சமீப நாட்களில் ஒரு விஷயம் என் கவனத்துக்கு வந்தது. ரியல் எஸ்டேட் சார்ந்த பணி ஒன்றில் ஈடுபட்டிருக்கிறேன். பெரும்பாலும் ஆரம்ப கட்ட பணிகள் அரசு அலுவலகம் சார்ந்த பணிகள் என்பதால் அந்த பணி எத்தனை நாள் நிகழும் என்பது பணியில் ஈடுபவரின் கையில் இல்லை ; அந்த பணியை செய்து கொடுப்பவர் கையில் இருக்கிறது. அதற்காக பணியில் ஈடுபடுபவர் சும்மா இருந்து விட முடியாது. பணியை முடித்துக் கொடுக்க வேண்டியவர் கண் முன்னால் அவ்வப்போது தோன்றிக் கொண்டு இருக்க வேண்டும். இதெல்லாம் தொழில் முறை. இந்த தொழிலில் காத்திருக்கப் பயில வேண்டும். 3 மணி நேரத்தில் முடிய வேண்டிய வேலை 3 வாரம் வரை போகும். நான் கூறுவது மிகை இல்லை என்பது இந்த தொழிலில் இருப்பவர்களுக்குத் தெரியும். ஒரு பணி முடிந்தால்தான் அதன் அடுத்தகட்ட பணி தொடங்கும். இருப்பினும் எந்த பணியை எடுத்துக் கொண்டோமோ அந்த பணி மனதில் வியாபித்திருக்கும். அதனை மனதில் தீவிரமாக வைத்திருப்பது அதனை துரிதப்படுத்த உதவும் என்பதால் எப்போதும் மனம் அதனை சிந்தித்துக் கொண்டே இருக்கும். சமீபத்தில் 3 மணி நேரத்தில் கிடைத்திருக்க வேண்டிய ஒரு சான்றிதழ் கிடைக்க 3 வாரம் ஆனது. பொறுமை காத்தே ஆக வேண்டும். இருந்தாலும் ஒவ்வொரு நாள் ஆக ஆக மனம் லேசாக சோர்வை உணர ஆரம்பித்தது. தொழிலில் இருக்கும் சகாக்களிடம் இதனை சொல்ல முடியாது. அவர்கள் 4 வாரக் காத்திருப்பில் இருப்பார்கள். இந்த சோர்வு மெல்ல நாள் முழுக்க பரவுவதை சமீபத்தில் உணர்ந்தேன். தொழில் சார்ந்த பணிகள் தவிர்க்க முடியாதவை. அவை குறித்த எண்ணம் நாள் முழுவதும் மனதில் இருப்பது இயல்பானது எனினும் அந்த எண்ணத்தை எல்லா நேரமும் சுமப்பது தேவையற்றது என்று முடிவுக்கு வந்தேன். எனது தொழில் கட்டுமானமும் ரியல் எஸ்டேட்-டும் பகலில் பகல் வெளிச்சத்தில் நிகழ்வது. எங்கள் பணி என்பது காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மட்டுமே நிகழ முடியும். அந்த நேரத்தை முழுமையாக தொழிலுக்கு அளிப்பது என்றும் மீதி நேரத்தில் அதனைக் குறித்து சிந்திக்காமல் இருப்பது என்றும் முடிவு செய்திருக்கிறேன். தொழில் அதன் செயல்முறை மற்றும் முன்னேற்றம் ஆகியவை குறித்து காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மட்டுமே சிந்திப்பது செயல்படுவது மற்ற நேரங்களில் அதனை மனதிலிருந்து சற்று விலக்கி வைத்திருப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.
இன்று நான் ஒரு நாளில் என்னென்ன செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என்பதைப் பட்டியலிட்டுக் கொண்டேன்.
எனக்கு தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். மனதில் ஏதாவது எண்ணமும் சிந்தனையும் எப்போதும் ஓடிக் கொண்டேயிருக்கும் என்பதால் நான் தினமும் நடப்பது என்பது அவசியம். நடந்தால் என உடல் சோர்ந்து ஓயும். அது எனக்கு மிகவும் நல்லதே. எனவே தினமும் நடப்பது என்று முடிவு செய்துள்ளேன். ஒரு நாளை நடைப்பயிற்சியுடன் துவக்குவது என்பதில் சமரசமில்லாமல் இருப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.
நீண்ட தூர நடைக்குப் பின்னர் அடிப்படையான சில உடற்பயிற்சிகள் செய்ய உத்தேசித்துள்ளேன்.
புத்தக வாசிப்புக்கு தினமும் குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஒதுக்க வேண்டும். எழுத்துக்கு தினமும் 1 மணி நேரம். எந்த புற நெருக்கடியும் வாசிப்பை பாதிக்காத வண்ணம் வகுத்துக் கொள்ள வேண்டும்.
புதிய மொழி ஒன்றைக் கற்றுக் கொள்ள தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என இருக்கிறேன்.
லௌகிகம் தவிர்க்க முடியாதது எனவே அதற்கு 10 மணி நேரம். எனது ஆரோக்கியத்துக்காகவும் நான் விரும்புவதை செய்வதற்காகவும் 10 மணி நேரம்.
இது எவ்விதம் நிகழ்கிறது என்பதை அவ்வப்போது பதிவு செய்கிறேன்.