Tuesday, 6 May 2025

பிழையும் நடவடிக்கையும்

2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் பதவியேற்றதும் நாட்டின் குடிமக்கள் அரசு அலுவலகங்களின் சேவையைப் பெறுவதில் அவர்களுக்கு ஏதும் குறைபாடு ஏற்பட்டால் அந்த புகாரினைத் தெரிவிப்பதற்காக சி.பி.கிரா.ம்.ஸ் என்ற இணையதளத்தை உருவாக்கியது. முன்னர் குடிமக்கள் தங்களுக்கு நேரும் சேவைக் குறைபாடுகளை எந்த அலுவலகத்தில் அதனை சந்திக்கிறார்களோ அந்த அலுவலகத்தின் உயரதிகாரியிடமோ அல்லது அதற்கு அடுத்த படிநிலையில் உள்ள அலுவலகத்திடமோ தெரிவிக்க வேண்டும். அந்த விஷயம் இரு அலுவலகங்கள் தொடர்பான விஷயமாக இருக்கும். நாட்டின் மத்திய தலைமை அலுவலகங்களுக்கு குடிமக்கள் எவ்விதமான சேவைக் குறைபாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்னும் தரவுகள் நேரடியாக இல்லாமல் இருந்தது.  பொதுமக்கள் தாங்கள் புகார் தெரிவிக்க வேண்டிய மேலதிகாரி யார் புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலகம் எது என்னும் விழிப்புண்ர்வு குறைவாகப் பெற்றிருப்பார்கள். எனவே அரசாங்க அலுவலகங்களில் மக்கள் சேவைக் குறைபாடை உணர்வது என்பதும் அக்குறைபாடுகள் புகாரளிக்கப்படாமல் போவதும் அவ்விதமான சேவைக் குறைபாடை அளிக்கும் அரசு ஊழியர்கள் விதிமுறைகளின் விசாரணைக்குள் வராமல் இருப்பதோ அல்லது அதிலிருந்து எளிதில் வெளியேறி விடுவதோ வாடிக்கையாக நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த விஷயத்திற்கு தீர்வாக உருவாக்கப்பட்டதே சி.பி.கி.ராம்.ஸ் இணையதளம். ஒரு குடிமகன் இந்த தளத்தில் தனது பெயர் முகவரி ஆகிய விபரங்களைப் பதிவிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு பயனர் முகவரியும் பாஸ்வேர்டும் அளிக்கப்படும். அந்த தளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவிட்டதும் புகார் தில்லியில் இருக்கும் அலுவலகத்துக்கு முதலில் செல்லும். அங்கிருந்து மாநிலத் தலைமை அலுவலகத்துக்குச் செல்லும். பின்னர் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு செல்லும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு செல்லும். இணையதளம் மூலம் அந்த புகார்கள் ஓரிரு நாட்களில் தில்லியிலிருந்து நாம் புகார் அளித்த அலுவலகம் வரை வந்து சேரும். இந்த புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை சி.பி.கி.ராம்.ஸ் தளத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகம் பதிவு செய்ய வேண்டும். அது ஒரே நேரத்தில் இணையதளம் மூலமாக தில்லி வரை செல்லும். புகாரைப் பதிவு செய்தவருக்கும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும். இதன் மூலம் எவ்விதமான இடர்களை பொதுமக்கள் சந்திக்கிறார்கள் என்பதும் எவ்விதமான புகார்கள் அளிக்கப்படுகின்றன என்பதும் அதற்கு எவ்விதமான தீர்வுகள் அளிக்கப்படுகின்றன என்பதும் துறைகளின் உயர் அதிகாரிகளுக்கும் உயர் அலுவலகங்களுக்கும் தெரியவரும். தங்கள் கணினி மூலம் பொதுமக்கள் எவ்விதமான சேவைக் குறைபாடுகளை எதிர்நோக்குகிறார்கள் என்னும் தரவை மிக எளிதில் அறிந்து விட முடியும். அவை நிகழாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய மாற்றங்களை கொள்கை முடிவுகளை எளிதில் நிகழ்த்த முடியும். பொதுமக்களுக்கும் தங்கள் புகார் மீது எவ்விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிவதால் அரசு முறைமைகள் மேல் நம்பிக்கை ஏற்படும். இவ்விதமான இணையதள முறை உருவாக்கப்பட வேண்டும் என்பது பாரத பிரதமரின் விருப்பம். அவர் குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது மாநில அரசில் இவ்விதமான முறையைக் கொண்டு வந்து அது பெரும் வரவேற்பை பொதுமக்கள் மத்தியில் பெற்றிருந்தது. 

