Thursday, 21 November 2024

ஒரு சாவு

 என்னுடைய அலைபேசியின் அழைப்பு ஓசையை மூன்று நொடிகள் மட்டுமே கால அளவு கொண்ட சிறு ஒலியாக அமைத்து வைத்திருக்கிறேன். என் எதிரில் அலைபேசி இருந்தால் ஒலி கேட்கும். சற்று தள்ளி இருந்தால் கேட்காது. தவறிய அழைப்புகளைக் கண்டால் நான் சாவகாசமாக இருக்கும் போது அழைத்துப் பேசுவேன். இன்று காலை ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. நான் முப்பது நிமிடம் கழித்தே பார்த்தேன். அந்த எண்ணுக்கு அழைத்தேன். ஓர் இளைஞனின் குரல். ‘’அங்கிள் அங்கிள் அப்பா இறந்துட்டாங்க அங்கிள். அப்பா இறந்துட்டாங்க அங்கிள் ‘’ என அழுதான் அந்த இளைஞன். என்னிடம் அந்த இளைஞனின் எண் இல்லை என்பதால் பெயர் வரவில்லை. அலைபேசியில் இப்படி ஓர் அழுகைக் குரல் கேட்டது என்னைக் கலக்கமடையச் செய்தது என்றாலும் என்னைத் தொகுத்துக் கொண்டு ‘’நீ யார்’’ என்று கேட்டேன். அவன் தன் பெயரைச் சொன்னான். எனக்கு மேலும் கலக்கமாகி விட்டது. என் நண்பரின் மகன். அவருக்கு 58 வயது இருக்கும். உடல்நலம் குன்றியிருந்தார்.சில வாரங்களுக்கு முன் அவரை அவருடைய வீட்டில் சந்தித்தேன். அப்போது ஆரோக்கியமாகத்தான் இருந்தார். என்னால் நான் கேள்விப்பட்ட செய்தியை நம்ப முடியவில்லை. அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அங்கே இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நண்பரின் உடல் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். உடல் வருவதற்காகக் காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் உடல் வந்தது. அங்கே என்னால் இயன்ற சிறு சிறு பணிகளைச் செய்தேன். உறவினர்களுக்கு செய்தி சொல்வது, தண்ணீர் கேன் வாங்கி வருவது போன்ற பணிகள். காலையிலிருந்து மாலை வரை இருந்தேன். அந்த நண்பர் இப்போது இல்லை என்பதை மனம் நம்பவேயில்லை ; ஏற்கவேயில்லை. ஆனால் மரணம் என்பது ஓர் உண்மை. சொல்லப் போனால் பேருண்மை. காசியில் எப்போதும் ஒலிக்கும் ராம் நாம் சத் ஹை என்ற வசனத்தை எண்ணிக் கொண்டேன். ஓம் சாந்தி.