கைக்குழந்தையாக ஒரு வயது இருந்த போது அவனைச் சந்திக்கச் சென்றது நினைவில் வந்தது. 

இன்றைய சிற்றுண்டி இட்லி. சட்னியும் சாம்பாரும் தொடு உணவு. நண்பர் வீட்டில் உணவுண்டது மிகுந்த நிறைவைத் தந்தது. 

மூன்று மணி நேரம் பல்வேறு விஷயங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து நண்பர் கேட்டார். என்னுடைய பொதுச் செயல்பாட்டு அனுபவங்களைக் கூறிக் கொண்டிருந்தேன். தற்போது எனது திட்டமிடலில் உள்ள விஷயங்கள் குறித்து சொன்னேன். 

10 மணிக்கு நண்பர் வீட்டிலிருந்து கிளம்பி ரயில் நிலையம் வந்தோம். சென்னை - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படத் தயாராக இருந்தது. ரயிலில் ஏறிக் கொண்டேன். 10.30க்கு புறப்பட்ட வண்டி 12.30க்கு ஊர் வந்து சேர்ந்தது. 

அடுத்த ஞாயிறு நாள் முழுதும் இருக்கும் வண்ணம் வருவதாகக் கூறியிருக்கிறேன்.