Tuesday, 19 August 2025

நாடு முன்னேறியிருக்கிறதா?

இன்று என்னுடைய தொழில் நிமித்தமாக ஒருவரைச் சந்திக்கச் சென்றேன். ஊரிலிருந்து மேற்கே 10 கி.மீ சென்று பின் அங்கிருந்து வடக்கே திரும்பி 10 கி.மீ சென்று அங்கேயிருந்து கிழக்கே திரும்பி மேலும் 10 கி.மீ சென்று அவரைச் சந்தித்து விட்டு அங்கிருந்து 10 கி.மீ தெற்கே வந்து புறப்பட்ட இடமான எனது ஊரை அடைந்தேன். 40 கி.மீ சுற்றளவு கொண்ட சிறு பயணம். சந்திக்கச் சென்றவர் ஊருக்கு வடமேற்கே 20 கி.மீ தூரத்தில் கடை வைத்திருக்கிறார். கடையில் அவர் இன்று இருந்திருந்தால் சென்ற மார்க்கத்திலேயே மீண்டும் திரும்பி வந்திருப்பேன். கடையில் இல்லாததால் அவரைக் காண வீட்டுக்குச் சென்றிருந்தேன். இந்த பயணம் முழுக்க முழுக்க சிறு கிராமங்களினூடாக நிகழ்ந்தது. நான் என்னுடைய ஐந்து வயதிலிருந்து கிராமத்துச் சாலைகளைக் கண்டு வருகிறேன். என்னுடைய இளம் வயதில் அவை எப்படி இருக்கும் என நான் அறிவேன். இன்று அனைத்து சாலைகளும் மிகவும் சிறப்பாக இருந்தன. இப்போது எல்லா சாலைகளும் சிறப்பாக இருக்கின்றன. சிறு சிறு கிராமங்களில் கூட ஹார்டுவேர் கடைகள் இருக்கின்றன என்பதை கவனித்தேன். கிராமங்களில் பெரிய பங்களா அளவிலான வீடுகள் கட்டப்படுகின்றன என்பதைக் கண்டேன். அது ஒரு சிறு கிராமம். அங்கே இரு சக்கர வாகன சீட் கவர் கடை ஒன்று பெரிய அளவில் இருப்பதைக் கண்டேன். கிராமங்களில் எல்லா வீடுகளிலும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. வீட்டின் ஆணுக்கு ஒரு வாகனம். வீட்டின் பெண்ணுக்கு ஒரு வாகனம். ஒரு கிராமத்தில் 500 வீடுகள் இருந்தால் அங்கே குறைந்தது 800 இரு சக்கர வாகனமாவது இருக்கும். நான் பார்த்த கிராமம் 20 கிராமங்களுக்கு மையம். அவ்வாறெனில் அந்த பிராந்தியத்தில் 16,000 இரு சக்கர வாகனமாவது இருக்கும். அந்த கிராமத்தில் அந்த கடையை அமைக்க வேண்டும் எனத் தோன்றியது மிக நல்ல யோசனையே. அவருக்கு அந்த கடை மூலம் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இது மிகக் குறைந்தபட்ச கணக்கீடு. இன்னும் அதிகமாக கூட வருமானம் கிடைக்கும். சந்திக்கச் சென்றவரிடம் அவரது சொத்து ஒன்றை அடமானமாக வைத்து வங்கிக் கடன் பெறுமாறு ஒரு யோசனை சொன்னேன். இது வரை வங்கிக் கடன் பெற்றதில்லை என்பதால் புதிதாக அந்த பழக்கத்தை உருவாக்க வேண்டாம் என நினைக்கிறேன் என்று அவர் கூறினார். சூழலைப் பொறுத்து பின்னர் முடிவெடுக்கலாம் என ஒத்துக் கொண்டேன். ஊருக்குத் திரும்பும் வழியில் ஒரு சலூனில் முகச் சவரம் செய்து கொண்டேன். அந்த கடையைத் தொடங்கியிருப்பவர் ஓர் இளைஞர். கடை துவங்கி இரண்டு மாதம் ஆகிறது என்று கூறினார். தேவை ஏதும் இருப்பின் வங்கியை அணுகி கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என அவரிடம் சொன்னேன். வங்கியில் கடன் வாங்கி பழக்கம் இல்லை ; எனவே அதனை புதிதாக உருவாக்க வேண்டாம் என நினைக்கிறேன் என அந்த சலூன்காரர் சொன்னார். நான் முதலில் சந்திக்கச் சென்றவர் பெரும் செல்வந்தர். அவரும் இதையே சொன்னார். சலூன்கடைக்காரர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவரும் அதையே சொன்னார். அந்த பிராந்தியத்தின் வங்கி அதிகாரிகள் இவர்களைப் போன்றவர்களைக் கண்டடைய வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இரு தரப்புக்கும் பரஸ்பர பயன் விளையும். நல்ல தரமான சாலைகள், நிறைய புதிய தொழில்கள், நிறைய முயற்சிகள் ஆகியவற்றைக் கண்டது நாடு முன்னேறியிருக்கிறதா என்னும் கேள்விக்க்கான பதில் நேர்மறையானதாகவே இருக்கிறது என்னும் நம்பிக்கையை அளித்தது.