Tuesday, 15 April 2025

யாதினும் இனிய நண்பர்

 கம்பராமாயணத்தில் ஸ்ரீராமன் குகனை ‘’யாதினும் இனிய நண்ப’’ என்கிறார். எனது வாழ்க்கையில் யாதினும் இனிய நண்பர்கள் சிலர் எனக்கு இருக்கின்றனர். அவர்களே வாழ்க்கையில் நாம் சம்பாதித்த பெருஞ்சொத்துக்கள். அவர்களுடைய நினைவு என்பது எனக்கு ஒவ்வொரு நாளும் இருக்கும். தினமும் சில கணங்களாவது அவர்களைப் பற்றி எண்ணுவேன். 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். என்னை விட இருபது வயது மூத்தவர். அவரை எனக்கு 35 ஆண்டுகளாகத் தெரியும். நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை அவர் மீதான ஆர்வமும் வியப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போதும் நான்கு பேர் சூழ இருப்பார். அன்றும் அப்படித்தான். இன்றும் அப்படித்தான். யாரும் உதவி என்று வந்து கேட்டால் அதனை எவ்விதத்திலாவது செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுவார். அன்றும் இன்றும் அவரிடம் தினமும் யாராவது உதவி வேண்டும் என்று கேட்ட வண்ணமே இருக்கிறார்கள். குழந்தையைப் பள்ளியில் சேர்க்க ; கல்லூரியில் சேர்க்க; ஏதேனும் வேலையில் சேர்த்து விட; மருத்துவ உதவி ... இன்ன பிற. லௌகிகமாக என்னென்ன உதவிகள் உண்டோ அத்தனையும் அவரிடம் கேட்கப்படும். அவரால் முடிந்ததை அவர் நிச்சயம் செய்வார். அந்த நம்பிக்கையே பலரை அவரை நோக்கி வரச் செய்கிறது. உண்மையில் வாழ்க்கையில் பெரும் பேறு அது. நூற்றுக்கணக்கானோர் ஒருவரை நம்பி அவரிடம் வருகிறார்கள் என்றால் அவருக்கு இறைமையின் ஆசி இருக்கிறது என்றே பொருள். அவர் கடுமையாகப் பேசியோ கடுமையாக நடந்து கொண்டோ நான் பார்த்ததில்லை; நான் கேள்விப்பட்டதில்லை. கடுமையாக எதைப் பற்றியாவது மனதில் எண்ணியிருப்பாரா என்னும் கேள்விக்கு விடை இல்லை என்பதே. 

கம்பராமாயணத்தில் சீதை அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறார். அந்த வாழ்த்து என் நண்பருக்குமானது.