அரசு அலுவலங்களில் சேவைக் குறைபாட்டை உணர்ந்தால் சி.பி.கி.ராம்.ஸ் ல் பதிவு செய்வதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். மாநில அரசு அலுவலகங்களும் இந்த இணையதள வரம்புக்குள் உள்ளன எனினும் மத்திய அரசு அலுவலங்கள் இந்த செயல்பாட்டுக்கு முழுமையாக உட்பட்டவை. மாநில அரசு அலுவலங்கள் தொடர்பாகவும் வங்கியில் நிகழ்ந்த சேவைக் குறைபாடு தொடர்பாகவும் புகார்கள் அளித்திருந்த அனுபவம் எனக்கு உண்டு. இந்த முறை மத்திய அரசு அலுவலகமான தபால் நிலையம் குறித்து ஒரு புகார் அளித்தேன். 

நான் அஞ்சல்துறை மீதும் அஞ்சல் அலுவலங்கள் மீதும் பெருமதிப்பு கொண்டவன். இமயம் முதல் குமரி வரை நாடெங்கும் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துடனும் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கும் ஒரு துறை என்றால் அது அஞ்சல்துறை தான். வீடு தேடி வரும் அரசாங்கம் என்பது அஞ்சல்துறையே. சிறு வயது முதலே அஞ்சல் அலுவலகங்களைத் தேடிப் போய் அஞ்சல் அட்டை வாங்குவது, தபால் தலை வாங்குவது, தபால் அனுப்புவது ஆகிய செயல்பாடுகளைச் செய்த பழக்கம் இருப்பதால் எனக்கு முதலில் அறிமுகம் ஆன அரசு அலுவலகம் என்பது தபால் ஆஃபிஸே. ஒரு முறைமை சீராக இயங்க முடியும் என்பதற்கு இன்றும் உதாரணமாக விளங்குபவை அஞ்சல்துறையும் ரயில்வேயுமே. அஞ்சல்துறை மீதான எனது மரியாதையைத் தெரிவித்து விட்டே இந்த விஷயத்தைத் தெரிவிக்கிறேன். 

நவம்பர் மாதம் என்னுடைய அஞ்சல் சேமிப்புக் கணக்கிலிருந்து இரு நபர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) மூலம் பணம் அனுப்ப அஞ்சல் அலுவலகம் சென்றேன். படிவத்தை எழுதி அதற்கான சாளரத்தில் அளித்தேன். அஞ்சல் அலுவலகம் பல ஆண்டு காலமாகவே சேமிப்புக் கணக்கு துவங்கி வரவு செலவு செய்யும் வசதியை அளிக்கிறது. நாட்டில் வங்கிகள் பரவலாவதற்கு முன்பிருந்தே தபால் துறை இருக்கிறது. மேலும் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி வரவு செலவு செய்வதை விட தபால் அலுவலகத்தில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி வரவு செலவு வைத்துக் கொள்வது பாதுகாப்பானது. ஏனெனில் வங்கிகள் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் தொகையை தனிநபர்களுக்கு கடனாக அளிக்கின்றனர். குறைவான வட்டிக்கு டெபாசிட்தாரர்களிடமிருந்து கடனாகப் பெற்று அதனை விடக் கூடுதல் வட்டிக்கு தனிநபர்களுக்கு கடனளிக்கிறார்கள். இந்த வட்டி வித்தியாசத்தில் கிடைக்கும் தொகையே வங்கிகளின் லாபம். அதன் மூலம் மட்டுமே வங்கிகள் இயங்குகின்றன. ஒரு வங்கி தான் அளித்த கடனை திரும்பப் பெற முடியாமல் போனால் அந்த கடன் பெருந்தொகை என்றால் அந்த வங்கி திவாலாகும். ஆனால் தபால் ஆஃபிஸ் தான் பெறும் டெபாசிட் தொகையை தனிநபர்களுக்கு கடனாக அளிப்பதில்லை. மாறாக மத்திய அரசின் திட்டங்களுக்கு கடனாக அளிக்கிறது. எனவே ஒரு போதும் தபால் ஆஃபிஸ் திவால் ஆகாது. நிதிச்சேவையில் பல வங்கிகளைக் காட்டிலும் மேலான அனுபவம் கொண்டிருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்னால் அஞ்சல்துறை சேமிப்பு மின்னணு பண பரிமாற்ற வசதிக்குள் கொண்டுவரப்பட்டது. அதாவது எந்த ஒரு வங்கிக் கணக்கிலிருந்தும் நாட்டின் எந்த ஒரு வங்கிக் கிளைக்கும் வங்கிக் கணக்குக்கும் மின்னணு பண பரிமாற்ற முறை மூலம் சில நிமிடங்களில் பணத்தை செலுத்திட முடியும் என்னும் சேவைக்குள் வங்கிகளுடன் சேர்ந்து அஞ்சல் சேமிப்புக் கணக்கும் சேர்ந்தது. இந்த முக்கிய முடிவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசே எடுத்தது. மின்னணு முறையில் அனுப்பும் தொகை ரூ. 2,00,000 க்குள் என்றால் அது நெஃப்ட் முறைப்படியும் ரூ. 2,00,000 க்கு மேல் என்றால் அது ஆர்.டி.ஜி.எஸ் முறைப்படியும் அனுப்பப்படும். ஆர். டி. ஜி. எஸ் பரிவர்த்தனை சில வினாடிகளில் நிகழ்ந்து விடும். நெஃப்ட்க்கு சில நிமிடங்கள் ஆகும். நான் அன்று அஞ்சலகம் சென்றது இரு நபர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்ப. 

