நூல் : புரட்சித் துறவி ஆசிரியர் : ரா. கி. ரங்கராஜன் பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம் மயிலாப்பூர் சென்னை.
மேரி கெரெல்லி ‘’தி மாஸ்டர் கிருஸ்டியன்’’ என எழுதிய நாவலை ரா.கி.ரங்கராஜன் தமிழில் புரட்சித் துறவி என எழுதியிருக்கிறார். ஐரோப்பாவின் அரசியல் மோதல்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கும் நிலையில் அங்கே ‘’சர்ச்’’ எனப்படும் அமைப்பு அரசாங்கங்களை விட வலிமையான அமைப்பாக உருவெடுத்து நிற்பது ஐரோப்பிய மற்றும் உலக நாடுகளையும் அதன் பொதுமக்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. இந்நிலையில் மதம் உருவாக்கும் அழுத்தத்துக்கு ஐரோப்பிய சமூகம் ஆற்றும் எதிர்வினை ஐரோப்பாவின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வில் பிரதிபலிக்கிறது. இந்த சூழலைப் பின்புலமாகக் கொண்டு குறியீட்டு ரீதியிலான கதாபாத்திரங்களால் மானுட வாழ்க்கையை இயக்கும் விசைகளையும் மானுடர்களை வியாபிக்கும் உணர்வுகளையும் மானுடர்களின் ஆன்மீகத் தேடலையும் சித்தரிக்கும் நாவல் ‘’புரட்சித் துறவி’’.