Friday, 21 March 2025

கிளி சொன்ன கதை

ஆறும் தோப்பும் ஆலயமும் இருக்கும் ஒரு திருவிதாங்கூர் கிராமம். இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதி. அந்த தென்குமரி நிலத்தில் சரத் சந்திர சட்டர்ஜியை வாசிக்கும் ஒரு வாசகி. அந்த வாசகிக்கு பெரியவனானதும் சரத் சந்திர சட்டர்ஜி என தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் எப்போதும் கனவில் மிதக்கும் எப்போதும் உள்ளார்ந்து மௌனமாக அக உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஓர் இளைய மகன். ஊரைத் தாண்ட அதிகம் வாய்ப்பில்லாத அந்த சிறுவனின் விருப்பம் இமயம். இமயத்துக்குச் செல்ல வேண்டும் ; இமயத்தில் வாழ வேண்டும் என்பது அவனது விருப்பம். இமயத்தின் பெருஞ்சிகரங்களை எந்நாளும் கற்பனை செய்து கொண்டேயிருக்கிறான். அவன் ஊரின் ஆலயத்தில் துஞ்சத்து எழுத்தச்சனின் ‘’அத்யாத்ம ராமாயணம்’’ படிக்கிறார்கள். இவனுக்கு கம்ப ராமாயணம் பிடித்திருக்கிறது. ஆலயத்தில் இசைக்கப்படும் நாதஸ்வரத்தையும் கம்ப ராமாயணத்தையும் அவன் மனம் ஏதோ ஒரு விதத்தில் இணைத்துக் கொள்கிறது. கிராம வாழ்வின் அன்றாடங்கள் அவர்கள் வாழ்வை சூழ்ந்திருக்கிறது. காலையில் தொழுவத்தை சுத்தம் செய்ய வேண்டும் ; மாடு குளிப்பாட்டி வர வேண்டும். சிறுவன் அனந்தனின் அகம் சாதாரணங்களில் ஒன்ற மறுக்கிறது. எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான். விசாலமம்மை கேட்கிறாள் : ‘’எப்போதும் எதையோ நினைச்சுக்கிட்டே இருக்கியே? என்ன நினைப்ப?’’ அனந்தன் சொல்கிறான் : ‘’நினைப்பு’’. நினைப்பும் கனவுமாக இருக்கிறது அனந்தனின் தினசரியை. கருவுற்றிருக்கும் அனந்தனின் அன்னை சொல்கிறாள்: ‘’வயத்துல இருக்கறது பெண் குழந்தை’’ அனந்தன் கேட்கிறான்: ‘’எப்படி தெரியும்?’’ அன்னை சொல்கிறாள் : ‘’கனவுல தெரியும்’’. விசாலமம்மைக்கு ராமாயணக் கதை தன் வீட்டில் சொல்ல வேண்டும் என்று விருப்பம். கணவனிடம் தயக்கத்துடன் சொல்கிறாள். இராமாயணம் படித்தால் படிக்கும் ஒவ்வொரு தினமும் பிரசாதமாக பாயசம் வழங்க வேண்டும். செலவு அதிகம் ஆகும் என்று கணவன் மறுக்கிறான். அனந்தனுடன் கோயிலுக்குச் சென்று இராமாயணம் கேட்கிறாள். அனந்தனுக்கு கதை கேட்க பிடிக்கும். ஊரில் இருக்கும் சோதிடரிடம் அனந்தன் பலவிதமான கதைகளைக் கேட்கிறான். எழுத்தச்சன் இராமாயணம் கேட்ட கதை. ஒரு அதிகாலையில் மரம் ஒன்றில் தாய்க்கிளி தன் கிளிக்குஞ்சுக்கு இராமாயணம் சொல்வதை எழுத்தச்சன் கேட்கிறார். அந்த இராமாயணக் கிளியிடம் தனக்கும் இராமாயணம் சொல்லுமாறு கேட்க அவருக்கு முழு