இந்த சம்பவம் நிகழ்வதற்கு ஒரு மாதம் முன்பு இரு கணக்குகளுக்கு நெஃப்ட் முறையில் பணம் அனுப்ப சென்றிருந்தேன். சாளரத்தில் படிவத்தை அளித்து ஒப்புகைக்காகக் காத்திருந்தேன். ஒப்புகைச் சீட்டை மாலை 5 மணி அளவில் பெற்றுக் கொள்ளுமாறு சாளர எழுத்தர் கூறினார். நான் படிவத்தை அளித்த போது நேரம் காலை 11 மணி. என்னிடம் ஒப்புகைச்சீட்டை மாலை 5 மணிக்கு பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்கள். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கழித்து. எனக்கு அந்த ஒப்புகைச்சீட்டு முக்கியமாகத் தேவைப்பட்டது. அதனை அந்த எழுத்தரிடம் தெரிவித்து நான் காத்திருந்து பெற்றுச் செல்கிறேன் என்று கூறினேன். இரண்டு மணி நேரம் அந்த அலுவலகத்தில் காத்திருந்தேன். இரண்டு முறை சாளரம் அருகே சென்று நினைவுபடுத்தினேன். இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் எனக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. எனது கணக்கு எண், பணம் பெறுபவர் பெயர், பணம் பெறுபவர் கணக்கு எண் மற்றும் வங்கிக் கிளை ஆகிய விபரங்கள் எழுத்தரால் எழுதப் பெற்று அலுவலக முத்திரை இடப்பட்டு தரப்பட்டது. சில வினாடிகளில் நிறைவு பெறும் இந்த வேலைக்கு ஏன் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நடந்த சம்பவத்தை ஒரு கடிதமாக எழுதி அந்த தபால் அலுவலகத்துக்கு மேலதிகாரியான அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தேன். அந்த சம்பவம் நிகழ்ந்த போதே என்னால் சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் அளித்திருக்க முடியும். ஆனால் இந்த பிழையை திருத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க விரும்பினேன். என்னுடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் இவ்விதமான செயல்பாடுகளில் நான் தீவிரம் காட்டுவது குறித்து அதிருப்தி கொள்கின்றனர். என் மீது உள்ள அக்கறையால் அவர்கள் கொள்ளும் அதிருப்தி அது. சாமானிய அன்றாட லௌகிக தினம் என்பது இதைப் போன்ற பற்பல ஒழுங்கின்மைகளாலும் பிழைகளாலும் ஆனது என்பது அவர்கள் புரிதல். அவற்றுடன் சமர் புரியக் கூடாது; விலகிச் சென்று விட வேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. என்னுடைய தரப்பு என்னவெனில் பிழைகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். அந்த பிழை நிகழ்வுகள் பலர் கவனம் குறிப்பாக உயர் அதிகாரிகள் கவனம் பெறும் என்றாலே அவை குறையும். ஒருநாள் இல்லாமலும் போகும் என்பது எனது நம்பிக்கை. இவ்விதமான ஒவ்வொரு விஷயம் குறித்தும் நண்பர்கள் இவ்விதம் கூறியவாறு இருப்பதால் அவர்கள் உணர்வை மதித்து சி.பி.கி. ராம். ஸ் புகார் அளிக்காமல் எழுத்துப் புகார் அளித்தேன்.  கடிதம் எழுதிய சில நாட்களில் அஞ்சல்துறை கண்காணிப்பாளரிடமிருந்து பதில் வந்தது. நிகழ்ந்த பிழைக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்தது அக்கடிதத்தில். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது அக்கடிதத்தில். புகார் கிடைக்கப் பெற்றது என்ற விபரம் தெரிவித்ததும் பிழைக்கு வருத்தம் தெரிவித்ததும் உயர்வான பண்புகள். யாரோ பிழை செய்திருக்க அப்பிழையுடன் நேரடித் தொடர்பில்லாத உயர் அலுவலகம் வருத்தம் தெரிவிக்கிறார்களே என என் மனம் வருந்தியது. இந்த கடிதம் அனுப்பியதன் பயன் என்பது என்னவெனில் நான் மட்டும் அறிந்திருந்த விஷயம் அந்த அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் வாய்மொழிச் செய்தியாகப் பரவும். ஒப்புகைச் சீட்டை வழங்க இரண்டு மணி நேரம் தேவையா என்னும் வினாவும் அது தொடர்பான விவாதமும் அங்கே நிகழும். இந்த விஷயமே இனி எவருக்கும் இவ்விதமான பிழை நிகழாமல் காக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு. நான் கடிதம் அனுப்பியதற்கும் அதுவே காரணம். நான் நினைத்திருந்தால் அந்த சாளர ஊழியரின் பெயரைக் கேட்டு அவர் பெயர் குறிப்பிட்டு புகார் அளித்திருக்க முடியும். ஆனால் அது சற்று கடுமையானது என்பதால் அதனை நான் செய்யவில்லை. அதன் பின் அந்த சம்பவத்தை நான் மறந்து விட்டேன்.  இது தனிப்பட்ட விஷயம் இல்லை. இங்கே நிகழ்ந்திருப்பது ஒரு சேவைக் குறைபாடு. சரி செய்யப்பட வேண்டியது. அவ்வளவே என்பதே என் மனப்பதிவு. 

