எனது நண்பர் ஒருவர் ஊரில் இரண்டு மனைகளை வாங்கியுள்ளார். அதில் இருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு அதில் கட்டிடம் கட்டுவது அவரது திட்டம். அந்த மனைகளில் இருந்த மரங்களே அவர் நிர்மாணிக்க உள்ள வீட்டின் ஜன்னல், கதவுகள் ஆகியவற்றுக்கு போதுமானதாக இருக்கும் என கணக்கிடுகிறார். என்னிடம் அது பற்றி பேசிக் கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து விவாதித்தோம்.
உலகம் மேடு பள்ளங்களாலும் ஏற்றம் தாழ்வுகளாலும் ஆனது. இது ஒரு அடிப்படை உண்மை. இந்த உண்மையிலிருந்தே அடுத்தடுத்த உண்மைகளுக்கு செல்ல முடியும். சென்று சேர முடியும்.
கடலை ஒட்டி வாழ்பவர்களுக்கு வாழ்க்கை ஒரு விதமாக இருக்கிறது. நதியை ஒட்டி வாழ்பவர்களுக்கு வாழ்க்கை வேறு விதமாக இருக்கிறது. மலையில் வாழ்பவர்களுக்கு இன்னொரு விதம். பாலையில் வாழ்பவர்கள் தனி விதம்.
நான் வாழும் பிரதேசத்தில் என்னால் முடிந்த அளவு விவசாயிகளின் பொருளியல் சிக்கலைத் தீர்க்க முயல வேண்டும் என்பது எனது விருப்பம். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் அது ஒன்று. இதற்காக தொடர்ந்து விவசாயிகளை சந்திக்கிறேன். என்னுடைய தொழில் விவசாயம் அல்ல; விவசாயம் சார்ந்து எனக்கு நேரடி அனுபவம் இல்லை. இந்த இரண்டு விஷயங்களும் எனது எல்லை. இருப்பினும் இந்த எல்லையை வெற்றிகரமாக ஒவ்வொரு முறையும் கடந்தே விவசாயிகளுடன் உரையாடுகிறேன். ஒரு விவசாயி விவசாயத்தில் நேரடி அனுபவம் உள்ளவர். அவருக்கு மண் குறித்து தெரியும் ; நீர்ப்பாய்ச்சல் தெரியும்; களைகள் குறித்து தெரியும்; பயிர்கள் கதிர் வைப்பது தெரியும். கதிரை எப்போது அறுப்பது என்பதும் தெரியும். இருப்பினும் விவசாயத்தை எவ்விதம் லாபமான ஒன்றாக மாற்றிக் கொள்வது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அது அவர்களின் எல்லை. எனது எல்லையும் அவர்களின் எல்லையும் சந்திக்கும் இடத்தில் நாங்கள் உரையாட ஒரு சிறு சாத்தியம் இருக்கிறது. அந்த இடத்தைப் பயன்படுத்தியே நான் உரையாடுகிறேன். என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அந்த திருப்தியையே மட்டுமே நான் பெற முடியும். அது எனக்குத் தெரியும். அது எனக்குப் போதும். இருப்பினும் ஒவ்வொரு முறையும் என்னுடைய முயற்சியை பலமடங்காக்கவும் இன்னும் பல இடங்களில் மரப்பயிர்களைக் கொண்டு வரவும் விரும்பிக் கொண்டே இருப்பேன். அது என் சுபாவம்.
எனது நண்பர் ஐ.டி கம்பெனியில் பணி புரிபவர். அவரது பூர்வீகமான 3 ஏக்கர் நிலத்தில் அவரது தந்தை நெல் விவசாயம் செய்து கொண்டிருந்தார். மிக சொற்பமான லாபம் அல்லது லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்ற நிலை அல்லது நஷ்டம் என இந்த மூன்று சாத்தியங்களுக்கு உட்பட்டே அவர்களது விவசாயம் பருவத்துக்கு பருவம் நடைபெற்று வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சந்தித்துக் கொண்ட போது மரப்பயிர் குறித்து எனக்கு ஆர்வத்தாலும் நம்பிக்கையாலும் வியப்பு கொண்ட அவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் முழுமையாகத் தேக்கு பயிரிட முன்வந்தார். 100 சதவீதம் எனது ஆலோசனைகளை முழுமையாக செயலாக்குவேன் என உறுதி தந்தார். மனிதர்கள் கூடியே லௌகிகம் ஆற்றுகிறார்கள். எனவே உள்ளிருக்கும் மனிதர்களின் சுபாவங்கள் அவர்கள் ஆற்றும் லௌகிகத்திலும் பிரதிபலிக்கும். இந்த புரிதல் எனக்கு இருந்ததால் ஒவ்வொரு நகர்வையும் அளந்து வைத்தேன். அந்த நிலத்தில் 900 தேக்கு கன்றுகள் நடப்பட்டன. நடப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகி விட்டன. எல்லா மரங்களும் நன்றாக இருக்கின்றன. இன்னும் 12 ஆண்டுகள் கழித்து அவர் நிலத்தில் இருந்து அவருக்கு குறைந்தபட்சம் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். விவசாயம் மூலம் கிடைத்த வருமானம் என்பதால் அதற்கு வருமானவரி கிடையாது. முழுத் தொகையும் சேதாரமின்றி கிடைக்கும்.
இந்த கணக்கீடு எனக்குத் தெரியும் என்றாலும் இரண்டு மனைகளை வாங்கிய நண்பர் மரம் வெட்டி சேகரித்து வைத்திருக்கும் மரத்துண்டுகள் அந்த கணக்கை உறுதி செய்தன.
ஐ டி நிறுவன நண்பரின் தேக்கு தோட்ட செயல்முறையால் ஈர்க்கப்பட்டு மேலும் இருவர் தங்கள் நிலத்தில் தேக்கு பயிரிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோருக்கு இந்த விஷயத்தைக் கொண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகளை கோடீஸ்வரர்களாக ஆக்க வேண்டும் என என் அகம் விழைகிறது. நான் அவர்களிடம் ஒரு சிந்தனையை மட்டுமே விதைக்கிறேன். சாதிப்பது அவர்களே.
தேக்கிலிருந்து வருமானம் வர 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது ஒரு விஷயம். பல விவசாயிகளுக்கு அந்த தயக்கம் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
இரண்டு மனைகள் வாங்கிய நண்பரின் உரையாடலிலிருந்து எனக்கு இன்னொரு விஷயம் புரிந்தது. அதாவது ஒரு ஏக்கர் நெல் வயலில் 300 வேப்ப மரங்கள் நட்டால் ஐந்து ஆண்டுகளில் அந்த விவசாயிக்கு ரூபாய் பதினைந்து லட்சம் கிடைக்கும். நெல் விவசாயத்தால் கிடைக்கும் என உத்தேசிக்கும் லாபத்தை விட 3 மடங்கு. வேப்ப மரங்களுக்கு மத்தியில் பூசணி பயிரிடலாம். அதன் மூலமும் லாபம் கிடைக்கும்.
வேப்ப மரங்களின் வளர்ச்சிக்கு எந்த தடையும் இல்லை. பராமரிப்பு ஏதும் இல்லை. மிகக் குறைவான தண்ணீர் போதும்.
புது ஆண்டு பிறக்க உள்ள நிலையில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளில் தேக்குடன் வேம்பு இணைந்திருப்பது உற்சாகத்தைத் தருகிறது.