இராமாயணத்தையும் சொல்கிறது. அதனை கிளிப்பாட்டாக எழுதுகிறார் எழுத்தச்சன். ஊரும் உலகமும் தெய்வங்களால் ஆனதாக இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தெய்வம். ஆற்றுக்கும் கடலுக்கும் தெய்வமான நீர்க்கடவுள் மீது பேரார்வமும் பெரும் ஈடுபாடும் கொண்டிருக்கிறான் அனந்தன். பதினாறு கன்று ஈன்ற பசு நாட்டுக்கே அன்னை என மதிக்கப்பட வேண்டும் என்பது அந்த ஊரின் நியதி. அந்த பசுவின் ஆயுள் முடிந்ததும் சிவ கணங்கள் வந்து அதனை கைலாசத்துக்கு அழைத்துச் செல்லும் என்பது அந்த மண்ணின் நம்பிக்கை. அனந்தன் எதையாவது சிருஷ்டித்துக் கொண்டே இருக்க விரும்புகிறான். அவனுக்கு சமையல் ஆச்சர்யமூட்டுகிறது. எப்படி தனித்தனி காய்கறிகள் வெவ்வேறு விதமாய் இணைந்து ருசிகரமான பதார்த்தங்களாக மாறுகின்றன என்பதை நுட்பமாக அவதானிக்கிறான். அனந்தனின் அன்னையும் தந்தையும் அவ்வப்போது முரண்படுகிறார்கள். தந்தை கரடுமுரடானவர். அவருக்கு பிரியத்தையும் கோபத்தைப் போல மட்டுமே காட்டத் தெரியும். தான் வளர்க்கும் பசு மாட்டின் மீதும் தனது நாயின் மீதும் பிரியம் கொண்டவர். நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் பணிப்பெண்ணின் மகனுக்கு அவனைப் பாராட்டும் விதமாக புதுச்சட்டை எடுத்துக் கொடுப்பவர். கேரள சமூகத்தின் சட்டங்கள் நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் மாற்றம் அடைவதை ஒட்டி மனைவியின் சகோதரர்களுடன் உரசல் ஏற்படுகிறது அவருக்கு. அந்த உரசல் கணவன் – மனைவி உறவில் பிரதிபலிக்கிறது. அவ்வப்போது இருவருக்கும் நடக்கும் சண்டை. அனந்தன் விசாலமம்மையிடம் இருவரும் இமயமலைக்கு சென்று விடலாமா என்று கேட்கிறான். அனந்தனைக் குறித்து எல்லாரும் கவலைப்படுகிறார்கள். ஊர்க்காரர்கள், அம்மா, அப்பா அனைவரும். அனந்தனின் சகோதரன் எப்போதும் நான் அனந்தன் உடன் இருப்பேன் : அனந்தனுக்கு எல்லாம் நான் செய்வேன் என்கிறான். கோயிலில் இராமாயணக் கதை முடியும் தறுவாயில் இருக்கிறது. அனந்தனும் அம்மாவும் செல்கிறார்கள். உபன்யாசகர் கம்ப ராமாயணத்தின் ஒரு இடத்தை சொல்கிறார். ‘’சீதை ஒரே நேரத்தில் இரண்டு சிறைகளில் இருக்கிறாள். வெளிச்சிறை ஒன்று. அது அவளுக்கு ஒரு பொருட்டல்ல. அவளால் ஏழு உலகங்களையும் அழிக்க முடியும். அவள் தனக்குத் தானே இட்டுக் கொண்ட நியதிகளின் சிறைக்குள் இருக்கிறாள். கடல் பேராற்றல் கொண்டிருந்தும் கரையைத் தாண்டாமல் இருப்பது போல. எல்லா பெண்களுமே சீதையைப் போன்றவர்களே’’. கதை கேட்கும் எல்லா பெண்களும் கண்ணீர் சிந்துகின்றனர்.   

கிளி சொன்ன கதை - ஜெயமோகன்