ஒரு மாதம் கழித்து இரு கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்ப தபால் ஆஃபிஸ் சென்றேன். சாளரத்தில் அதே எழுத்தர். படிவத்தை அளித்தேன். அதே பதில். மாலை 5 மணிக்கு வந்து ஒப்புகைச்சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் என. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சென்ற மாதம் நிகழ்ந்த சம்பவம் குறித்து அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் எனக்கு பதில் அனுப்பியிருக்கிறார்; விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி தரப்பட்டுள்ளது. இவை அத்தனையையும் தாண்டி ஒரே விதமான பதில் என்னை வருந்தச் செய்தது. அந்த எழுத்தரின் மேலதிகாரியான துணை போஸ்ட் மாஸ்டரைச் சந்தித்து ஒப்புகைச் சீட்டை வழங்கச் சொன்னேன். மாலை 5 மணிக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். இருவருமே படிவம் பெற்றவுடன் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்று கூறினர். நான் எந்த பதிலும் பேசாமல் அங்கிருந்து அமைதியாக நீங்கி விட்டேன். பின்னர் மூன்று மணி நேரம் கழித்து அங்கே சென்று ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொண்டேன். 

அடுத்த நாள் சி.பி.கி.ராம்.ஸ் ல் எனது புகாரைப் பதிவு செய்தேன். இந்த முறை சாளரத்தின் ஊழியர் பெயரையும், அவருடைய மேலதிகாரியான துணை போஸ்ட் மாஸ்டர் பெயரையும் குறிப்பிட்டு புகார் பதிவு செய்தேன். ஒரு மாதம் முன்னர் நிகழ்ந்த விஷயத்தையும் குறிப்பிட்டு என்னால் புகார் பதிவு செய்திருக்க முடியும். எனினும் நான் செய்யவில்லை. இந்த நாட்டின் சாதாரண குடிமகனாக குடிமகனின் கடமையாக மட்டுமே நான் இதனைச் செய்கிறேன். தனிப்பட்ட உண்ர்வுகள் இதில் இல்லை. பிழை திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம். 

நான் புகார் பதிவு செய்ததற்கு மறுநாள் எனக்கு அஞ்சல்துறையிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. இருவர் பேசினார்கள். புகார் தங்கள் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது என்பதைத் தெரிவித்தார்கள். ஒப்புகைச் சீட்டு உடனடியாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் ; மூன்று மணி நேரம் தாமதமாகத் தந்தது பிழை என்பது எவராலும் மறுக்க முடியாது என்று கூறி நிகழ்ந்த பிழைக்கு தாங்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள். யாரோ பிழை செய்திருக்க அதற்கு யாரோ வருத்தம் தெரிவிப்பது என்னை வருந்தச் செய்தது. நேரடியாக சந்தித்து வருத்தம் தெரிவிக்கிறோம் என்று கூறினார்கள். அதெல்லாம் தேவையில்லை நானே அலுவலகத்துக்கு வருகிறேன் என்று கூறி நான் அங்கு சென்றேன். என்னிடம் பேசியவர்கள் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள். என்னை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். 

அவரிடம், ‘’சார் ! நீங்கள் உயர் அதிகாரி. சாளரத்தில் பொதுமக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதை இதைப் போன்ற நிகழ்வுகளில் கடிதமாகத் தெரிவித்தால் மட்டுமே நீங்கள் அறிய முடியும். தங்களைப் போன்றோராலேயே இவ்விதமான பிழைகள் நிகழாமல் இருக்க ஊழியர்களுக்கு குறிப்புகளை அளிக்கவும் இயலும். நான் அஞ்சல்துறை மேல் பெருமதிப்பு வைத்திருப்பவன். அதனால் தான் அந்நிகழ்வைத் தங்களுக்குத் தெரிவித்தேன். நான் எளிய குடிமகன். எளிய வாடிக்கையாளன். அவர்கள் என் விஷயத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என்பதை விட மேலதிகாரியான தங்கள் கவனத்துக்கு இந்த விஷயம் வந்தும் தாங்கள் குறிப்புகள் அளித்தும் ஒரு மாதம் கழித்து மீண்டும் ஒரே விதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது ; நம்பிக்கையிழக்கச் செய்கிறது’’ என்று கூறினேன். 

