வீட்டிலிருந்து 600 மீட்டர் தூரத்தில் சற்றே பெரிய மனை ஒன்றில் சிறு புதர்கள் அடர்த்தியாக மண்டியிருந்தது. அதனைக் கடந்து செல்கையில் வானில் நூறு கருடன்கள் வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அத்தனை கருடன்களை ஒரே இடத்தில் பார்த்தது ஆச்சர்யம் அளித்தது. ஏன் அவை அந்த இடத்தை வட்டமிடுகின்றன என சற்று நின்று நோக்கினேன். அந்த புதரிலிருந்து ஈசல்கள் ஆயிரக்கணக்கில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. வெளிப்படும் ஈசல்களை உணவாக்கிக் கொள்ள கருடன்கள் வட்டமிடுகின்றன. வட்டமிடும் வேகத்தில் தன் உகிர்களால் ஈசலைக் கவ்விக் கொள்கின்றன. கவ்விய அடுத்த கணமே தன் வாய்க்குக் கொண்டு சென்று ஈசலை விழுங்கி விடுகின்றன. ஆயிரக்கணக்கான ஈசல்கள்- நூற்றுக்கணக்கான கருடன்கள். ஈசல் சில மணி நேரம் மட்டுமே உயிர்த்திருக்கும் ஜீவன். அந்திப் பொழுது தொடங்குகையில் பிறந்து சில மணி நேரங்களில் தன் வாழ்வை நிறைவு செய்து கொள்வது. ஆக்கல் காத்தல் அழித்தல் என பிரபஞ்ச இயக்கத்தை நிகழ்த்தும் இறைமையின் எல்லையின்மையை ஒரு கணம் நினைத்து வியந்தேன்.