அவனுக்கு அப்போது 4 வயது இருக்கும். அவன் வயதையொத்த குழந்தைகளுடன் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான். நான் அவன் வீட்டுக்கு முன்னால் பைக்கில் சென்று நின்றேன். எப்போதுமே எந்த வீட்டின் முன் போட்டிருக்கும் மாக்கோலத்தின் மீதும் எனது வாகனத்தை ஏற்ற மாட்டேன். அன்று நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததால் குழந்தைகளிடமிருந்து கணிசமான தூரத்தில் வண்டியை நிறுத்த வேண்டும் என்பதால் கோலத்தின் மீது வண்டியை நிறுத்தி விட்டேன். எப்போதும் அவ்விதம் நிகழாது ; விதிவிலக்காக அன்று நிகழ்ந்து விட்டது. ‘’அங்கிள் ! என்ன அங்கிள் கோலத்து மேல வண்டியை ஏத்திட்டீங்க. அது ஒருத்தரோட உழைப்பு தானே அங்கிள்’’ என்றான். நான் பதறி விட்டேன். ‘’சாரி ! தம்பி . எப்பவும் இப்படி நடந்ததில்ல. இன்னைக்கு இப்படி ஆயிடுச்சு. என்னை மன்னிச்சுடு’’ என்றேன். ‘’பரவாயில்லை அங்கிள் ! உங்கள பகவான் மன்னிப்பார்’’ என்றான். அவன் வாக்கு தெய்வவாக்கு என்பதாக என் உளம் பொங்கி நெகிழ்ந்து விட்டேன்.