ஒரு வாரம் கழித்து அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளர் எனது வீட்டுக்கு வந்து எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டார். மேல் நடவடிக்கை என்ன மேற்கொள்ளப்படுகிறது என்ற விபரங்கள் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திடமிருந்து எனக்கு கடிதமாக வந்து கொண்டிருந்தன. 

சில நாட்கள் கழித்து நான் அஞ்சல் அலுவலகம் சென்ற போது அந்த அலுவலகத்தில் இருந்த ஏழு ஊழியர்களும் மாற்றப்பட்டு புதிய ஊழியர்கள் அங்கே பணி புரிந்து கொண்டிப்பதைக் கண்டேன். பணி இடமாறுதல் நிகழ்ந்திருப்பதைப் புரிந்து கொண்டேன். 

நான் முதலில் அளித்த எழுத்துபூர்வமான புகாரின் கோப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கோரிப் பெற்றேன். அந்த புகார் சி.பி.கி.ராம்.ஸ் புகாருடன் இணைக்கப்பட்டிருந்தது. அடிப்படையில் , இரண்டும் இரண்டு முறை நிக்ழ்ந்த ஒரே விதமான புகார்கள். சில வாரங்களுக்கு முன்னால், எனது சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கோரியிருந்தேன். அதில் பல அலுவலகங்கள் தொடர்பாகியுள்ளதால் அளிக்க இயலவில்லை என்ற பதில் வந்தது.  திருச்சி போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு முதல் மேல்முறையீடு செய்தேன். அவர் அதில் நான் சம்பந்தப்பட்டிருக்கும் விபரங்களை அளிக்குமாறு அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு ஆணையிட்டார். பின்னர் அந்த கோப்பின் பகுதி விபரங்கள் என்னிடம் அளிக்கப்பட்டன. நான் முழுக் கோப்பையும் கோரி மத்திய தகவல் ஆணையத்துக்கு இரண்டாம் மேல்முறையீடு செய்துள்ளேன்.  எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் முக்கிய பகுதிகளை கீழே மொழிபெயர்த்துள்ளேன். 

ஆவணம் (1) - சி.பி.கி.ராம்.ஸ் ல் நான் அளித்த புகாரின் தமிழாக்கம்

18.11.2024 அன்று ***** அஞ்சல் நிலையத்துக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் எனது அஞ்சலக சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் அனுப்ப மதியம் 12.15 மணிக்கு வந்திருந்தேன். உரிய படிவத்தை ****** என்ற அலுவலரிடம் வழங்கினேன். அந்த அலுவலர் படிவத்தின் ஒப்புகைச் சீட்டினை மாலை 5 மணிக்கு பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். எந்த அலுவலகத்திலும் ஒரு விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டால் அதற்கான ஒப்புகைச் சீட்டை விண்ணப்பதாரரிடம் அளிக்க வேண்டும் என்பது அடிப்படை முறைமை. தான் ஒரு விண்ணப்பம் வழங்கினோம் என்பதற்கு அதுவே அத்தாட்சி. என்னிடம் ஒப்புகைச் சீட்டை உடனடியாக அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அந்த அலுவலர் ஒப்புகைச் சீட்டை வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்றார். இது குறித்து மேலும் ஏதேனும் பேச விரும்பினால் தனது மேலதிகாரி ***** அவர்களை சந்திக்குமாறு கூறினார். மேலதிகாரி ***** அவர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னேன். அவரும் ஒப்புகைச் சீட்டை வழங்க எந்த விதியும் இல்லை என்று கூறினார். நான் அமைதியாக அங்கிருந்து வெளியேறி விட்டேன். மாலை 3.15 அளவில் மீண்டும் அங்கு சென்று ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொண்டேன். இந்த புகார் மனுவின் மூலம் அலுவலர் ***** மீதும் அதிகாரி ***** மீதும் வாடிக்கையாளர் ஒருவரிடம் பொருத்தமற்ற பதிலைக் கூறியது ; ஒப்புகைச் சீட்டை அளிக்க மூன்று மணி நேரம் தாமதம் செய்தது ஆகிய புகார்களைப் பதிவு செய்கிறேன். உரிய அதிகாரிகளை இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

ஆவணம் 2 - அஞ்சல்துறை கண்காணிப்பாளர் துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பிய கடிதம் 

அனுப்புநர்

அஞ்சல்துறை கண்காணிப்பாளர்
*****

பெறுநர்

துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளர்
*****

பொருள் : சி.பி.கி.ராம்.ஸ் புகார் எண் : *****

பார்வை : **.**.**** தேதியிட்ட மின்னஞ்சல்

மேற்படி விஷயம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும். 

புகாருக்கு காரணமானவர் வாடிக்கையாளருக்கு ஆர்.டி.ஜி.எஸ் ஒப்புகைச்சீட்டை வழங்குவது தொடர்பாக பொருத்தமில்லாத பதிலை அளித்துள்ளார். மேலும் ஒப்புகைச் சீட்டை வழங்க மூன்று மணி நேரம் காலதாமதம் ஆக்கியுள்ளார். 

