Sunday, 4 May 2025

குழந்தைகள் - 4


 எனது நண்பரின் குழந்தை அவன். மிகச் சிறு வயதிலேயே பக்குவத்துடன் நடந்து கொள்வான். அவனுக்கு வாசிப்பில் மிக்க ஆர்வம் உண்டு. மொழி பயிலத் தொடங்கிய இரண்டரை வயதிலிருந்து அட்சரங்களை உச்சரிப்பதும் எழுதுவதுமாக இருப்பான். எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றதும் அவன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று நீங்கள் என்ன நட்சத்திரம் என்று கேட்பான். அவர்கள் நட்சத்திரத்தைக் கூறியதும் வீட்டில் மாட்டியிருக்கும் தினசரி காலண்டரில் அந்த நட்சத்திரத்துக்கு என்ன ராசிபலன் போட்டிருக்கிறது என்பதை அவர்களுக்குச் சொல்வான். எப்போதும் சிலேட்டை வைத்துக் கொண்டு எதையாவது எழுதிக் கொண்டிருப்பான். நண்பர் பணி நிமித்தம் வட இந்திய நகரத்துக்குச் சென்றார். அங்கே சென்ற போது அவன் இரண்டு வயது குழந்தை. அண்டை வீட்டுக் காரர்கள், அண்டை வீட்டுக்கார குழந்தைகள் என அவர்களிடம் பேசிப் பேசி ஹிந்தியை மிக சரளமாக பேசக் கற்றுக் கொண்டான். இங்கே ஊரில் எவரேனும் ஹிந்தி தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் மிகச் சரளமாக ஹிந்தி பேசுவான். அவனுடைய ஹிந்தியை எல்லாரும் வியப்பார்கள்.