தமிழ்நாட்டில் மனுநீதி சோழனின் தொன்மம் பிரபலமானது. அவனது அரண்மனை வாயிலில் ஓர் ஆராய்ச்சி மணி இருந்தது. குடிமக்கள் தங்கள் குறைகளை அந்த மணியை ஒலித்து தெரிவிக்கலாம். ஆராய்ச்சி மணி ஏன் ஒலித்தது என மன்னனும் அரசு அதிகாரிகளும் ஆராய்ந்து மணியோசை எழுப்பியவர்களின் குறையை தீர்க்க முயல்வார்கள். மனு நீதி சோழன் இவ்வாறான ஏற்பாட்டைச் செய்திருந்தாலும் கருணை மிக்க அவனது அரசாட்சியால் அந்த மணி ஒலிப்பதற்கான சூழல் எழவேயில்லை என்பதால் அது கவனிப்பின்றி கிடந்தது. அந்த மணி கட்டப்பட்டதிலிருந்து அது ஒருமுறை கூட ஒலிக்கவில்லை. ஒரே ஒரு முறை ஒரு பசு மாடு அந்த மணியை ஒலித்தது. பசுவின் துயர் தீர்க்க மன்னன் முயன்றான். அவனுக்கு இறைவன் காட்சி அளித்தான் என்பது அந்த தொன்மம்.
ஆராய்ச்சி மணிகள் இன்றும் இருக்கின்றன. ஆராய்ச்சி மணி ஒலித்து அது அரசாங்கத்தின் செவிகளுக்கு கேட்டு தங்கள் துயரும் இடரும் தீரும் என்ற நம்பிக்கை குடிகளுக்குப் பெரிதாக இல்லை என்பதால் அந்த மணி ஒலிக்கப்படாமலேயே இருக்கிறது. அதனாலும் அது கவனிப்பாரின்றிக் கிடக்கிறது.
எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் எனது அன்றாட வாழ்வில் நான் சந்திக்கும் விஷயங்களில் எனக்கு ஏதும் புகார்கள் இருப்பின் அவற்றை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கும் வழக்கத்தை நூதனமான ஒன்றாக நோக்குவதுண்டு. தமிழகத்தின் மனுநீதி சோழன் தொன்மத்தைத் தாண்டி, சம காலத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏதேனும் இடர் உணரப்பட்டால் அது அரசாங்கத்துக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. அவ்வாறு தெரிவிக்கச் சொல்லி அரசாங்கம் பொதுமக்களை ஊக்குவிக்கிறது. உலகில் மனிதர்கள் உருவாக்கிய எல்லா அமைப்பும் மனிதர்களால் ஆனதே; எனவே மனிதர்களுக்குரிய எல்லா பலம் பலவீனங்களும் அவற்றின் இயல்பாக இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
சேவைக் குறைபாடுகள் இருப்பின் எவருக்கு புகாரளிக்க வேண்டும் என்பதை தேடிக் கண்டுபிடித்து புகாரளிக்க வேண்டிய நிலை இருந்தது. இன்றும் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படும் புகார் தனக்கான வலிமையையும் அடர்த்தியையும் கொண்டிருக்கிறது என்பது ஒரு யதார்த்தம். நூற்றுக்கணக்கானோர் ஆயிரக்கணக்கானோர் சேவைக் குறைபாட்டை சந்தித்தாலும் எந்த அலுவலகத்திலும் ஆண்டுக்கு ஓரிருவரே புகார் அளிக்கின்றனர். எனவே அப்புகாருக்கு ஒரு முக்கியத்துவம் உருவாகி விடுகிறது. எழுத்துபூர்வமான புகார் என்பது நிர்வாகத்துக்கும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கும் நிச்சயமாக ஓர் அசௌகர்யம். அதற்கு ஒரு விளக்கம் தர வேண்டும். சிறு விசாரணை மேற்கொள்ள வேண்டும். எழுத்துபூர்வமான புகார் எழும் அளவுக்கு ஊழியர் நடந்திருக்க வேண்டாம் என்றே விசாரணை அதிகாரி எண்ணுவார். ஓர் அலுவலகத்தில் ஐம்பது ஊழியர்கள் பணி புரிகிறார்கள் என்றால் அந்த ஐம்பது பேருக்கும் புகார் குறித்து தெரியவரும். அவர்கள் மூலம் அந்த மாவட்டம் முழுதும் இருக்கும் அவர்கள் துறை அலுவலகங்களுக்கு அந்த தகவல் வாய்மொழியாகப் பரவும். இது குறித்து பலர் விசாரிப்பார்கள். துறை ரீதியான நடவடிக்கையை விட இதுவே மேலும் கடுமையான நிலை.
ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் உண்மையான சிக்கல் என்ன என்பதை நான் யூகித்துப் புரிந்து கொண்டேன். அதனை பட்டியலிடுகிறேன்.
அஞ்சலக சேமிப்புக் கணக்கிலிருந்து மின்னணு பண பரிமாற்ற வசதி 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.2,00,000 வரையிலான தொகை எனில் ‘’நெஃப்ட்’’ என்னும் முறை. இந்த முறையில் பணம் மின்னணு பரிமாற்றம் மூலம் அனுப்பப்பட ஒரு மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரம் வரை ஆகும். ‘’ஆர் டி ஜி எஸ்’’ என்னும் முறை மூலம் மின்னணு பரிமாற்றம் செய்ய இரண்டு நிமிடங்களே ஆகும். ரூ. 2,00,000க்கு மேற்பட்ட தொகையை இம்முறை மூலம் அனுப்பலாம்.