இது குறித்து விசாரணை மேற்கொண்டு ஒரே நாளில் அறிக்கை அளிக்கவும். 

இங்ஙனம்,

அஞ்சல்துறை கண்காணிப்பாளர்

***

ஆவணம் 3 

அஞ்சல்துறை கண்காணிப்பாளர் மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்து எனக்கு எழுதிய கடிதம். 

ஆவணம் 4

விசாரணைப் பிரிவு அலுவலகம் திருச்சியிலிருந்து அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பிய மின்னஞ்சல்

அனுப்புநர்

விசாரணைப் பிரிவு மின்னஞ்சல்

பெறுநர்

அஞ்சல்துறை கண்காணிப்பாளர் மின்னஞ்சல்

ஐயா,

சி.பி.கி.ராம்.ஸ் புகார் எண் ***** ஐ க் காணவும். 

இந்த விஷயம் தொடர்பாக உரிய அதிகாரி பதினைந்து நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். 

(1) புகார் கூறப்பட்ட ஊழியர்கள் உடனடியாக தற்போது பணி புரியும் தலைமை அலுவலகத்திலிருந்து பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் தற்போது பணி புரியும் மண்டலத்துக்குள் பணி இடமாற்றம் செய்யப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவும். 

(2) துறைத்தலைவர் பிழை செய்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இங்ஙனம்,

துணை இயக்குநர் ( விசாரணைப் பிரிவு)

ஆவணம் 5

அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளர் அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு அளித்த விசாரணை அறிக்கை

**.**.**** அன்று திரு. பிரபு 1215 மணியளவில் ***** தலைமை அலுவலகத்துக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் மின்னணு பண பரிமாற்றம் செய்ய வருகை புரிந்துள்ளார். படிவத்தை அளித்து ஒப்புகைச்சீட்டை கோரியுள்ளார். சாளரத்தின் எழுத்தர் மாலை 5 மணிக்கு வந்து ஒப்புகைச்சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும் ஒப்புகைச்சீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை ; தேவையெனில் துணை போஸ்ட் மாஸ்டரைக் காணவும் என்றும் கூறியுள்ளார். துணை போஸ்ட் மாஸ்டரும் ஒரே பதிலைக் கூறியதால் அப்போது அங்கிருந்து அகன்று மதியம் 1515 மணியளவில் அலுவலகம் வந்து ஒப்புகைச்சீட்டை பெற்று சென்றுள்ளார். மேலும் இது குறித்து (1) **** , (2) **** ஆகிய இரு ஊழியர்கள் மீதும் சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் அளித்துள்ளார். இவற்றை என் முன்னிலும் வாக்குமூலமாக அளித்துள்ளார். 

சாளர எழுத்தர் ***** அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அன்று இணைய தளத்தில் சில சிக்கல்கள் இருந்ததால் விண்ணப்பதாரர் கணக்கில் பணம் இருந்ததா என்பதையும் அவரது கையொப்பத்தையும் சரிபார்க்க முடியவில்லை எனவே ஒப்புகைச்சீட்டு வழங்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். ஒப்புகைச்சீட்டு என்பது விண்ணப்பதாரர் சாளரத்தில் படிவம் வழங்கினார் என்பதற்கான அத்தாட்சி என்பதால் அது உடனடியாக வழங்கப்பட வேண்டும் மேலும் விண்ணப்பதாரர் ஒப்புகைச்சீட்டு வேண்டும் எனக் கோரிய பின் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் அனாவசியமான கால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளார். **** இணையதள சிக்கல் எனக் காரணம் கூறினாலும் மூன்று மணி நேரம் தாமதமாக ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டதை ஒப்புக் கொண்டு என் முன் வாக்குமூலமாக அளித்துள்ளார். 

துணை போஸ்ட் மாஸ்டர் **** அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இணைய தளத்தில் சில சிக்கல்கள் இருந்ததால் ஒப்புகைச்சீட்டை உடன் வழங்க முடியவில்லை என்று கூறி விண்ணப்பதாரரிடம் ஒப்புகைச்சீட்டை உடன் வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்று நான் கூறியதாக எனக்கு நினைவில்லை அவ்விதம் கூறியிருந்தால் அது தவறு அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது வாக்குமூலமும் என் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. 

விசாரணை முடிவு 

சாளர எழுத்தர் ஆர்.டி.ஜி.எஸ் விண்ணப்பப் படிவம் அளிக்கப்பட்டதும் உடன் ஒப்புகைச்சீட்டை வழங்கியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பம் அளித்தார் என்பதற்கான அத்தாட்சி அந்த ஒப்புகைச்சீட்டு என்பதால் அதனை உடன் அளித்திருக்க வேண்டும். அப்பணியின் மேற்பார்வையாளரும் ஒப்புகைச்சீட்டு விண்ணப்பதாரருக்கு உடன் அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். இவை நிகழவில்லை. அதுவே இந்த புகார் அளிக்கப்பட்டதற்கான காரணம். 

