Wednesday, 22 January 2025

24 மணி நேரம்

திங்களன்று மதியம் 1 மணிக்கு சோழன் விரைவு வண்டியில் சென்னை கிளம்பினேன். மறைமலை நகரில் எனது நண்பர் ஒருவர் தனது மனை ஒன்றை விற்பனை செய்து தரக் கூறினார். அந்த இடத்தை முதலில் கண்ணால் பார்க்க வேண்டும் என எண்ணினேன். அந்த இடத்தின் ஜி.பி.எஸ் ஒளிப்படத்தை மின்னஞ்சலில் நண்பர் அனுப்பியிருந்தார். என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் கிடையாது. எனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை கூடுவாஞ்சேரியில் வசிக்கும் எனது உறவினருக்கு அனுப்பினேன். அவர் அதனை தன் திறன்பேசி மூலம் திறந்து அந்த இடம் எங்கே இருக்கிறது என யூகித்து வைத்திருந்தார். அவர் என்னை மறைமலைநகர் ரயில் நிறுத்தத்தில் வந்து அழைத்துச் செல்வதாகத் திட்டம். சோழன் விரைவு வண்டி மறைமலை நகரில் நிற்காது. செங்கல்பட்டில் இறங்கி மின்சார ரயிலுக்கு மாற வேண்டும்.  

ரயிலில் நல்ல கூட்டம். பொங்கல் விடுமுறை முடிந்த பின் வரும் முதல் வேலைநாள் என்பதால் நல்ல கூட்டம். ரயிலில் நின்று கொண்டு தான் சென்றேன். ரயிலில் நின்று கொண்டு செல்வது குறித்து எனக்கு எந்த புகாரும் இல்லை. இந்திய ரயில்வே சிறப்பாக செயல்படும் நிர்வாகம். லட்சக்கணக்கான ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். ரயில்வே உருவாக்கியிருக்கும் போக்குவரத்து கட்டமைப்பால் தான் இத்தனை மக்கள் பயணம் செய்கிறார்கள். எந்த ஊருக்கும் இருக்கையில் அமர்ந்து செல்ல வேண்டும் என்றால் இன்றும் பயணிகள் ரயில்கள் இருக்கவே இருக்கின்றன. மதியம் 1 மணிக்கு கிளம்பும் நான் காலை 6 மணிக்கு ஒரு பயணிகள் ரயிலில் சென்றிருக்க முடியும். அதில் சாவகாசமாக அமர்ந்து விழுப்புரம் வரை செல்ல முடியும். அங்கே சென்று சேர்ந்த அடுத்த 15 நிமிடத்தில் சென்னைக்கு வண்டி இருக்கிறது. 12 மணி அளவில் சென்னை சென்று விடலாம். எனக்கு நாளின் முதல் பாதி வரை சில பணிகள் இருந்தன. அவற்றை பூர்த்தி செய்தேன். நான் முன்பதிவு இல்லாத பெட்டியில் செல்வதை விரும்புபவன். சாமானிய மக்களுடன் தொடர்பு கொள்ள அது ஒரு உபயோகமான வழி. 

என்னுடன் நின்று கொண்டு ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் பயணித்தார். தட்கால் முன்பதிவு முயன்றதாகவும் ஒரு சில நிமிடங்களில் டிக்கெட் நிரம்பி முன்பதிவு கிடைக்காததால் பொது பகுதியில் பயணிக்க நேர்ந்ததாகவும் கூறினார். நீட் தேர்வு குறித்து அவருடைய அபிப்ராயம் என்ன என்று கேட்டேன். நீட் தேர்வு இருந்ததன் காரணமாகவே தன்னால் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது என்று கூறினார். அவர் படிப்பது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில். நீட் தேர்வு வருவதற்கு முன்னால் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்ணயிக்கும் தொகையே கட்டணம் என்றும் ஏழை நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் எவரும் பெருந்தொகை செலுத்தி சேர முடியாது என்றும் கூறினார். நீட் தேர்வினால் மட்டுமே ஒரே கலந்தாய்வு நடக்கிறது; தனியார் கல்லூரி சேர்க்கையும் கலந்தாய்வு மூலம் என்பதால் தன்னைப் போன்றவர்களுக்கு சேர்க்கை அனுமதி கிடைக்கிறது என்று கூறினார் அந்த மாணவர். ரயில் பயணங்கள் இவ்வகையான நேரடி மனப்பதிவுகளை உருவாக்கக் கூடியவை என்பதால் எனக்கு முக்கியமானவை. 

