அவனுடைய பாட்டிக்கு 85 வயது. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். முதுமை காரணமாக சிறு நோய்வாய்ப்பட்டார். பின்னர் இயற்கை எய்தினார். அவருடைய இறுதிச் சடங்குகள் நிகழ்ந்து முடிந்திருந்தன. அதற்கு அடுத்த நாள் அவன் வீட்டின் மாடிப்படியில் தனியாக கவலையுடன் அமர்ந்திருந்தான். அவனுடைய அம்மா அவனிடம் ‘’ஏன் தம்பி இப்படி கவலையுடன் தனியாக அமர்ந்திருக்கிறாய் ?’’ என்று கேட்டார்கள். ’’பாட்டி மேல் பிரியம் வைத்திருந்தேன். அவர்கள் இறந்து விட்டார்கள். உலகில் உள்ள எல்லாருமே ஒருநாள் பாட்டி போல் இறந்து விடுவார்களா?’’ என்று கேட்டான். ‘’ஆமாம்ப்பா ! பிறப்பெடுத்த எல்லாரும் இறந்து ஆக வேண்டும் என்பது மாற்ற முடியாத விதி ‘’ என்று அவன் அம்மா சொன்னார்கள். ‘’அப்ப நீயும் இறந்திடுவ. அப்பாவும் இறந்திடுவாங்கல்லம்மா. அதை நினைச்சு இப்ப துக்கப்படறன்’’. ‘’தம்பி! இப்ப நாங்க ரெண்டு பேரும் இருக்கோம். அதனால எதிர்காலத்துல நடக்கப் போறத நினைச்சு இப்பவே கவலைப் படாத. அப்படி ஒரு நாள் வர்ரப்ப அப்ப கவலைப் பட்டுக்கலாம்’’ என்று அவன் அம்மா சொன்னார்கள். இந்த உரையாடல் நிகழ்ந்த போது அவனுக்கு இரண்டரை வயது.