ஆவணம் 6

சாளர எழுத்தர் அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளரிடம் அளித்த வாக்குமூலம் :

எனது பெயர் *****.  நான் &&& அஞ்சல் அலுவலகத்தில் *** ஆக பணி புரிந்து வருகிறேன். திரு. *** என்பவர் கொடுத்த கம்ப்ளைண்டை படித்துப் பார்த்தேன். அதற்கான வாக்குமூலத்தைக் கீழ்க்கண்டவாறு தருகிறேன். 

நெட்வொர்க் இஸ்யூவால் அவரது அக்கவுண்ட் பேலன்ஸ் செக் செய்ய முடியவில்லை. நெட்வொர்க் கிடைக்காததால் என்னால் பேலன்ஸ் செக் செய்ய முடியாததால் என்னால் அவருக்கு அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுக்க முடியவில்லை. அதன் பிறகு அவருக்கு நெட்வொர்க் கிடைத்த பிறகு டிரான்ஸாக்‌ஷன் செய்து கொடுக்கப்பட்டது.

அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளர் எழுத்துபூர்வமாக எழுப்பிய வினா : வினா 1 : நெட்வொர்க் கிடைக்காததற்கும் அக்னாலெட்ஜ்மெண்ட் வழங்காததற்கும் என்ன சம்மந்தம் என்று தெளிவுபடுத்தவும். 

சாளர எழுத்தர் அளித்த பதில் : அவர் அக்கவுண்டில் பேலன்ஸ் இருக்கா இல்லையானு தெரியவில்லை. அதனால் அக்னாலெட்ஜ்மெண்ட் தர இயலவில்லை. 

துணை கண்காணிப்பாளர் எழுத்துபூர்வமாக எழுப்பிய வினா (2) : 

அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுப்பதற்கு மேற்படி அக்கவுண்டில் பேலன்ஸ் சரிபார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதா என தெளிவுபடுத்தவும். It is just an acknowledgement to be given to the depositor for receiving the application. அதை ஏன் டெபாசிட்டருக்கு வழங்காமல் தாமதம் செய்தீர்கள் என்று கூறவும். 

சாளர எழுத்தர் அளித்த பதில் : 

அக்கவுண்ட் பேலன்ஸ் இருக்கானு செக் செய்த பிறகு சிக்னேச்சர் செக் செய்த பிறகு அக்னாலெட்ஜ்மெண்ட் தர தாமதம் ஆனது. அவரது பேலன்ஸ் , சிக்னேச்சர் நெட்வொர்க் கிடைக்கப் பெறாததால் என்னால் செக் செய்ய இயலவில்லை. அதனால் என்னால் அக்னாலெட்ஜ்மெண்ட் தர இயலவில்லை. 

துணை கண்காணிப்பாளர் எழுத்துபூர்வமாக எழுப்பிய வினா ( 3) : 

Acknowledgement is just to acknowledge the receipt of application from customer . அப்படியிருக்க உடன் அக்னாலெட்ஜ்மெண்ட் சிலிப் கொடுக்காமல் கஸ்டமர்க்கு தாமதம் ஏற்படுத்தியது சரியா? 

நெட்வொர்க் இஷ்யூவால் என்னால் கஸ்டமர்-க்கு அக்னாலெட்ஜ்மெண்ட் தர இயலவில்லை. கஸ்டமருக்கு அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுக்காமல் தாமதம் ஏற்படுத்தியது தவறு. இனி வரும் காலங்களில் இத்தகைய தவறு வராமல் பார்த்துக் கொள்கிறேன். 

ஆவணம் 7

துணை போஸ்ட் மாஸ்டர் அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் அளித்த எழுத்துபூர்வ வாக்குமூலம்

எனது பெயர் *****. &&&&& அலுவலகத்தில் பணி புரிகிறேன். திரு. *** அளித்த புகாரை தற்போது படித்துப் பார்த்தேன். அது தொடர்பாக எனது எழுத்துபூர்வமான விளக்கத்தைக் கீழ்க்கண்டவாறு அளிக்கிறேன். 