செங்கல்பட்டில் ரயில் மாறி மறைமலைநகர் சென்றடைந்தேன். எனது உறவினர் எனக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். மனைக்கு அழைத்துச் சென்றார். பிரதான சாலையில் ஒரு பெரிய திருமண மண்டபம் இருந்தது. அதன் அருகே இருந்த சாலையில் திரும்பி நேராகச் சென்று இடது பக்கம் திரும்பினால் சிறு தொலைவில் ஒரு பெரிய பள்ளியின் மைதானம். அங்கிருந்து வலது பக்கம் திரும்பினால் ஒரு கிண்டர் கார்டன் பள்ளிக்கூடம். அதனைத் தாண்டிச் சென்றால் ஒரு ஏரிக்கரை சாலை. அந்த சாலையிலிருந்து சில மீட்டர் தொலைவில் மனை இருந்தது. நண்பர் அனுப்பிய புகைப்படத்தில் இருந்த வீடுகள் எளிதில் கண்டறியப்பட்டன. மனை அவற்றுக்கு அருகில் என அடையாளப்படுத்தப்பட்டிருந்ததால் வந்த பணி திருப்தியாக நிறைவு பெற்றது. அந்த பகுதியில் நிறைய அடுக்ககங்கள் இருந்தன. புதிய வீடுகளின் கட்டுமானம் நடந்து கொண்டிருந்தது. அங்கே இருப்பவர்களிடம் மனைகளின் விலை நிலவரங்களை விசாரித்துக் கொண்டேன். 

பின்னர் உறவினர் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மணி நேரம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்து விட்டு உறவினரிடம் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாய்க் கொண்ட ‘’எமர்ஜென்சி’’ திரைப்படம் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். நண்பர் இணையம் மூலம் டிக்கெட் பதிவு செய்தார். வேளச்சேரியில் உள்ள ஒரு தியேட்டருக்கு செல்ல வேண்டும். இரு சக்கர வாகனத்தில் இருவரும் பயணித்தோம். ஹிந்தி திரைப்படம். ஆங்கிலத்தில் சப் டைட்டில். நள்ளிரவு 1.30க்கு படம் முடிந்தது. உறவினர் நாங்கள் முன்னரே திட்டமிட்ட விதத்தில் என்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் டிராப் செய்தார். அவரை ஜாக்கிரதையாக வீடு திரும்பும்படியும் வீட்டுக்குச் சென்றதும் எனக்கு அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பும்படியும் சொன்னேன். பேருந்து நிலையம் உள்ளே சென்றதும் ‘’ திருச்சி ஏறிக் கொள்ளுங்கள் திருச்சி ஏறிக் கொள்ளுங்கள் ‘’ என பேருந்து கண்டக்டர்கள் அழைத்தனர். அவர்களைத் தாண்டிச் சென்றேன். கடலூருக்கு ஒரு வண்டி தயாராக இருந்தது. எத்தனை மணிக்கு கடலூர் செல்லும் எனக் கேட்டேன். காலை 6 மணியாகும் என்றனர். காலை 7 மணியை ஒட்டி அங்கே ஊருக்கு ஒரு பாசஞ்சர் வண்டி வரும். அதனைப் பிடிக்க முடியும் என எண்ணினேன். எனது இரு சக்கர வாகனம் ரயில் நிலைய பார்க்கிங்கில் இருந்தது. கிளாம்பாக்கத்தில் வண்டி கிளம்பும் முன் தூங்கி விட்டேன். உறவினரின் குறுஞ்செய்தி வந்து சேர்ந்த ஒலி எழுந்தது. வீடடைந்தேன் என செய்தி அனுப்பியிருந்தார். மகிழ்ச்சி என பதில் செய்தி அனுப்பி விட்டு உறங்கி விட்டேன். உறக்கம் விழித்த போது வண்டி கடலூரை நெருங்கியிருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து அருகில் இருந்த ரயில் நிலையம் வந்து பயணிகள் ரயிலைப் பிடித்தேன். 9 மணிக்கு ஊர் வந்து சேர்ந்தேன். 

பத்து மணி அளவில் ஒரு அலைபேசி அழைப்பு. எனது நண்பர் ஒருவருக்கு வீட்டுக்கடன் பெற விண்ணப்பம் வங்கி ஒன்றில் தரப்பட்டுள்ளது. அவர் வெளியூரில் வசிக்கிறார். அந்த விண்ணப்பம் தொடர்பான பணிகளை செய்து தருமாறு உதவி கேட்டிருந்தார். 10.30க்கு புறப்பட்டு இரு சக்கர வாகனத்தில் கும்பகோணம் சென்றடைந்தேன். அவர்கள் கேட்ட விபரங்களை அளித்து விட்டு வீடு திரும்பிய போது நேரம் மதியம் 1.15. 

24 மணி நேரத்துக்கு முன்னால் இந்த நேரத்தில் தான் மறைமலைநகர் கிளம்பினேன் என்பதை எண்ணிப் பார்த்தேன்.