நமது நாடு நீண்ட கால போராட்டத்துக்குப் பின் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பிரிட்டிஷார் நம் நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகத் துண்டாடி பிரிவினையை நம் நாட்டின் மீது திணித்தனர். பிரிவினையையொட்டி நடந்த கலவரங்களில் இருபது லட்சத்திலிருந்து முப்பது லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய சமஸ்தானங்கள் தங்கள் விருப்பப்படி தனி நாடாக இருக்கலாம் அல்லது இந்தியாவுடன் இணையலாம் அல்லது பாகிஸ்தானுடன் இணையலாம் என்னும் வாய்ப்பு பிரிட்டிஷாரால் சமஸ்தானங்களுக்கு வழங்கப்பட்டது. பிரிவினைக் கலவரங்களின் கோர முகத்தைக் கண்ட சர்தார் வல்லபாய் படேல் இந்திய நாடெங்கும் விரவியிருந்த 543 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்க உறுதி பூண்டு அச்செயலை செம்மையாக செய்து கொண்டிருந்தார். காஷ்மீரைக் கைப்பற்ற விரும்பிய பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. எனினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 370-வது சட்டப் பிரிவு இந்திய அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.சபையின் தலையீட்டைக் கோரினார் நேரு. அது அந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது. காஷ்மீரில் தொடர்ந்து மத பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்தது பாகிஸ்தான். இப்போதும் ஊக்குவிக்கிறது. 1949ம் ஆண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 70 ஆண்டுகளுக்குப் பின் 2019ம் ஆண்டு நீக்கப்பட்டது.
இன்னொரு காஷ்மீர் ஆகி விடுமோ என்ற பதட்டத்தை உருவாக்கிய இன்னொரு சமஸ்தானம் ஹைதராபாத். இந்திய நாட்டின் மையப் பகுதிக்கு மிக அருகே அமைந்திருந்த அந்த சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்க ஹைதராபாத் நிஜாம் விரும்பினார். அங்கு வாழ்ந்த மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். தற்போது அசாசுதீன் ஒவைஸியின் தலைமையில் செயல்படும் ஏ.ஐ.எம்.ஐ.எம் என்னும் கட்சி அப்போது எம்.ஐ.எம் என்ற பெயரில் இயங்கி வந்தது. அக்கட்சியின் ரவுடிகள் ரஸாக்கர்கள் என அழைக்கப்பட்டார்கள். இந்த ரஸாக்கர்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தது ஹைதராபாத் நிஜாமின் அமைச்சர்களில் ஒருவரான காசிம் ரஸ்வி. பாகிஸ்தானின் ஏஜெண்டாக செயல்பட்ட ரஸ்வி ஹைதராபாத்திலும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டார். கிராமங்கள் கொளுத்தப்பட்டன. விளைநிலங்கள் எரிக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். ஹைதராபாத் சமஸ்தானத்தில் வாழ்ந்த அப்பாவி பொதுமக்களான ஹிந்துக்களை கொலை செய்யும் அச்செயலை சமயக் கடமை என ரஸாக்கர்களுக்குப் போதித்தார் காசிம் ரஸ்வி. நாள்தோறும் வன்முறை பெருகிக் கொண்டேயிருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் நேரு ஹைதராபாத்தை இன்னொரு காஷ்மீர் ஆக்கி விடுவாரோ எனக் கவலை கொள்ளத் துவங்கினர். அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஹைதராபாத் விவகாரம் குறித்து பெரும் கவலை கொண்டிருந்ததையும் தில்லியின் நேரு சர்க்காரை தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு ஹைதராபாத் நிலவரங்களை தெரிவித்து வந்ததையும் அவரது சரிதையான ‘’விவசாய முதலமைச்சர்’’ என்னும் நூல் தெரிவிக்கிறது. ரஸாக்கர்கள் நிகழ்த்திய வன்முறைகளின் பின்னணியில் எழுதப்பட்ட தமிழ் நாவல் அசோகமித்ரனின் ‘’பதினெட்டாவது அட்சக் கோடு’’.
நேரு வெளிநாடு சென்றிருந்த சமயத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் ‘’ஆபரேஷன் போலோ’’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஹைதராபாத்தை இந்தியாவ்டன் இணைத்தார். இருப்பினும் ரஸாக்கர்கள் நிகழ்த்திய வன்முறையின் இரத்தக் கறை இன்னும் மறக்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது.
தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன் கார்கே 1942ம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு ஏழு வயது இருந்த போது அதாவது 1949ம் ஆண்டு அவருடைய குடும்பம் ரஸாக்கர்களால் தாக்கப்பட்டது. அவருடைய அன்னையும் சகோதரியும் ரஸாக்கர்களால் தீ வைத்து உயிருடன் கொளுத்தப்பட்டனர். அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்தவர் மல்லிகார்ஜூன் கார்கே. மத பயங்கரவாதத்தின் கொடூர முகத்தை தன்னுடைய சிறு வயதிலேயே கண்டவர் கார்கே.