Friday, 1 August 2025

திருப்தி

எங்கள் பிரதேசத்தில் உள்ள பெரிய பண்ணையார் ஒருவரைக் காண ஐ டி கம்பெனியில் பணி புரியும் தேக்கு பண்ணை நண்பருடன் சென்றேன். அவர் 50 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். இளைஞர். இயற்கை விவசாயத்தில் தீவிரமான ஆர்வம் கொண்டு பல வருடங்களாக இயற்கை விவசாய பயிற்சி முகாம்களை அவரது கிராமத்தில் ஒருங்கிணைத்திருக்கிறார். அவ்வாறான முகாம் ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன். பண்ணையாரான இளைஞர் முகாமுக்கான பணிகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தாரே தவிர மேடையில் தான் இருக்க வேண்டும் என்பதையோ தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமோ இன்றி கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரை அவருடைய இந்த மேன்மையான குணத்துடன் நினைவில் வைத்துக் கொண்டேன். 

நண்பருக்கு பாரம்பர்ய ரக நெல் தேவைப்பட்டது. விதைநெல்லுக்காக. அதை அவரிடமிருந்து பெறுவதற்காக சென்றார். என்னையும் கூட்டிக் கொண்டு சென்றார். அழகான வழவழப்பான அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். சில வினாடிகளில் பண்ணையார் வந்தார். 

ஐ டி கம்பெனி நண்பர் தனது வயல் 3 ஏக்கரில் முற்றிலும் தேக்கு மரம் வளர்ப்பதைக் கூறி அதற்கான தூண்டுதலாக நான் இருந்ததாகக் கூறினார். ஐ டி கம்பெனி நண்பர் பண்ணையார் வயலில் ஒரு ஏக்கர் அளவில் தேக்கு பயிரிடுமாறு கேட்டுக் கொண்டார். 

பண்ணையார் அதற்கு ‘’50 ஏக்கர்லயும் இரண்டு போகம் பாரம்பர்ய நெல் பயிர் செய்யறோம். ஏக்கருக்கு 25,000 லாபம் கிடைக்குது. இதுவே போதும். இந்த வேலையை வாழ்க்கை முழுக்க ஒழுங்கா பாத்தா போதும் ‘’என்றார். 

யக்‌ஷப் பிரசனத்தில் யக்‌ஷன் ‘’எதை மிஞ்சிய செல்வம் இல்லை ? என்று கேட்க யுதிர்ஷ்ட்ரன் ‘’திருப்தியை மிஞ்சிய செல்வம் இல்லை’’ என்கிறார்.