எனது நண்பரின் மனையில் இருந்த மரங்களை வெட்டி அகற்றி மனையை தூய்மை செய்து கொடுக்க வேண்டிய பணியை ஏற்றிருந்தேன். கிட்டத்தட்ட ஏழு நாட்களாக அந்த பணியும் அதன் தொடர் பணிகளும் நடந்தன. நான் வழக்கமாக செல்லும் மரவாடியின் பணியாளர் தனக்குத் தெரிந்த மரம் வெட்டுபவரை ஏற்பாடு செய்து கொடுத்தார். மனையில் இருந்த மரங்களை வெட்டி அகற்ற மொத்தமாக ஒரு தொகையை நிர்ணயித்துக் கொண்டோம்.
பணியாளர்கள் மனநிலை என்பது ஒப்பந்தமாக தொகையை நிர்ணயம் செய்து கொண்டாலும் பணி தொடங்கும் முன் ஒரு தொகை எதிர்பார்ப்பார்கள். பணி நிகழும் போது தேனீர் செலவுக்கு உணவுக்கு என ஒரு தொகை எதிர்பார்ப்பார்கள். ஒப்பந்தமாகத்தானே வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால் ஒப்பந்தத் தொகையில் நாங்கள் வாங்கும் பணத்தை கழித்துக் கொள்ளுங்கள் என்பார்கள். ஒப்பந்தப் பணி என்பதால் அவர்கள் பணி செய்யும் நேரத்தில் வேறு வேலை பார்த்து விட்டு சற்று சாவகாசமாக வரலாம் என இருக்க முடியாது. பணி நிகழும் நேரம் முழுக்க அல்லது அதில் பெரும் பகுதி அங்கு இருக்க வேண்டிய நிலை இருக்கும். இந்த உரையாடல்கள் ஓய்வதில்லை. அவர்களும் கேட்டு ஓய்வதில்லை. நாங்களும் பதில் சொல்லி ஓய்வதில்லை. ஒவ்வொரு நாளும் புதிதாக எல்லாம் ஆரம்பமாகும்.
மரம் வெட்ட எவ்வளவு ஆகும் என 3 மரம் வெட்டிகளிடம் விசாரித்தேன். ஒருவர் 10,000 என்றார். இன்னொருத்தர் 25,000 என்றார். மூன்றாவது நபர் 26,000 என்றார். இரண்டு நாள் வேலை இருக்கும். குறைந்தபட்சம் தேவைப்படும் மொத்த பணியாளர் எண்ணிக்கை 8 என்பதாக இருக்கும் என நான் கணக்கிட்டிருந்தேன். பணியாளர் ஊதியம் 8000 ஆகும். மரம் வெட்டும் மெஷின் வாடகை 2000 ஆகும். எனது கணக்கீடு இவ்விதம் இருந்தது. எனவே முதல் மரம் வெட்டியை அழைத்து பணி செய்ய சொன்னேன். அவர் தனது தொகையை சற்று மாற்றியமைத்து மேலும் நாலாயிரம் கேட்டார். ஒப்பந்தத் தொகை 14,000 ஆனது. பெரிய துண்டுகள் இல்லாமல் சிறு விறகுகளை விற்பனை செய்து தருகிறேன் என்றார். எவ்வளவு தொகைக்கு விற்பனையாகும் என்று கேட்டேன். 6000 கிடைக்கும் என்றார். 14 லிருந்து 6 ஐ கழித்தால் 8 தான் செலவு என்பதால் பரவாயில்லை என ஒத்துக் கொண்டேன்.
முதல் நாள் 2 பணியாளர்கள் மட்டுமே வேலை செய்தனர். பாதிக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பாதி வேலையை முடித்து விட்டனர். பணியாளர்களைக் குறைத்து தனக்குக் கிடைக்கும் தொகையை அதிகமாக்கிக் கொள்கிறார் எனப் புரிந்து கொண்டேன். மறுநாள் 6 பணியாளர்கள் வந்திருந்தனர். அன்றைய தினம் 95 சதவீத பணிகளை நிறைவு செய்து விட்டு கிளம்பி விட்டனர். ஒப்பந்தத் தொகையை அளித்து விட்டேன். இருப்பினும் விறகை விற்பனை செய்யும் முயற்சியில் மிக்க முனைப்புடன் மரம் வெட்டி ஈடுபடவில்லை.
ஊரில் இருந்த விறகுக் கடைகளுக்கு சென்று மரம் வெட்டிய விறகு இருக்கிறது விலைக்கு எடுத்துக் கொள்கிறீர்களா என்று கேட்டு வந்தேன். மொத்தம் 3 கடைகள். அதில் ஒருவர் விறகுத் தரகர் ஒருவரின் எண் அளித்து அவரிடம் பேசுமாறு சொன்னார். எனக்குத் தெரிந்த ஒருவர் ஹோட்டல் வைத்திருக்கிறார். அவர் ஹோட்டலில் விறகு அடுப்பு பயன்படுத்துவார்கள். அவரிடமும் கேட்டேன். அவர் அளித்ததும் அதே விறகுத் தரகரின் எண். அந்த விறகுத் தரகரின் எண்ணைத் தொடர்பு கொண்டு விறகைப் பார்த்து மதிப்பிடுமாறு கூறினேன். அவர் வந்து பார்த்து ரூ.6000 என மதிப்பிட்டார். எனது சம்மதத்தைத் தெரிவித்தேன்.
இரண்டு நாட்களில் அவர் வந்தார். இன்று காலை. அவர் இரண்டு பணியாளர்களை அழைத்து வந்தார். மூவருமே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒரு வண்டியில் விறகை ஏற்றினர். நானும் விறகு ஏற்ற சிறிது நேரம் உதவினேன். நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று மூவரும் கேட்டனர். வயது முதிர்ந்த மூன்று பேர் பாரம் சுமக்கும் போது சும்மா இருக்க மனது ஒத்துக் கொள்ளவில்லை ; எனவே மிகச் சிறு நேரம் நானும் சுமக்கிறேன் என்றேன். அதன் பின் அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது மனை சுத்தம் செய்யப்படுவதைப் பார்த்து அந்த பகுதியில் குடியிருப்பவர் ஒருவர் வந்தார். அவர் ஒரு விவசாயி. 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். நெல்லுக்குப் பதிலாக தேக்கு பயிர் செய்யுங்கள் என்றேன். அவர் ஆர்வமாக இருந்தார். ஐ டி கம்பெனி ஊழியரின் தேக்கு பண்ணைக்கு அழைத்துச் சென்று காட்டுகிறேன் என்றேன்.
மரம் வெட்டி மாலை அலைபேசியில் அழைத்தார். அவர் சொன்ன இடத்துக்குச் சென்றேன். ரூ.5000 கொடுத்தார். முதியவர்கள் மூன்று பேர் பணியாளர்கள் என்பதால் அவர் கொடுத்த தொகையை அன்புடன் பெற்றுக் கொண்டேன்.
இந்த பணி செய்ததன் மூலம் மரம் வெட்டிகள், மரத் தரகர்கள், சில பணியாளர்கள் ஆகியோர் பழக்கமாகியிருக்கின்றனர். அது ஒரு லாபம். 9000 த்தில் மரம் வெட்டும் பணி முடிந்திருக்கிறது. அது இன்னொரு லாபம். இந்த பணிகள் அனைத்தும் மூன்று நாட்களில் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏழு நாள் ஆகி விட்டது. வேறொருவர் செய்திருந்தால் இன்னும் நாலு நாள் ஆகியிருக்கும் என சமாதானம் செய்து கொண்டேன்.