Tuesday, 26 November 2024

சி.பி.கி.ராம்.ஸ் - புகார் பதிவு செய்தல்

 சி.பி.கி.ராம்.ஸ் இணையதளம் 2014ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அரசு அமைப்பு என்பது ஒரு பிரமிடு போன்ற வடிவம் கொண்டது. உயர் அதிகாரம் கொண்டவர்கள் பிரமிடின் உச்சியில் இருக்க அதன் அடிப்பரப்பில் அரசு அலுவலகர்கள் இருக்கிறார்கள். உயர் அதிகாரம் படைத்தவர்களின் எண்ணிக்கை அலுவலர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் மிகக் குறைவு. அரசு அலுவலர்களே பொதுமக்களைச் சந்திக்கிறார்கள். பொதுமக்களுக்கு அரசுடனான உறவு என்பது அரசு அலுவலர்களுடனானதே. அரசு அலுவல்களில் குறை என்பது பொதுமக்களுக்கு அலுவலர்களிடம் ஏற்படுவதே. 

அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு அடிமட்டத்தில் நிகழ்வது என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற 2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உருவாக்கிய இணைய தளமே சி.பி.கி.ராம்.ஸ். 

உதாரணத்துக்கு வங்கிக் கிளை ஒன்றில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் வங்கி ஊழியர் அளிக்கும் சேவையில் அதிருப்தி அடைந்து சி.பி.கி.ராம்.ஸ்-ல் புகார் பதிவு செய்கிறார் எனில் அந்த புகார் முதலில் தில்லியில் அல்லது மும்பையில் இருக்கும் அந்த வங்கியின் தலைமை அலுவலகத்துக்குச் செல்லும். தலைமை அலுவலகத்தில் இவ்வகையான புகார்களைக் கண்காணிக்க ஒரு அதிகாரி இருப்பார். அவர் அந்த புகாரை இணையதளம் மூலம் முழுமையாக வாசித்து அறிவார். பின்னர் அந்த புகார் சென்னை அலுவலகத்துக்கு இணையதளம் மூலம் அனுப்பப்படும். சென்னை அலுவலகம் அதனை வாசித்து அறிந்து வங்கியின் வட்டார அலுவலகத்துக்கு மாற்றும். வட்டார அலுவலகம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையின் மேலாளருக்கு அனுப்பும். கிளை மேலாளர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார். என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது வட்டார அலுவலகம், சென்னை அலுவலகம், தில்லி அலுவலகம் வரை அறிக்கை அளிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் காகிதம் இல்லாமல் இணையதளம் மூலமே நிகழும். புகாரளித்தவரும் இணையதளம் மூலம் தான் அளித்த புகார் யார் யாருடைய கவனத்துக்குச் சென்றுள்ளது என்பதை அறிய முடியும். அளிக்கப்படும் எந்த புகாரின் மீதான தீர்வும் மிகச் சில நாட்களில் அளிக்கப்பட வேண்டும். புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கம் போல் நிலுவையில் வைத்திருக்க முடியாது. தளம் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களை நினைவுறுத்தியவாறு இருக்கும். எனவே சி.பி.கி.ராம்.ஸ் புகாருக்கு அடர்த்தி அதிகம். 

புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது புகார்தாரருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு இணையதளம் மூலம் ‘’ரேட்டிங்’’ புகார்தாரர் வழங்க வேண்டும். அவருக்கு திருப்தி இல்லையேல் மிகக் குறைந்த ரேட்டிங் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்பட்டால் அது குறித்தும் மேலும் விசாரணை நடக்கும். எனவே சி.பி.கி.ராம்.ஸ் புகாரை தீர்வு காண்பதில் அதிகாரிகள் முனைப்புடன் நடந்து கொள்வார்கள். 

மத்திய அரசின் எல்லா துறைகளும் நிறுவனங்களும் சி.பி.கி.ராம்.ஸ்-ன் எல்லையின் கீழ் வருபவை. நாட்டின் எல்லா மாநில அரசின் துறைகளும் நிறுவனங்களும் சி.பி.கி.ராம்.ஸ்-ன் எல்லையின் கீழ் வருபவை.