நீங்கள் எந்த அரசு அலுவலகத்துக்காவது சென்றிருக்கிறீர்களா? அடிக்கடி சென்றிருக்கிறீர்களா? அடிக்கடி செல்ல நேரிடும் அரசு அலுவலகம் என்னவாக இருக்கும்? அரசு மருத்துவமனை கூட்டமாக இருக்கும்.வருவாய்த்துறை அலுவலகம் நிறைய மக்களால் நிறைந்திருக்கும். இப்போது போக்குவரத்துத்துறை அலுவலகங்களில் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்யவும் வாகன ஓட்டுநர் உரிமம் பெறவும் அதிக அளவில் மக்கள் செல்கின்றனர். வங்கிகளுக்கு மக்கள் செல்கின்றனர். ரயில் நிலையத்துக்கும் அஞ்சல் அலுவலகத்துக்கும் மக்கள் அதிக அளவில் செல்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளின் ஊழியர்கள் பொதுமக்களை நடத்தும் விதம் திருப்திகரமாக இல்லை என்பதே பொதுவான பரவலான அவதானம். அரசு மருத்துவமனைகளுக்கு செயல்பாட்டின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்க வேண்டும் எனில் 100க்கு 10 மதிப்பெண் அளிக்கலாம். வருவாய்த்துறையின் செயல்பாடுகளுக்கு 100க்கு 1 மதிப்பெண் அளிக்கலாம். போக்குவரத்து துறைக்கும் 1/100 என்ற மதிப்பெண்ணே அளிக்க இயலும். வங்கிகள் அளிக்கும் வாடிக்கையாளர் சேவைக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் எனில் நூற்றுக்கு 25 மதிப்பெண் அளிக்க இயலும். அஞ்சல் அலுவலகங்களின் செயல்பாட்டுக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண்ணும் ரயில்வே செயல்பாட்டுக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண்ணும் அளிக்க இயலும். எனது இந்த மதிப்பிடலை தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் பரிசீலித்துப் பார்த்தால் எவரும் சரியானது என்றே உணர்வார்கள். சாமானிய பொதுமக்கள் இந்த அரசுத்துறைகளைத் தாண்டி பெரிதாக வேறு எந்த அரசு அலுவலகத்துக்கும் செல்வது இல்லை ; செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வணிகர்களுடன் தொடர்புடைய அரசு அலுவலகங்கள் உள்ளன. விவசாயிகளுடன் தொடர்புடைய அலுவலகங்கள் உள்ளன. அவற்றுக்கு செல்பவர்களின் அனுபவங்களும் உவப்பானவை அல்ல. இந்த மதிப்பிடலில் 100க்கு ஐம்பது மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி அளவீடு என்று கொண்டால் அரசு மருத்துவமனைகளின் இயக்கத்தை மேலாண்மை செய்யும் பொது சுகாதாரத் துறை, நில ஆவணங்களை பராமரிக்கும் சான்றளிக்கும் வருவாய்த்துறை, வாகன சான்றிதழ்களை வழங்கும் போக்குவரத்துத் துறை ஆகியவை 50க்கு குறைவான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடையாமல் உள்ளன. ரயில்வேயும் அஞ்சல்துறையும் குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த பின்னணியில் நான் ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்க்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மீது பொதுமக்களுக்கு ஏன் பிரியம் இருக்கிறது ? இதனை இரண்டு விதமாகக் காண முடியும். உலகின் பல இடங்களில் உள்ள குகை ஓவியங்களைக் காணும் போது அதில் பறவை இறகை அணிகலனாகச் சூடிய மனிதக் கூட்டத்தின் தலைவனின் ஓவியங்கள் அதில் இருக்கின்றன. அப்போது மனிதர்களுக்குள் மொழி உருவாகியிருக்கவில்லை. எழுத்து உருவாகவில்லை. இந்நிலையில் மானுடம் இருந்த போது கூட கூட்டத்தின் தலைவன் மீது அவர்களுக்கு ஒரு ஆர்வம் இருந்திருக்கிறது. மானுடம் அதன் பின் எவ்வளவோ பெரிய அளவில் வளர்ந்து வந்திருக்கிறது. மொழி உருவானது. எழுத்து உருவானது. விவசாயம் செய்யத் தொடங்கினர். உலோகங்கள் கண்டுபிடித்தனர். அறிவுத்துறைகள் உருவாயின. பண்ட மாற்றம் நடந்தது. செல்வம் என ஒன்று உருவானது. இன்னும் எத்தனை எத்தனையோ மாற்றங்கள் ; வளர்ச்சிகள். இப்போதும் மனிதர்களை வழிநடத்தும் ஒருவர் மீது மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மன்னராட்சியாக இருந்தாலும் ஜனநாயகமாக இருந்தாலும் சரி எந்த மன்னராலும் மக்கள் பிரதிநிதியாலும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டிட முடியாது. அவர்கள் எண்ணிக்கையில் சிறிய ஒரு குழுவையே இயக்க முடியும். வரலாறெங்கும் இவ்விதமே நிகழ்கிறது. இதற்கு எவரும் விதிவிலக்கு இல்லை.
நாட்டின் ஜனநாயகத்தில் அரசாங்கம் மக்களுக்கு அளிக்கும் சேவைகள் போதுமானதாக இல்லை என்பதை அரசுத்துறைகளுக்கு நாம் அளித்த மதிப்பெண்கள் மூலம் பார்த்தோம். மக்கள் அரசின் மீது திருப்தியாக இல்லை என்றாலும் ஏன் உயர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மீது பிரியம் வைக்கிறார்கள் என்பது ஆழமாக யோசிக்க வேண்டிய விஷயம்.
பொதுமக்கள் அதிகார வர்க்கத்தையும் அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜனநாயக மக்கள் பிரதிநிதியையும் நுட்பமாகப் பிரித்து புரிந்து வைத்திருக்கிறார்கள். தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜனநாயக மக்கள் பிரதிநிதியை தங்களில் ஒருவராக உணர்கிறார்கள். அந்த உணர்வு கண்ணுக்குத் தெரியாதது. ஆனால் மிகப் பெரியது. ஜனநாயக அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க முடியாது ; அது சாத்தியம் அல்ல. எப்போதாவது அவரைக் காண வாய்ப்பு கிடைக்கும் போது மணிக்கணக்கில் காத்திருந்து உயர் பொறுப்பில் இருக்கும் ஜனநாயக மக்கள் பிரதிநிதியைக் காண்கிறார்கள். கையசைத்து தங்கள் மகிழ்ச்சியைப் பிரியத்தை தெரிவிக்கின்றனர். அந்த மகிழ்ச்சியும் பிரியமும் உண்மையானது. ஜனநாயகத்திற்கு முக்கியமானது. சாமானியன் ஜனநாயகம் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடையாளம் அது.