திரு. *** என்பவர் ஆர்.டி.ஜி.எஸ் செய்வதற்கு அக்னாலெட்ஜ்மெண்ட் கேட்டார்கள். நெட்வொர்க் கிடைக்காததால் அவருடைய கணக்கில் போதிய பணம் இருப்பு இருக்கிறதா என்பதை சரிபார்க்க முடியவில்லை. அதனால் அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுப்பதற்கு நேரம் ஆகும் என சாளர எழுத்தர் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து நெட்வொர்க் கிடைத்தவுடன் ஆர்.டி.ஜி.எஸ் செய்து எனக்கு வெரிஃபிகேஷன் செய்ய வந்தது. எனக்கும் நெட்வொர்க் கிடைக்காததால் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னேன். அக்னாலெட்ஜ் உடனே வேண்டும் யூ.டி.ஆர் எண்ணுடன் என்று கேட்டதால் எனது வெரிஃபிகேஷன்     முடிந்து தான் தர இயலும் என்று சொன்னேன். அவர் கொடுத்த ஆர்.டி.ஜி.எஸ் வெற்றிகரமாக முடிந்து விட்டது என்று சொன்னால் அவர் வேலையும் முடிந்து விட்டது என்ற நம்பிக்கை ஏற்படும் என்ற நோக்கத்தில் அவ்வாறு செய்தேன். அக்னாலெட்ஜ்மெண்ட் உடன் கொடுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். அவ்வாறு சொன்னதாக எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அப்படி நான் சொல்லியிருந்தால் அந்த தவறுக்கு நான் வருந்துகிறேன். அவருக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் வாடிக்கையாளர் கவுண்டருக்கு வந்தால் எந்த தவறும் நிகழாமல் நடந்து கொள்கிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 

துணை கண்காணிப்பாளர் எழுப்பியிருக்கும் வினா (1):

Customer counter ல் application வழங்கியதற்கு ஆதாரமாக  acknowledgement கேட்டுள்ளார்.. Network issueவிற்காக ஒப்புகைச்சீட்டு வழங்குவதற்கு தாமதப்படுத்தியது சரியா என விளக்கம் தரவும். 

நெட்வொர்க் கிடைத்தால் தான் அவருடைய கணக்கில் போதுமான தொகை இருக்கிறதா என்பதை சரிபார்த்து அதன் பிறகுதான் அவருக்கு அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுக்கனும். அவர் கொடுக்கும் ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்த பிறகு அக். கொடுப்பது சரியாக இருக்கும். போதுமான தொகை இல்லை என்றால் உடனே திருப்பிக் கொடுத்து விடலாம். 

துணை கண்காணிப்பாளர் எழுப்பியிருக்கும் வினா (2) 

Acknowledgement is given to customer in token of having received the application from him . அதனை உடன் வழங்காமல் தாமதப்படுத்தியது சரியா என்பதை விளக்கவும்.ஒருவேளை மேற்கூறிய காரணங்களால் டிரான்ஸாக்‌ஷன் நடைபெறாமல் போயிருந்தால் கஸ்டமர் ஆஃபிஸை நாடியிருப்பார். உடன் அக். கொடுத்திருந்தால் கஸ்டமர்க்கு நேர விரயம் ஏற்பட்டிருக்காது அல்லவா ? 

அது ஒரு டோக்கன் என நினைத்தால் அதனால் அந்த டிரான்ஸாக்‌ஷன் நடைபெறாமல் போயிருந்தால் அதனால் ஏற்படும் இழப்பு எங்களைப் பாதிக்காது என்றால் எதையும் சரிபார்க்காமல் அக். உடனடியாகக் கொடுப்பது சரிதான். நான் செய்தது தவறுதான். 

*****

தொகுத்துக் கொள்ளுதல் 

எனது சித்தரிப்புகளிலிருந்தும் ஆவணங்களிலிருந்தும் வாசகர்கள் நிகழ்ந்ததை அதன் விளைவுகளை யூகிக்க முடியும். ஓர் எளிய வாடிக்கையாளனாக நான் அங்கே சென்றேன். படிவம் அளித்தேன். படிவம் பெற்றுக் கொண்டதற்கு ஒரு ஒப்புகைச்சீட்டை வழங்குவது என சில வினாடிகள் மட்டுமே தேவைப்படும் செயல். அது பல மணி நேரங்களுக்குத் தாமதப்படுத்தப்பட்டது. அப்போது நிகழ்ந்ததைத் தெரிவித்து அந்த அலுவலகத்துக்குப் புகார் அனுப்பினேன். அது பொதுவான புகார். எந்த ஊழியரின் பெயரையும் குறிப்பிடவில்லை. உயர் அலுவலகம் எச்சரிக்கை தந்திருக்கும். அதன் படி நடந்து கொண்டிருக்கலாம். ஒரு மாதம் கழித்து மீண்டும் அங்கே செல்கிறேன். முன்னர் நடந்ததை விட இன்னும் மோசமாக நடந்தது. படிவத்துக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்று கூறப்பட்டது. ஊழியர்களின் பெயரைக் குறிப்பிட்டு சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் அளித்தேன். அதன் பின்னர் பல செயல்கள் நடந்துள்ளன. பல ஆவணங்கள் உருவாகியுள்ளன. ஊழியர்கள் ஏன் ஒரு எளிய விஷயத்தை இத்தனை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள் என்பது ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம். மத்திய தகவல் ஆணையத்திடம் எனது சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் முழுக் கோப்பையும் அளிக்க இரண்டாம் மேல்முறையீடு செய்துள்ளேன். அந்த ஆவணங்கள் முழுமையாகக் கிடைத்தால் என் புகாரின் பேரில் ஊழியர்கள்  மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவரும். 


சி.பி.கி.ராம்.ஸ் இணையதளம் : https://pgportal.gov.in/