இன்று காலை அஞ்சல் துறை மேலதிகாரி அலுவலகத்திலிருந்து அலுவலர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டார். அஞ்சல் அலுவலகத்தில் நிகழ்ந்த பிழை வருந்துதற்குரியது எனத் தெரிவித்தார். என்னுடைய நோக்கம் நிகழ்ந்த பிழை திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பதே அன்றி எவர் மீதும் தனிப்பட்ட வருத்தம் ஏதும் இல்லை என்பதை நான் தெரிவித்தேன். பிழைகள் சட்டென நிகழக் கூடியவை. பிழை உணர்ந்து கொள்ளலே மேலான குணம்.
சி.பி.கி.ராம்.ஸ் வழியாக பல புகார்களை பதிவு செய்திருக்கிறேன். அந்த சாதனம் பயன்படுத்த எளியது என்பதே அதனை உபயோகிக்கக் காரணம். தில்லி அலுவலகம் ஒரே இடத்தில் இருந்து ஒரு நாளைக்கு எத்தனை விதமான புகார்கள் வருகின்றன ; அவை எத்தன்மையானவை; அவை எவ்விதம் தீர்வு காணப்படுகின்றன; தீர்வுகளை மனுதாரர்கள் எவ்விதம் மதிப்பிடுகிறார்கள் என பல்வேறு தரவுகளை ஒரே கணினி மூலம் அறிந்திட முடியும்.
புகார் அளித்த எவரின் மேலும் எனக்கு தனிப்பட்ட வருத்தம் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஜனநாயக நாட்டில் குடிமக்களுக்கென கடமைகள் உள்ளன. அந்த கடமையைச் செய்யவே இவ்வகையான பிழைகளை உரிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்.
என்னிடம் அலைபேசியில் பேசியவர் ‘’ஒப்புகைச் சீட்டை நீங்கள் எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றே’’ என்று தெரிவித்தார்.
பிழை செய்தவர் எங்கோ இருக்க அவருக்காக பிழை செய்யாத இன்னொருவர் வருத்தம் தெரிவிக்கையில் என் மனம் சஞ்சலப்பட்டது. மீண்டும் இந்த பிழை நிகழாமல் இருக்க வேண்டும் என்பதே எனது புகாருக்கான நோக்கம் என்று கூறினேன்.
மனுதாரரைத் தொடர்பு கொண்டு விளக்கம் அளித்தது ஓர் நற்பண்பு. அந்த அலுவலகத்தின் உயரதிகாரி பாராட்டுக்குரியவர்.