Monday, 21 July 2025

சமயம் பண்பாடு அரசு

நேற்று எனது நண்பர் ஒருவருடன் ஒரு விஷயம் குறித்து சிறு விவாதம் எழுந்தது. எனது நண்பரின் நண்பர் முன்வைத்த ஒரு பார்வையைக் குறித்து எங்களுக்குள் நிகழ்ந்த விவாதம் அது. அதாவது, எனது நண்பரின் நண்பர் முன்வைத்த ஒரு பார்வை என்னவெனில் அரசு என்னும் அமைப்பும் சமயம் என்னும் அமைப்பும் தனித்தனியே இருக்க வேண்டும். அரசின் இயங்குமுறையில் சமயம் இருக்கக்கூடாது ; சமயத்தின் இயங்குமுறையில் அரசு தலையிடக்கூடாது. பரவலாக ஒலிக்கும் இந்த அபிப்ராயம் மேற்பார்வைக்கு மிகச் சிறந்த ஒன்றெனத் தோற்றம் தரும் ; ஆனால் இதனை சிறந்த அபிப்ராயமாக கொள்ள முடியாமைக்குக் காரணம் இது அரசு சமயம் ஆகிய விஷயங்களை மிக மேம்போக்காக அணுகுகிறது ; புரிந்து கொள்கிறது என்பதே.  

நான் இந்திய நாட்டைச் சேர்ந்தவன். இந்த நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லா சமயங்களையும் வழிபாட்டு முறைகளையும் இறைவனை நோக்கிச் செல்லும் மார்க்கங்களாகக் கருதி அவற்றை சமமாகக் காணும் தன்மை என்பது உண்டு. இதனை வேதகாலத்திலிருந்தே நாம் காண முடியும். இதற்கான ஆதாரங்கள் வேதங்களிலேயே உள்ளன. வேதங்கள் என்பவை வெவ்வேறு விதமான குரல்களின் பிராத்தனைகளின் பார்வைகளின் தொகுப்பே. வேதம் நம் நாட்டில் உயிர்ப்புடன் இருக்கிறது. எனினும் வேதத்தில் குறிப்பிடப்படும் சில தெய்வங்களின் வழிபாடு இன்று வழக்கத்தில் இல்லை. இந்திர வழிபாடும், வருணனின் வழிபாடும் இன்று இல்லை. இஷ்ட தெய்வம் என்னும் படிமம் உலகிலேயே இருக்கக் கூடிய ஒரே இடம் நம் நாடே. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாண்டவர்கள் 5 பேரில் பீமன் ஆஞ்சனேயரை வழிபடுபவனாகவும் அர்ஜூனன் கிராத சிவனை வழிபடுபவனாகவும் சகாதேவன் பிரபஞ்சப் பேரிருப்பை தியானிக்கும் இயல்பு கொண்டவனாகவும் இருப்பதைக் காண முடியும். மகாபாரத காலத்திலேயே கிருஷ்ணனின் உறவினரான நேமிநாதர் சமண தீர்த்தங்கராக இருந்திருக்கிறார். இந்த அடிப்படைப் புரிதலிலிருந்து நாம் சமகாலம் குறித்த புரிதல்களை அடைவது இந்த விஷயங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும். 

உலக வரலாற்றிலிருந்து நாட்டின் வரலாற்றிலிருந்து பல விஷயங்களை எடுத்துக் காட்ட முடியும். எனினும் இந்தந்த கோணங்களில் சிந்தித்துப் பார்க்கலாம் என்பதற்கு சில விஷயங்களை மட்டும் கோடிட்டுக் காட்டுகிறேன். 

1. வித்யாரண்யர் ஒரு துறவி. மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் தென்னிந்தியா பேரிருளில் மூழ்கியிருந்தது. அப்போது அவர் ஹரிஹரர் , புக்கர் ஆகிய இரு சகோதரர்களிடம் நாடும் சமூகமும் பண்பாடும் இருள் சூழ்ந்து கிடக்கும் நிலையைச் சொல்லி அதனை மீட்டெடுப்பது சமூகக் கடமை என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். அவரைத் தங்கள் ஆசானாக ஏற்று ஹரிஹர புக்க சகோதரர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தை அமைக்கிறார்கள். அலை அலையென நம் நாட்டைத் தாக்கிய பல ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தென்னிந்தியாவையும் அதன் சமூகங்களையும் காத்தது விஜயநகர சாம்ராஜ்யமே என்பதை தென்னிந்தியாவை முழுக்க சுற்றிப் பார்த்தவர்கள் அறிவார்கள். 

2. குரு நானக் தோற்றுவித்த சீக்கிய சமயம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் முன்வைப்பது. மொகலாய ஆட்சியாளர்கள் அந்த சமூகத்தினரை தொடர்ந்து துன்புறுத்தினர். குரு கோவிந்த் சிங் தனது சமயத்தை தற்காத்துக் கொள்ள அதனை ஒரு போர்ச் சமூகமாக மாற்றினார். கேசம், கங்கணம். குறுவாள், நீள்வாள் ஆகியவை ஒரு சீக்கியன் உடலின் அங்கங்களைப் போல இணைந்தேயிருக்க வேண்டும் என்று கூறினார். குரு கோவிந்த் சிங் உருவாக்கிய போர் சமூகமான ‘’கால்சா’’ வே நம் நாட்டை பல நூற்றாண்டுகளுக்குக் காத்தது. இன்றும் நம் ராணுவத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்து நம் நாட்டைக் காப்பவர்கள் சீக்கியர்கள். அதன் துவக்கம் குரு கோவிந்த் சிங். 

3. லோக மான்ய திலகர், மதன் மோகன் மாளவியா, மகாத்மா காந்தி ஆகிய பல காங்கிரஸ் தலைவர்கள் சமூகங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்க உதவும் வழிகளில் சமயம் முக்கியமானது என்பதை உணர்ந்திருந்தார்கள். மகாத்மா காந்தி ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் தினமும் பிராத்தனையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். தன் வாழ்நாளின் கடைசி தினம் வரை அவர் தொடர்ந்து பிராத்தனையில் ஈடுபட்டார். 

நான் கூறியிருப்பவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இன்னும் ஏராளமான தரவுகளுடன் இந்த விஷயத்தை மேலும் நுணுக்கமாக எடுத்துரைக்க முடியும். இந்த விஷயம் குறித்து யோசிக்கையில் உலக மக்கள் தொகை குறித்த இணையதளம் ஒன்றினைப் பார்வையிட்டேன். அதில் இருந்த விபரங்களை நண்பர் தனித்தனியாக அறிந்திருப்பார் ; அவற்றைத் தொகுத்துப் பார்ப்பார் என்றால் அவருக்கு மேலும் சில விஷயங்கள் புரியக் கூடும். 

மக்கள் தொகை இணைய தளத்தில் எந்தெந்த நாடுகள் உலகில் இன்றும் சர்வாதிகார நாடுகளாக இருக்கின்றன என்பதைக் காட்டியது. உலகில் இன்றும் சர்வாதிகார நாடுகளாக இருப்பவை : ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, சிரியா, ஏமன், ஓமன்.

நம் நாட்டை மன்னர்கள் ஆண்ட போது கூட ஒவ்வொரு கிராமமும் சுயசார்புடன் ஜனநாயக அடிப்படையில் இயங்கியிருக்கிறது. இன்னும் உலகின் ஒரு பாதி ஜனநாயகத்தின் கிரணங்களே விழாமல் இருக்கிறதே ? அதைக் குறித்து அல்லவா நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டும்?