தமிழறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் மீது எனக்கு பெரும் ஈடுபாடு உண்டு. தமிழ்ச் சமூகத்தின் ஆசான்களில் முக்கியமானவர் அவர். அவருடைய மொழியின் அழகியலும் கூறுமுறையின் நேர்த்தியும் மிக அரியவை. அவர் ஒரு விஷயத்தை அணுகும் விதமும் புரிந்து கொள்ளும் விதமும் மொழியில் எடுத்துக் கூறும் விதமும் சிலிர்க்கச் செய்பவை. அவர் தனது ஆசிரியர் ரசிகமணி குறித்து ’’ரஸிகமணி டி.கே.சி’’ என்ற சிறுநூல் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த புடவியில் மானுடர் லட்சோப லட்சம் பிறக்கிறார்கள் ஒவ்வொரு கணமும். அன்றாடத்தின் சாதாரணங்களுடன் பொருந்தி வாழ்ந்து முடிவதே கோடானுகோடி மக்களின் வாழ்வாக இருக்கிறது. மிக அபூர்வமாகவே மானுட வாழ்வின் மேலான சாத்தியங்களைக் கண்டடைபவர்கள் இருக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தில் ‘’ரஸிகமணி டி.கே.சி’’ அத்தகையவர்.
கோடானுகோடி மக்களில் இலக்கியத்தின் மீது ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்கள் சில ஆயிரம் பேரே. அதிலும் கவிதை மீது ஆர்வம் கொண்டவர்களில் மிகச் சிலரே. கவிதையிலும் செவ்வியல் கவிதை மீது ஈடுபாடு கொண்டவர்கள் மிக மிகச் சிலரே. ரசிகமணி அத்தகைய கவிதை வாசகர். தன் வாழ்நாள் முழுக்க கவிதையை கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருந்திருக்கிறார். செவ்விலக்கியங்களை வாசிப்பது அவற்றை சக ஹிருதயர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பதே அவரது வாழ்வின் முக்கியமான பெரும்பகுதியாக இருந்திருக்கிறது.
தனது வீட்டு முற்றத்தில் இருந்த ‘’வட்டத்தொட்டி’’யில் அவர் தன் நண்பர்களை தினமும் சந்தித்து இலக்கிய அளவலாவல்களை மேற்கொண்டிருக்கிறார். கம்பன் கவிகளே அவர்களது பேசு பொருள். நாளும் கம்பன் கவிகளை அவர்கள் சுவைத்திருக்கிறார்கள். வட்டத்தொட்டியில் நிகழும் கம்பன் விவாதங்களில் ஊக்கம் பெற்றே காரைக்குடி கம்பன் கழகமும் சென்னை கம்பன் கழகமும் கோவை கம்பன் கழகமும் உருவாகியிருக்கிறது. ரசிகமணிக்கு கவிதை தவிர மற்ற செவ்வியல் கலைகள் மீதும் ஈடுபாடு இருந்திருக்கிறது. தமிழிசை இயக்கத்தின் உருவாக்கத்திலும் ரசிகமணிக்கு முக்கிய பங்கு இருந்தது.
ஒரு தனி ஆளுமை தன் இலக்கிய ரசனை ஒன்றை மட்டுமே பிரதானமாகக் கொண்டு தான் வாழும் சூழலில் கணிசமான தாக்கத்தை உண்டாக்க முடியும் என்பது தமிழ்ச் சூழலில் அசாத்தியமான அரும்பணியே. அவ்வகையில் செயற்கரிய செயல் ஒன்றை நிகழ்த்திக் காட்டியவர் டி.கே.சி.
தன் சொற்களின் வழியே தன் ஆசிரியனின் பேருருவை எடுத்துக் காட்டியுள்ளார் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான். இருவருமே தமிழ்ச் சமூகத்தின் வணக்கத்துக்குரியவர்கள்.
நூல் வாசிக்க :