அஞ்சலகத்தில் மின்னணு பண பரிமாற்ற படிவம் விரிவானது. அதில் பணம் அனுப்புபவர் பெயர், சேமிப்புக் கணக்கு எண், பணம் அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு எண், வங்கிக் கணக்குரியவர் பெயர், வங்கிக் கிளை, அதன் ஐ எஃப் எஸ் சி குறியீடு, அனுப்ப வேண்டிய தொகை எண்ணால் எழுத்தால் என அத்தனை விபரங்களும் இருக்கும். இந்த விபரங்களை நிரப்பி விண்ணப்பதாரர் கையெழுத்திட வேண்டும்.
படிவத்தின் அடிப்பாகத்தில் ஒப்புகைச் சீட்டு இருக்கும். அதில் { அஞ்சல் அலுவலகத்தால் நிரப்பப்பட வேண்டியது } எனக் குறிப்பிட்டிருக்கும். அந்த விபரத்தை விண்ணப்பதாரர்கள் நிரப்பக் கூடாது. அலுவலக ஊழியரே நிரப்ப வேண்டும். பணம் அனுப்புபவர் கணக்கு எண், தொகை, பணம் சென்று சேர வேண்டிய கணக்கு எண், மேற்படி கணக்கு எண் உள்ள வங்கியின் ஐ எஃப் எஸ் சி குறியீடு, அன்றைய தேதி ஆகிய விபரங்களை நிரப்பி எழுத்தர் இனிஷியல் செய்து துணை போஸ்ட் மாஸ்டர் இனிஷியல் செய்து அலுவலக முத்திரை இட்டு தர வேண்டும்.
இந்த ஒப்புகைச் சீட்டே ஒரு வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு வந்தார் என்பதற்கும் விண்ணப்பப் படிவம் வழங்கினார் என்பதற்கும் அத்தாட்சி. மேலும் ஒப்புகைச் சீட்டில் அலுவலக ஊழியர் நிரப்பியிருக்கும் விபரங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை விண்ணப்ப தாரரும் சரி பார்த்துக் கொள்ள முடியும். பணம் சென்று சேருவதில் ஏதேனும் தொழில்நுட்பப் பிழை இருந்தால் அதனை சரி செய்யவும் ஒப்புகைச் சீட்டு தேவை.
அலுவலகம் ஒரு நடைமுறையை உருவாக்குகிறது. அதனை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டே அதனை பின்பற்றுகிறார்கள். அலுவலக ஊழியர்களின் பணி என்பது அந்த நடைமுறை நிகழ்வதை உறுதி செய்வது மட்டுமே. வாடிக்கையாளர்கள் நடைமுறை குறித்த விரிவான நுட்பமான புரிதல் கொண்டவராக இருக்கலாம். ஏதும் அறியாதவராக இருக்கலாம். இருப்பினும் நடைமுறை மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது என்பதால் அனைவருக்கும் சமமான சேவை வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் அலுவலக ஊழியர்கள் அலுவலக நடைமுறையைப் பின்பற்றவில்லை. தங்களுக்கு அவ்விதமான எந்த விதியும் இல்லை என்று கூறினர்.
அங்கே என்ன நிகழ்கிறது என்பதை நான் யூகித்துப் புரிந்து கொண்டேன். அதாவது, காலை 9.30 மணியிலிருந்து மதியம் 2.30 மணி வரை ஐந்து மணி நேர வேலை நேரத்தில் தோராயமாக நான்கு மின்னணு பரிமாற்ற விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன என்றால் அந்த அலுவலக ஊழியர் ஒப்புகைச் சீட்டு அளிக்காமல் பெற்றுக் கொள்கிறார். வேலை நேரம் முடிந்ததும் அவருக்கு சாவகாசமான நேரத்தில் அந்த விண்ணப்பங்களை கணினியில் உள்ளீடு செய்கிறார். இது ஊக்குவிக்கக் கூடிய செயல்பாடா இல்லையா என்பது வேறொரு கேள்வி. அவர் சாவகாசமான நேரத்தில் கணினி உள்ளீடு செய்வதற்கும் ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. விண்ணப்பதாரருக்கு அதனை வழங்கி விட்டே அவர் செய்வதை செய்யலாம்.
ஒரு நிமிடத்தில் சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை பெரிதாக ஆக்கி விட்டார்கள் அந்த அலுவலக ஊழியரும் அவரின் அதிகாரியும். இப்போது விஷயம் மேலதிகாரிகளுக்கு சென்றிருக்கிறது. எத்தனை பேரின் எத்தனை நிமிடங்கள் இதில் செலவாகின்றன என்பதை நினைக்கும் போது நான் வருந்தவே செய்கிறேன்.
இது ஜனநாயகக் காலகட்டம். மக்களால் மக்களுக்காக மக்களுடைய அரசாங்கம் செயல்படும் காலகட்டம். இந்த காலகட்டத்தில் ஒரு சாதாரண பிரஜையால் அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக் காட்ட முடியும்.
மன்னராட்சி நிகழ்ந்த காலகட்டத்திலேயே நம் தமிழ் நாட்டில் வணிகர் வீட்டுப் பெண்ணொருத்தி ஒரு மன்னனை ‘’யானோ அரசன்? ’’ என வருந்தி துயரத்துடன் கூறச் செய்திருக்கிறாள்.