பள்ளி வாகன ஓட்டுநர்கள் 40 பேர் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தும் விதமாக என்னென்ன தொழில்களை மேலும் பரிந்துரைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். மனதில் சில விஷயங்கள் தோன்றின. அவற்றைப் பட்டியலிட்டுள்ளேன்.
1. அகர்பத்தி தயாரித்தல்
ஒரு வகுப்பறைக்குள் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்யக்கூடிய பொருள். ஓட்டுநர்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வதே நோக்கம் என்பதால் இந்த முயற்சிக்கு பெரும் முதலீடோ பெரும் லாபமோ எதிர்பார்க்கத் தேவையில்லை. மிகக் குறைந்த முதலீடு மட்டுமே தேவை. அதனை பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும். மிகக் குறைந்தபட்ச லாபம் கிடைத்தால் போதும். அதனை ஓட்டுநர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம். ஓட்டுநர்கள் பள்ளி அளித்த முதலீட்டை சில மாதங்களில் பள்ளிக்குத் திருப்பி அளித்திட வேண்டும்.
2. தேனீ வளர்த்தல்
பள்ளி அமைந்திருக்கும் கிராமம் முழுவதிலும் வருடத்தின் எல்லா நாட்களும் மலர்கள் மலரும் மலர் மரங்களை ஓட்டுநர்களைக் கொண்டு நடவேண்டும். அந்த ஊரே 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களூர் இருந்ததைப் போல் ஆகி விடும். மலர்ந்திருக்கும் மலர்களிலிருந்து தேன் சேகரிக்க பள்ளியின் ஒரு பகுதியில் ஓட்டுநர்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். ஊரும் பசுமையும் மலர்வும் கொண்டதாக ஆகும். ஓட்டுநர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.
3. மர பொம்மைகள் தயாரித்தல்
சீன நாட்டிலிருந்து கள்ளத்தனமாக நம் நாட்டுக்குக் கொண்டு வரப்படும் விளையாட்டுப் பொருட்களே நம் சந்தைகளில் அதிகம் இருக்கின்றன. இந்நிலையை மாற்ற விளையாட்டுப் பொருட்களை நாம் அதிகம் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. மர விளையாட்டுப் பொம்மைகள் தயாரிப்புக்கு ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளித்துப் பயன்படுத்தலாம்.
4. பஞ்சகவ்யா பொருட்கள்
பஞ்சகவ்யாவிலிருந்து சோப், ஷாம்பூ, ஹேண்ட் வாஷ், இயற்கை உரம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தயாரிப்பில் ஈடுபடலாம்.
5. கைகளால் தயாரிக்கப்படும் காகிதம்
துணிக்கழிவுகளிலிருந்து கைகளால் தயாரிக்கப்படும் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்விதமான காகிதம் தயாரித்து சகாயமான விலையில் பள்ளி மாணவர்களுக்கே விற்பனை செய்யலாம்.
6. பனங்கிழக்கு தயாரித்தல்
பனங்கிழக்கு தயாரித்தல் மிக எளிய செயல்முறை கொண்டது. ஊரெங்கும் இருக்கும் பனைமரங்களில் தினமும் பனம்பழம் கொட்டிக் கொண்டேயிருக்கிறது. அவற்றை சேகரித்து எடுத்து வர வேண்டும். 10 அடி நீளம் 10 அடி அகலம் ஒரு அடி உயரம் கொண்ட மணல் பரப்பை உருவாக்கி அதில் பனம்பழங்களை நட்டு வைத்து நீர் வார்க்க வேண்டும். பனங்கிழங்கு வேர் விடத் துவங்கும். கொஞ்ச நாட்களில் அவற்றை அகழ்ந்தெடுத்து உணவுப்பொருளாக விற்பனை செய்யலாம். புரதச்சத்து மிகுந்த இந்த உணவை இலங்கைவாசிகள் முக்கிய உணவாக உண்கின்றனர். நம் நாட்டிலும் விரும்பி உண்ணப்படுகிறது.
7. பிளம்பர் எலெக்ட்ரீஷியன் பயிற்சி
40 ஓட்டுநர்களுக்கும் பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பணிகளில் அடிப்படைப் பயிற்சி அளிக்கலாம். பள்ளிக்கு அருகில் இருக்கும் நகரில் காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள் செய்யும் விதமாக சிறு பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பணிகளை மேற்கொள்ளலாம்.